‘லைசன்ஸ்’ சங்கடம்' அம்பாறையில் நடக்கும் அவலம்! » Sri Lanka Muslim

‘லைசன்ஸ்’ சங்கடம்’ அம்பாறையில் நடக்கும் அவலம்!

IMG_20190908_095024

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சகுனம் கெட்ட ‘லைசன்ஸ்’ சங்கடம்
அம்பாறையில் நடக்கும் அவலம்!

 உரியவர்களின் கவனத்திற்கு….!!
================================================

வெளிப்பூச்சு அலங்காரங்கள் மாத்திரமே அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வெண்ணெய்யில் கொழுப்பு எடுக்கும் படலாங்களாக அரங்கேகின்றதே தவிர! தேவை எது? மக்கள் நலன் என்ன? அவற்றை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது! என்பதில் அர்த்தமற்ற தலைமைகளாகவே மாறிக் கொண்டு வருகின்றமை நவீன அறியாமையின் மூலோபாயமாகவும், ஏமாற்றுத் தந்திரமாகவும் துளிர்விடுகின்றது.

நம்மில் யாரும் சிந்திக்காத அவலங்கள் சில இடங்களில் சருகறுக்கின்றன. அதை தெளிவுக்காக வெளிப்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

அதாவது, அம்பாறையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுமதி பெற்ற தேசிய போக்குவரத்து மருத்தக நிறுவகத்தில் (மெடிகல் டெஸ்ட் செய்யும் இடம்) இடம்பெறும் அவல நிலையே இது! (குறிப்பிட்ட விமர்சனம் எனது தனிப்பட்ட விமர்சனமல்ல, இது பலரின் அவலக் குரல்!)

சாரதி அனுமதிப் பத்திரம் புதிதிதாக பெறுபவர்கள், மறுசீரமைப்பவர்கள், புதுப்பிப்பவர்கள் அனைவருக்கும் மருத்துவ அறிக்கை கட்டாயம். அதனைப் பெறுவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் தனியார் வைத்தியசாலைகளிலும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், குறிப்பிட்;ட சில வருடங்களாக ஒரு மாவட்டத்திற்கு ஒரு கிளை எனும் அடிப்படையிலேதான் இது அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பாதால் முற்றிலும் பாதிக்கப்படுபவர்கள் சாதரண மனிதர்கள் மாத்திரமே!

அதிகாலை 5 மணிக்கு முன்னரே வரிசை ‘கியூ’ ஆரம்பமாகிறது. அலுவலகம் மு.ப. 9 மணிக்கு திறக்கப்படுகின்றது. எப்படியும் 10 மணியளவிலேதான் பரிசோதனை ஆரம்பிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 300 இற்கு மேற்பட்டோர் வரிசையில் நிற்கின்றனர்.

இளைஞர்கள், வயோதிபர்கள், கர்ப்பிணிகள் என அனைவருக்கும் ஒரே வரிசை ஆண், பெண் என்ற பிரிவனையும் இல்லை. அலுப்பு வந்தால் இருப்பதற்கும் இடமில்லை. நின்ற நிலையில் நிர்ப்பந்தமான ஒரு அவதி! சிந்திக்கவே சிக்கலாகத்தான் உள்ளது.

சரி, இப்படி அவதியுற்று அதிகாலை முதல் முண்டியடித்து மூச்செடுத்து நின்றவர்களில் சுமார் 100 பேர் அளவிலேதான் பிற்பகல் வரை பரிசோதனை. மீதமுள்ள 200 இற்கும் மேற்பட்டோர் வெறுங்கையோடு வீடு திரும்பி மீண்டும் அடுத்த நாள் அதே ‘போலின்’….

‘100 ரூபாய் மெடிகலுக்கு 100 நாள் அலைச்சல் எனும் கதைதான் இது!’ தொழிலுக்கு செல்பவர்களுக்கு அவரவர் தொழில்களில் ‘லீவுக்கு மேல் லீவு’ எதனையும் கணக்கெடுக்காத அசமந்த போக்குடன் ஒரு அலுவலகம்.

கேட்டால் அவர்கள் பக்கம் நியாயத்தை அள்ளி வைப்பார்கள். நாட்டில் தொழிலில்லாமல் எத்தனையோ ஆயிரம் பேர் அலைகின்றனர். மக்களுக்கு வேகமாக சேவையாற்றும் வகையில் பல இடங்களிலும் குறித்த அலுவலகத்தின் பிராந்தியங்கள் அமைத்தால் என்ன?

அரசின் எத்தனையோ வேலைத் திட்டங்களில் திறனற்ற ஒரு திட்டமாவே இம் முறைமை விளங்குகின்றது. சாதாரணமாக 1 இலட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்திற்கும் ஒரு அலுவலகம்தான், 4 இலட்சம் மக்கள் கொண்ட மாவட்டத்திற்கும் ஒரு அலுவலகம்தான். இது நியாயமற்றது. இச் செயற்பாடு அறிவுபூர்வமற்ற அதிகாரத்தால் அடக்கி ஒடுக்கும் மடைமைத்தனமான செயற்பாடுதான்!

சாதாரணமாக பொத்துவில் பிரதேசத்தில் இருந்து அம்பாறைக்கு வருபவர்கள், தெஹியத்த கண்டியிலிருந்து அம்பாறைக்கு வருபவர்கள், மருதமுனையிலிருந்து வருவர்கள், கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர் என மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் நாளாந்தம் சுமார் 300 இற்கும் மேற்பட்டோர் வருகைதந்து நேரம் போதாமையினால் திருப்பியனுப்படுகின்றனர்.

இதை தட்டிக் கேட்க எந்த தலைமைத்துவங்களும் இல்லை, அரசியல்வாதிகளும் இல்லை, சமூகவாதிகள் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு இந் நிலைமை வருவதில்லை. அந்த உயர் அதிகாரிகள், வசதிபடைத்தோர், தொழிலதிபர்கள் யாருமே நிற்பதில்லை. சாதரண வருமானமுடைய மக்களே கால்கடுக்க காத்துநிற்கின்றனர்.

நாளுக்கு நாள் ஆயிரம் அபிவிருத்திகளுக்கு பெயர்சூட்டுகின்ற அரசியல்வாதிகள் இதனை கரிசனையில் எடுக்க வேண்டியது கடமையல்லவா? மக்கள் அவதியை நேரில் கான தகுந்த இடம் அதுதான். பெரும்பாலான இடங்களில் காத்திருப்பவர்கள் அமர்வதற்கு ஆசனங்களாவது இருக்கும்.

இங்கு ஆபத்திலும் இருக்கையில்லா அவலநிலை. இது இலங்கையின் பல மாவட்டங்களில் இருக்கும் இனம்புரியாத அவலம். இருந்தபோதிலும் நான் இங்கு சுட்டிக்காட்டுவது அம்பாறை மாவட்ட அலுவலகத்தை மாத்திரமே!

ஏனென்றால், இது அங்கு நின்று வலியால் அனுபவித்த சிலரின் வெஞ்சங்களால் விளைந்த முறைப்பாடு!.

சாதாரணமாக 8 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு கெபினட் மந்திரி, மூன்று இராஜாங்கங்கள் கொண்ட மாவட்டம் இப்படியிருந்தும் மக்களின் அவஸ்தைகள் யாரின் உள்ளங்களிலும் அகப்படவில்லை, சமூகநலவாதிகள் கண்டுகொள்ளவில்லை, சமூக நலன் பேசுகின்ற எதிர்கால அரசியல்வாதிகள் யாரும் இதை மோப்பமிடவில்லை.

உப்புச் சப்பிலாத எத்தனையோ விடயங்களுக்கு மூக்கையும் கிழித்து, மண்டயையும் உடைக்கும் மகான்கள் மதிப்பற்ற உரிமைகளுக்கு மட்டும் இனவாத சாயம்பூசி அரசியல் செய்வார்கள். இது இனவாதமுமல்ல, பிரதேசவாதமுமல்ல பகுத்தறிவுவாத விடயம். இதனை கண்டுகொள்ள புத்திக்கூர்மையுள்ள ஒரு அரசியல்வாதிகளும் எமது பிரதேசத்தில் இல்லையா? நாளுக்கு நாள் எத்தனையோ திட்டங்களை முன்மொழிபவர்கள் இந்த அலுவலத்துக்கு மாற்றுத் திட்டத்தினை முன்மொழிந்தால் என்ன?

இதனை கேள்வியுற்றதும் உள்நெஞ்சில் உறுக்கேறி என் பேனாமுனையின் மைகள் காகிதத்தை கிழித்தன. இதனை வாசிக்கும் ஒவ்வொருவரினது உள்ளங்களும் கீறல்களாகி அவரவர் சிந்தனையில் போட்டு அலசும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அதே நேரம், குறித்த இந்த அவலத்தை அனுபவித்த எத்தனை பரிதாப உள்ளங்களின் அனுபவம் இது என்பதும் இங்கு அளவிடமுடியாத ஒன்றுதான்.

என்னதான் அபிவிருத்திகளை மோட்சமிட்டாலும் அடிப்படைகளை உணர்ந்து இவ்வாறான எத்தனையோ பல விடயங்களுக்கு பதிலீடுகள் கொடுப்பது புத்திசாதூரியமானது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் சேவைகள்தான் அழியா இலட்சணங்கள்.

எனவே, ஒரு ஊடகவியலாளராக குறித்த இது விடயத்தினை எமது அரசியல்வாதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரினதும் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

✍️ கியாஸ் ஏ. புஹாரி

Web Design by The Design Lanka