ரூ.19,000 கோடி ஆன்லைன் விற்பனை: "அமேசான் - பிளிப்கார்ட் விற்பனை போரால் சேர்ந்த பணம்" - Sri Lanka Muslim

ரூ.19,000 கோடி ஆன்லைன் விற்பனை: “அமேசான் – பிளிப்கார்ட் விற்பனை போரால் சேர்ந்த பணம்”

Contributors
author image

BBC

தீபாவளிக்காக புத்தாடை, செல்போன் உள்ளிட்ட பல வகை நுகர்வோர் பொருட்களை இந்திய மக்கள் வாங்கி குவித்ததில், வெறும் ஆறு நாட்களில்(செப்29-அக்4) ஆன்லைன் சந்தையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்கள் விற்பனையாகி உள்ளன என ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் கூறுகின்றன.

கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட காரணத்தால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டது என கூறப்பட்ட நிலையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்களை வாங்க பணம் எங்கிருந்து வந்தது என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.

இந்தியா பொருளாதார சரிவில் இருந்து மீண்டுவிட்டதா? பண்டிகை காலத்தில் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டதா என கேள்விகள் எழுகின்றன. சென்னையை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.

அந்த நேர்க்காணலில் இருந்து:

கேள்வி:இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்பதால் பல தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நேரத்தில் வெறும் ஆறு நாட்களில் சுமார் ரூ.19,000 கோடி அளவுக்கு ஆன்லைனில் மக்கள் பொருட்களை வாங்கி குவித்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. பொருளாதர மந்த நிலையில் இருந்து மீண்டுவிட்டோமா? இந்த விற்பனை எப்படி சாத்தியமானது?

பதில்:பொருளாதார மந்த நிலைக்கும் இந்த விற்பனைக்கும் சம்பந்தம் இல்லை. பொருளாதாரத்தில் மந்த நிலை இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இது புது விற்பனை கிடையாது. ஆன்லைன் நிறுவனங்கள் பெரிய தள்ளுபடி விலை கொடுக்கிறார்கள். உலக அளவில் ஆன்லைன் விற்பனை செய்யும் இரண்டு பெரிய நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மத்தியில் நடக்கும் போட்டி இது.

2001ல் அமெரிக்காவில் ஆன்லைன் மொத்த சில்லறை விற்பனையில் 17 சதவீதத்தை அமேசான் கையாண்டது. தற்போது அது 45 சதவீதமாக மாறியுள்ளது. இதுபோலவே இந்தியாவில் உள்ள ஆன்லைன் விற்பனை சந்தையை ஆக்கிரமிக்க ஆன்லைன் நிறுவனங்கள் தள்ளுபடி கொடுக்கிறார்கள். இந்திய சந்தையை பிடிப்பதற்கு தொடக்கத்தில் ஒரு பங்கு பணத்தை செலவு செய்ய அமேசான் பணம் ஒதுக்கியுள்ளது.

Image captionஃபிளிப்கார்ட் விளம்பரம்.

பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடங்கியது இந்தியர்களாக இருந்தாலும், தற்போது பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. உலகளவில் அமேசான் நிறுவனத்திடம் தனது விற்பனையை பறிகொடுத்துள்ள வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் அந்த விற்பனையை பிடிக்க போட்டி போடுகிறது.

நேரடியாக அமேசான் – பிளிப்கார்ட் இடையே நடக்கும் விற்பனை போர்தான் இந்த ‘சலுகை சேல்ஸ்’. எடுத்துக்காட்டாக ரூ.10,000 விற்கும் பொருளை ரூ.5,000 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதுதான் காரணம்.

கேள்விகடந்த இரண்டு மாதங்களில் பல பொருளாதார நிபுணர்களும் இந்தியாவில் வாங்கும் சக்தி குறைந்துள்ளது என தெரிவித்தார்கள். நீங்கள் கூட ஒரு வீடியோவில் மக்கள் பிஸ்கட், உள்ளாடை போன்றவற்றை வாங்ககூட யோசிக்கவேண்டும் என கூறினீர்கள். பொருட்களின் விலையை நிறுவனங்கள் குறைத்தாலும், அந்த செலவை செய்வதற்கான பணம் எங்கிருந்து வந்ததது?

பதில்பொருட்களை வாங்கவேண்டும் என எண்ணத்தில் இருப்பவர்கள் வாங்கிக்கொண்டே இருப்பார்கள். பொருளாதாரம் என்பது பூஜ்ய நிலையை அடையாது. பொருளாதாரம் என்ற வண்டி முழுமையாக நிற்கவில்லை. ஆனால் அது ஓடக்கூடிய வேகம் குறைந்துள்ளது. இந்தியாவில் சமீபமாக பொருட்களை வாங்கும் தன்மை அதிகரித்துள்ளது. முன்னர் மக்கள் பணத்தை சேர்த்துவைத்து பொருட்களை வாங்கினார்கள். அதனால் அதனை முழுமையாக பயன்படுத்தினார்கள்.

Image captionஆனந்த் சீனிவாசன்

தற்போது கிரெடிட் கார்ட் மூலம் தன்னிடம் சேராத பணத்தை செலவு செய்கிறார்கள். தங்களுக்கு சம்பளம் வரும் முன்னனரே பணத்தை செலவிட்டுவிடுகிறார்கள்.

பணம் என்னிடம் உள்ளதா என்பதைவிட கிரெடிட் கார்ட் மூலம் செலவு செய்யலாம் என்ற பழக்கம் அதிகமாகிவிட்டது. இல்லாத பணத்தை மக்கள் செலவு செய்வதால், பொருளாதாரம் சீராகி இந்த விற்பனை நடந்துள்ளது என தவறாக எண்ணக்கூடாது.

