2020 பெப்ரவரி மாதமளவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவார் » Sri Lanka Muslim

2020 பெப்ரவரி மாதமளவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவார்

faisal kaasim

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஸ்லம் எஸ்.மௌலானா

ஜனாதிபதித் தேர்தலில் யார் வென்றாலும் தனக்கு சாதகமான அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக. 2020 பெப்ரவரி மாதமளவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவார் என்று, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.

எத்தகைய ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கான அவசர விபத்து சிகிச்சைப் பிரிவுக் கட்டடத் தொகுதிக்காக  ஒதுக்கப்பட்ட 2,000 மில்லியன் ரூபாய் நிதியின் மூலம், அவ்வேலைத் திட்டம் நிச்சயமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்முனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அஹமட் அலி வைத்தியசாலையின் திறப்பு விழா, நேற்று மாலை (19) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், “நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்ன பொறுப்பேற்றதன் பின்னரே, இந்த நாட்டில் சுகாதாரத்துறை பாரிய முன்னேற்றம் கண்டதாகத் தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சியில்தான், கிழக்கு மாகாண வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதில் தான் கூடிய கவனம் செலுத்தியதாகவும் அதனால் பல வைத்தியசாலைகளில் நிலவி வந்த குறைபாடுகள் பெருமளவில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். பௌதீக வளங்கள், பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மஹரகமவில் மாத்திரம் அமைந்திருந்த புற்றுநோய் வைத்திய சேவைகளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஸ்தரிப்பு செய்துள்ளதாகவும் டயலஸ் சேவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, அஷ்ரப் வைத்தியசாலை என்பவற்றுக்கு சி.டி.ஸ்கேன் இயந்திரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமது பகுதியிலுள்ள வைத்தியசாலைகளை நவீனமயப்படுத்தி, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதே தனது இலக்கு என்றும் தெரிவித்தார்.

“அஷ்ரப் வைத்தியசாலையில் அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்ட ஐந்து மாடிகளைக் கொண்ட அவசர விபத்து சிகிச்சை பிரிவு இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது குறித்து, எம்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.  இதுவோர் ஏமாற்று வேலையா என்று முகநூலில் கேட்கின்றார்கள். நான் ஒருபோதும் நிதியொதுக்கீடு செய்யாமல் எந்தவித வேலைகளையும் ஆரம்பித்து வைப்பதில்லை. இதற்கும் நிதியொதுக்கீடு செய்துவிட்டே சுகாதார அமைச்சரை கூட்டி வந்து அடிக்கல் நாட்டினேன். ஆனால் அந்த வேலைத்திட்டத்தை பொறுப்பேற்ற ஒப்பந்த நிறுவனத்தின் இழுத்தடிப்பே தாமதத்துக்கு காரணமாகும்” என்றார்.

“விலைமனு கோரப்பட்டு, உரிய விதிமுறைகளின் பிரகாரம் பொறுப்பளிக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தில் இருந்து குறித்த நிறுவனத்தை இலகுவாக நீக்கிவிட முடியாது. அந்த நிறுவனம் வேறு சில வைத்தியசாலைகளில் வேலைகளை ஆரம்பித்துக் கொண்டு செல்கின்றது. இந்நிலையில் அஷ்ரப் வைத்தியசாலைக்கான ஒப்பந்தத்தை வேறு நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு முறைப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நிச்சயம் இந்த வைத்தியசாலையில் அவசர விபத்துப் பிரிவு அமைக்கப்படும் என்று உறுதியாக சொல்லிக் கொள்கின்றேன். அதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” என்றார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் ஆகியோர் கௌரவ அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.

Web Design by The Design Lanka