டிரம்ப் - மோதி சந்திப்பு: இந்திய முஸ்லிம்கள் குறித்து நரேந்திர மோதி கூறியது என்ன? - Sri Lanka Muslim

டிரம்ப் – மோதி சந்திப்பு: இந்திய முஸ்லிம்கள் குறித்து நரேந்திர மோதி கூறியது என்ன?

Contributors
author image

BBC

முன்பு இந்தியாவில் ஏராளமான அதிருப்தி கருத்துகள் இருந்தன, சண்டைகள் இருந்தன. அவற்றை எல்லாம் ஒரு தந்தையைப் போல பிரதமர் நரேந்திர மோதி ஒன்றுபடுத்தியுள்ளார். அவரை இந்தியாவின் தந்தை என்று கூறலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்புக்குப் பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்த இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டினர்.

இந்தியாவுடன் விரைவில் அமெரிக்கா வணிக ஒப்பந்தம் செய்துகொள்ளும் என்று தெரிவித்தார் டிரம்ப்.

அத்துடன், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டால் இருவரும் ஒத்துப் போவார்கள்; அவர்கள் சந்திப்பிலிருந்து பல நல்ல விஷயங்கள் வரும்” என்று தாம் நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.

தீவிரவாத அமைப்பான அல்கய்தாவுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பயிற்சி அளித்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டபோது, “அதைப் பிரதமர் (மோதி) பார்த்துக்கொள்வார்” என்று டிரம்ப் பதில் சொன்னார்.

பிரதமர் நரேந்திர மோதியை சுட்டிக்காட்டி, ”இவரை ‘ஹௌடி மோடி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் விரும்பினர். அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக் கலைஞரான எல்விஸ் பிரெஸ்லியை போல நரேந்திர மோதி இங்குத் தோன்றுகிறார். எல்விஸ் பிரெஸ்லி திரும்ப வந்துவிட்டது போல் எனக்குத் தோன்றுகிறது” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

டிரம்ப்- மோதி சந்திப்பு: இந்திய முஸ்லிம்கள் குறித்து நரேந்திர மோதி கூறியது என்ன?படத்தின் காப்புரிமைANI

ஹூஸ்டன் வந்திருந்து தன்னுடைய நேரத்தைச் செலவிட்டதற்காக அவருக்குப் பிரதமர் மோதி நன்றி தெரிவித்தார்.

இந்தியாவின் பெட்ரோநெட் நிறுவனம் எரிசக்தித் துறையில் 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீட்டு உடன்படிக்கையில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்டிருப்பதால் வணிகத்தைப் பொறுத்தவரை தமக்கு மகிழ்ச்சி என்று தெரிவித்தார் மோதி.

நரேந்திர மோதி மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே நடந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே கூறுகையில், ”டிரம்ப் மற்றும் மோதி ஆகிய இரு தலைவர்களும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை உரையாடினர். தீவிரவாதம் தொடர்பாக இந்தியா சந்தித்துவரும் பிரச்சனையைக் குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகளை மோதி எடுத்துரைத்தார்” என்று குறிப்பிட்டார்.

”உலக அளவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகமாக உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருந்தாலும், உலகின் எந்த பகுதியைக் காட்டிலும் தீவிரவாதம் தொடர்பாக இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலேயே பங்கெடுப்பு உள்ளது என்று நரேந்திர மோதி சுட்டிக்காட்டினார்” என்று விஜய் கோகலே கூறினார்.

நரேந்திர மோதி மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே நடந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுதுறை செயலர் விஜய் கோகலே கூறுகையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா எந்த தயக்கமும் காட்டவில்லை என்பதை பிரதமர் நரேந்திர மோதி டிரம்பிடம் தெளிவுபடுத்திவிட்டார். இது தொடர்பாகப் பாகிஸ்தான் சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஆனால் தற்போது பாகிஸ்தான் அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றே தெரிகிறது” இன்று கூறினார்.

பிரதமர் மோதி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்து மேலும் விஜய் கோகலே கூறுகையில், ”தீவிரவாதம் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை மோதி எடுத்துக்கூறினார். இது குறித்த சவால்களை அதிபர் டிரம்பும் புரிந்துகொண்டார்” என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியூயார்க் சென்றுள்ளார். அமெரிக்காவின் வணிகத்துறை பிரதிநிதியுடன் அவர் பல விஷயங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் எதிர்காலத்தில் வணிக ரீதியிலான ஒப்பந்தம் ஒன்றை விரைவில் எட்டுவர் என்ற நம்பிக்கை இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ளது என்று விஜய் கோகலே மேலும் தெரிவித்தார்

Web Design by Srilanka Muslims Web Team