கிரெடிட் கார்ட் வட்டிவிகிதம் 36 முதல் 60 சதவீதம் வரை வாங்குகிறார்கள். கந்துவட்டி வாங்குபவர்கள் மீது சட்டம் பாய்கிறது. ஆனால் இந்த கிரெடிட் கார்ட் வட்டி விகிதத்தை யாரும் கேள்வி கேட்பதில்லை.

மக்கள் வாங்கும் சக்திக்கு மீறி பணம் செலவு செய்கிறார்கள். இது எப்படி வளர்ச்சி ஆகும்?

கேள்விதீபாவளியில் தொடங்கும் பண்டிகை விற்பனையைப் பொறுத்தவரை, ஆன்லைனில், பெரும்பாலானவர்கள் மொபைல் போன் வாங்கியுள்ளார்கள். மொபைல் போனின் அதீத விற்பனைக்கு காரணம் என்ன?

பதில்பலரும் தன்னிடம் போன் இருந்தாலும், லேட்டஸ்ட் மாடல் தேவை என ஆசைப்படுவதால், மற்றவர்களிடம் உள்ள ஸ்மார்ட்போன் தன்னிடம் இல்லை என கருதி, வாங்குகிறார்கள். ஒரு செல்போனை குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் பயன்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்குள் லேட்டஸ்ட் மாடல் வாங்கிக்கொள்ளலாம் என எண்ணுகிறார்கள். குறைந்த இஎம்ஐ கட்டினால் போதும் என்ற விளம்பரத்தை மக்கள் நம்புகிறார்கள். கிரெடிட் கார்ட் இருப்பது ஒரு முக்கிய காரணம். இந்த திருவிழா சேல்ஸ் தள்ளுபடியில் ரூ.10,000த்திற்கு கிடைக்கும் பொருள் ரூ.5,000க்கு கிடைக்கிறது என விளம்பரம் வருகிறது. இது வாங்கவேண்டும் என ஆசையை தூண்டுகிறது. கிரெடிட் கார்ட் இருப்பதால், வாங்கிவைக்கலாம் என தன்னிடம் இல்லாத காசை வைத்து, அல்லது கிரெடிட் கார்ட் கடன் மூலமாக பொருளை வாங்குகிறார்கள். ஆனால் வட்டி எவ்வளவு செலுத்துகிறோம் என பார்ப்பதில்லை.

Image captionதசரா நேரம். விற்பனைக்குத் தயாரான ஜவுளி கடைக்காரர்.

கேள்விஇந்தியாவில் பெருநகரங்களை காட்டிலும், சிறிய ஊர்களில், இரண்டம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்துள்ளது என ரெட் சீர்(redseer) நிறுவனம் கூறுகிறது. சிறிய நகரங்களில் கூட மக்கள் பொருட்களை வாங்குவதில் இந்த மற்றம் எப்படி நிகழ்தது?

பதில்சிறிய ஊர்களில் நேரடி கடைகளில் எல்லா மாடல் நுகர்வு பொருட்களும் இருக்குமா என தெரியாது என்பதால், ஆன்லைனில் பொருளை வாங்க மக்கள் விருப்பப்படுகிறார்கள். சிறிய கிராமங்களில் உள்ள கடைகளை அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் முகவர்களாக பதிவு செய்கிறார்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருளை சிறிய கிராமத்திலும் சென்று சேர்க்கிறார்கள். பொருள் பிடிக்கவில்லை என்றால் உடனே அதனை திரும்ப பெற்றுக்கொள்ள சிறிய கடையில் திருப்பிக்கொடுக்கலாம். பொருளை பார்த்துவிட்டு பணம் கொடுக்கலாம் என்பதால், மக்கள் ஆன்லைன் கடையை விரும்புகிறார்கள்.

அதேபோல முந்தைய காலங்களை போல, பொருளை வாங்க பல கடைகள் ஏறி இறங்கவேண்டாம். ஆன்லைனில் ஒரு மாடல் பொருளுக்கு எந்த பிராண்ட் சிறந்ததது, விலை குறைவு, இதற்கு முன்னர் வாங்கியவர்கள் என்ன சொல்கிறார்கள் என முழு தகவலும் கிடைக்கிறது என்பதால் ஆன்லைனில் வாங்குகிறார்கள்.

நீங்கள் இதையும் படிக்க விரும்பலாம்:

கேள்வி: கடந்த ஆண்டை விட பண்டிகை கால விற்பனை ஆன்லைனில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது ரெட் சீர் நிறுவனம். ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் விற்பனை அதிகரிக்கிறது என்பதால், வரும் ஆண்டுகளில்நேரடி விற்பனை எந்த அளவு குறையும்?

பதில்: ஆன்லைன் விற்பனை அதிகரிக்கிறது என்பது உண்மைதான். அதன் அளவு கூடும். ஆனால் முழுவதுமாக நேரடி கடைகள் இருக்காது என்ற நிலை ஏற்படாது. 60 ஆன்லைன், 40 சதவீதம் நேரடி கடை விற்பனை என்றோ, இரண்டும் 50 சதவீதம் என்ற அளவிலோ இருக்கும். முற்றிலுமாக ஆன்லைன் விற்பனை தற்போது சாத்தியம் இல்லை. நேரடியாக பொருட்களை வாங்கும் மக்கள் ஒரு பகுதி இருக்கிறார்கள். அவர்கள் இணையத்தில் வாங்குவதை விட, நேரடியாக வாங்குவதை விரும்புவார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team