ஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை தேடி வருகிறோம் » Sri Lanka Muslim

ஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை தேடி வருகிறோம்

Contributors
author image

BBC

பிரதமர் நரேந்திர மோதியை ரஷ்யாவில் சந்தித்தபோது, மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி அவர் கோரவில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார்.

ஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை மலேசிய அரசு தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இந்தியா அல்லாத வேறொரு நாட்டிற்கு ஜாகிர் நாயக்கை நாடு கடத்த மலேசிய அரசு தயாராக இருப்பதாகக் கருதப்படுகிறது. அதே சமயம் ஜாகிர் நாயக்கை ஏற்றுக் கொள்ள பல நாடுகள் தயங்குவதாகவும் பிரதமர் மகாதீர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த சூழலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜாகிர் நாயக்கை இந்தியா அழைத்து வர முயற்சி செய்வதாக கூறி உள்ளார்.

சர்ச்சைக்கு வித்திட்ட ஜாகிர் நாயக்கின் பேச்சு

மத போதகர் ஜாகிர் நாயக் மலேசியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய போது தெரிவித்த சில கருத்துக்களால் சர்ச்சை வெடித்துள்ளது.

மலேசியா வாழ் இந்தியர்கள் பிரதமர் மகாதீருக்கு விசுவாசமாக இல்லை என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றும் ஜாகிர் நாயக் பேசியதாக புகார் எழுந்தது.

மேலும் தாம் மலேசியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனில், தனக்கு முன்பே அந்நாட்டிற்கு விருந்தினர்களாக வந்திறங்கிய சீனர்கள் முதலில் வெளியேற வேண்டும் என்றும் ஜாகிர் நாயக் பேசியதை அடுத்து, அவரை நாடு கடத்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.

ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் எண்ணம் இல்லை என்று பிரதமர் மகாதீர் இருமுறை திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்யாவில் நடைபெற்ற மாநாட்டின் போது பிரதமர் மோதியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என மோதி வலியுறுத்தியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. அதை தற்போது மறுத்துள்ளார் மகாதீர்.

மோதி ஏதும் கோரவில்லை என்கிறார் மகாதீர்

“பல நாடுகள் இவரை (ஜாகிர் நாயக்) ஏற்க விரும்பவில்லை. நான் மோதியை சந்தித்தேன். ஆனால் இந்த மனிதரை (ஜாகிர் நாயக்) அவர் கேட்கவில்லை.

“ஜாகிர் நாயக்கை அனுப்புவதற்கான இடத்தை தேடி வருகிறோம். அவர் இந்த நாட்டின் குடிமகன் அல்ல. முந்தைய ஆட்சிக் காலத்தில் அவருக்கு நிரந்தர வசிக்கும் உரிமை அளிக்கப்பட்டதாக நினைக்கிறேன்.

“இவ்வாறு நிரந்தர வசிக்கும் உரிமை பெற்றவர்கள் மலேசியாவின் அரசியல், அமைப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என்ற விதிமுறையை அவர் மீறிவிட்டார்.

“எனவே அவர் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரை அனுப்புவதற்கு ஏற்ற இடத்தை தேடி வருகிறோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் அவரை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை,” என்று செவ்வாய்க்கிழமை வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது விரிவாகத் தெரிவித்தார் மகாதீர் மொஹமத்.

மலேசியப் பிரதமரின் இந்த விளக்கத்தின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க மலேசிய அரசு தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், அதே வேளையில் அவரை மலேசியாவில் இருந்து வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்க விரும்புவதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தர்ம சங்கடத்தை தவிர்க்க முயற்சிக்கும் மலேசியா

இது தொடர்பாக அரசியல் விமர்சகர் முத்தரசனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது, மேற்குறிப்பிட்ட கருத்தை ஆமோதித்தார்.

இன்டர்போல் எனும் அனைத்துலக காவல்துறை அமைப்பிடம் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையுடன் கூடிய நோட்டீசை (RED ALERT NOTICE) பிறப்பிக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி இருப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

“ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதை அப்படியே ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் மலேசிய அரசுக்கு இல்லை.

நாடு கடத்துவதற்காக இந்தியா கூறும் காரணங்களைப் புறந்தள்ள மலேசிய அரசுக்கு உரிமை உண்டு. எனவே ஜாகிர் நாயக்கை இதுவரை நாடு கடத்தாமல் இருப்பதற்காக மலேசியாவை குற்றம்சாட்ட இயலாது.

