இலக்கியத்துக்கான நோபல் பரிசு: போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர் » Sri Lanka Muslim

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர்

Contributors
author image

BBC

போலாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கே ஆகியோருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், நோபல் அமைப்பில் பரிசுக்குரியவர்களை தேர்வும் செய்யும் குழுவில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால், சென்ற ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு இலக்கியத்துறையில் இரண்டு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, புக்கர் பரிசு வென்ற எழுத்தாளரான ஓல்கா டோகார்ஸுக்கு 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசும், பீட்டர் ஹேண்ட்கேவுக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன.1p

76 வயதான ஆஸ்திரிய நாடக ஆசிரியரும் நாவலாசிரியருமான பீட்டர் ஹேண்ட்கேவுக்கு, “மொழியியல் புத்தி கூர்மையின் மூலம் மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆராய்ந்த ஒரு சிறப்புமிக்க படைப்புக்காக” நோபல் பரிசு வழங்கப்படுவதாக அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலந்து நாவலாசிரியரான 57 வயதான டோகார்ஸுக்கின் எழுத்து நடைக்கும், கோணத்துக்கும் இந்த அங்கீகாரம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாதது ஏன்?

நோபல்படத்தின் காப்புரிமைALFREDNOBEL.ORG

தனது உறுப்பினர் ஒருவரின் கணவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டினை அகாடமி கையாண்ட விதம் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களும், அதன் தலைவரும் பதவி விலகினர்.

அதையடுத்து, 2018ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்குரியவரை 2019ம் ஆண்டு பரிசுக்குரியவரோடு சேர்த்து தேர்வு செய்யப்போவதாக அகாடமி அறிவித்தது.

1901ம் ஆண்டு முதல் முறையாக இந்தப் பரிசு வழங்கப்பட்டதில் இருந்து இந்தப் பரிசு தொடர்பாக எழுந்துள்ள மிகப்பெரிய சர்ச்சையாக இது கருதப்பட்டது.

மக்களின் நம்பிக்கை குறைந்திருப்பதே இந்த முடிவுக்குக் காரணம் என்று அப்போது அகாடமி தெரிவித்திருந்தது.

அகாடமியின் பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் பரிசு வழக்கம்போல அறிவிக்கப்படவேண்டும் என்று சில உறுப்பினர்கள் வாதிட்டனர். ஆனால் வேறு சிலரோ பரிசு வழங்கும் நிலையில் அகாடமி இல்லை என்று வாதிட்டனர்.

உலகப் போர்கள் நடந்துவந்த காலங்களில் ஆறு ஆண்டுகள் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இது தவிர, 1935-ம் ஆண்டு தகுதியான யாரும் இல்லை என்பதால் பரிசு அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka