நாட்டை புதிய பொருளாதார யுகத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்-பிரதமர் » Sri Lanka Muslim

நாட்டை புதிய பொருளாதார யுகத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்-பிரதமர்

ranil305

Contributors
author image

Editorial Team

19ஆம் நூற்றாண்டிற்குரிய பிரித்தானிய பொருளாதார முறைமையில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, நாட்டை புதிய பொருளாதார யுகத்திற்கு கொண்டுசெல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்திற்கு நுழையும் விமான பாதை செயற்றிட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனைத் தெரிவித்தார். கடன் சுமையுடன், ஏற்றுமதியில் வீழ்ச்சி கண்டிருந்த நாட்டை தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றது. அந்த சகல சவால்களையும் எதிர்கொண்டு விரைவாக பணியாற்றும் யுகத்தை ஆரம்பித்ததாக அவர் கூறினார்.

கொழும்பு மாநகரின் போக்குவரத்துக் கட்டமைப்பு மற்றும் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாக இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை முன்னேற்ற முடியும் என பிரதமர் சுட்டிக்காட்டினார். சூரியவௌ கிரிக்கட் மைதானத்திற்கான கடனை தற்போதைய அரசாங்கம் செலுத்தியதாக அவர் கூறினார்.

கொழும்பு நகரில் பாரிய அளவான மாற்றங்களை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் கபீர் ஹாஸிம் கூறினார். நகர அபிவிருத்திகள் மாத்திரமல்லாது, கிராமிய அபிவிருத்திகளையும் விரைவாக முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்திற்கு நுழையும் விமான பாதை செயற்றிட்டத்தின் மூலம் கொழும்பு மாநகருக்கு புதிய பெறுமானம் சேர்வதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதன் போது குறிப்பிட்டார். இந்த செயற்றிட்டத்தின் மூலம் கொழும்பு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.

அத்துடன், துறைமுகத்தின் செயற்றிறனும் அதிகரிக்கும் என அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்தார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் சென் சுவாங்க் உட்பட நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கும் சீன நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Web Design by The Design Lanka