அதே சமயம் இண்டர்போல் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை நோட்டீசை பிறப்பித்து விட்டது எனில், மலேசியாவுக்கு தர்மசங்கடம் ஆகிவிடும். ஏனெனில் இன்டர்போல் அமைப்புடன் மலேசியா, இந்தியா ஆகிய இரு நாடுகளுமே உடன்பாடு கண்டுள்ளன”.

அதன்படி, சிவப்பு எச்சரிக்கை நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தங்கள் நாட்டில் இருக்கும் பட்சத்தில், இன்னொரு நாட்டின் கோரிக்கையை ஏற்று அவர்களை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் மலேசியா, இந்தியாவுக்கு உள்ளது.

“இதையெல்லாம் கவனத்தில் கொண்டே ஜாகிர் நாயக்கை இயன்ற விரைவில் வேறு நாட்டிற்கு அனுப்புவது என மலேசியப் பிரதமர் மகாதீர் முடிவு செய்திருக்கலாம்,” என்று விவரிக்கிறார் அரசியல் விமர்சகர் முத்தரசன்.

இரண்டு சம்பவங்களைச் சுட்டிக் காட்டும் ஜாகிர் நாயக்கின் எதிர்த் தரப்பு

இந்நிலையில் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தரப்பினர், இரண்டு சம்பவங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

மங்கோலியாவைச் சேர்ந்த அல்தான் துயா என்ற பெண்மணி சில ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவரில், சைரூல் என்பவர் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆஸ்‌திரேலியாவில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டதால், அத்தண்டனையை எதிர்பார்த்துள்ள சைரூலை மலேசியாவிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா மறுத்துவிட்டது.

சைரூலை ஒப்படைக்கும்படி மலேசியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதே போல் துருக்கியைச் சேர்ந்த ஒருவர் தன் குடும்பத்துடன் மலேசியாவுக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார். மலேசியாவில் பேராசிரியராக அவர் பணியாற்றி வந்த நிலையில், அவரை நாடு கடத்தும்படி துருக்கி அரசு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்தப் பேராசிரியர் மலேசியாவில் தங்கி இருப்பது ஆபத்தை விளைவிக்கும் என்று காவல்துறை அளித்த அறிக்கையின் பேரில் அவரை அண்மையில் குடும்பத்துடன் நாடு கடத்தியுள்ளது மலேசிய அரசு.

இதற்கு மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவ்விரு சம்பவங்களுடன் ஜாகிர் நாயக் விவகாரத்தை அவர்கள் ஒப்பிட்டு மலேசிய அரசை விமர்சித்து வருகின்றனர்.

ஜாகிர் நாயக் புகார்: நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணை

இதற்கிடையே, மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஜாகிர் நாயக்கையும், இனம் மற்றும் மதத்தையும் பயன்படுத்தக் கூடாது என நடப்பு ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம் குழுவான ஜி-25 என்ற அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இத்தகைய சூழலில், ஜாகிர் நாயக்கிற்கு எதிராக கருத்து வெளியிட்டதன் பேரில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு கடந்த திங்கட்கிழமை அன்று காவல் துறையியிடம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். சார்லஸ் சந்தியாகு தம்மைப் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்திருப்பதாக போலிசில் புகார் அளித்துள்ளார் ஜாகிர் நாயக்.

இந்நிலையில் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சார்லஸ் சந்தியாகு, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது கடமையைச் செய்திருப்பதாகக் கூறினார். காவல் துறையினர் தம்மிடம் 22 கேள்விகளை கேட்டதாகவும், அதற்கு தாம் நேர்மையாக பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த புகார் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் தாம் தயாராக இருப்பதாக சார்லஸ் சந்தியாகு குறிப்பிட்டார்.

“நாடாளுமன்ற உறுப்பினராக, ஒற்றுமையை வளர்ப்பது எங்கள் கடமை. ஆனால் நாட்டின் ஒற்றுமைக்காக போராடுவதால் நான் விசாரிக்கப் படுகிறேன்,” என்றார் அவர்.

முன்னதாக, மலேசிய மனிதவள அமைச்சர் எம். குலசேகரன், சார்லஸ் சந்தியாகு, பாகான் டாலாம் சட்டப்பேரவை உறுப்பினர் சதீஸ் முனியாண்டி, பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்னேஷியஸ் ஆகியோர் தமக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக காவல் துறையில் ஜாகிர் நாகர் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில், அண்மையில் பேராசிரியர் ராமசாமி, சதீஸ் முனியாண்டி, அமைச்சர் குலசேகரன் ஆகிய மூவரும் காவல்துறையில் தங்களது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

ஜாகிர் நாயக் விவகாரத்தை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயார் என ஐந்து பேரும் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka