அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் » Sri Lanka Muslim

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத்

Contributors
author image

BBC

2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

“அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்” நடவடிக்கைகளை எடுத்ததற்காக அபிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1998-2000 இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற எல்லைப் போரைத் தொடர்ந்து, ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவி வந்த ராணுவ ரீதியிலான சிக்கலை கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்கு கொண்டுவந்தார்.

அமைதிக்கான நோபல் பரிசை பெறும் 100ஆவது நபர்/அமைப்பு எனும் பெருமையை அபி அஹ்மத் பெற்றுள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள விழாவில், அபிக்கு நோபல் பரிசுடன் இந்திய மதிப்பில் சுமார் ஆறரை கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

இந்தாண்டுக்கான நோபல் பரிசுக்கு 223 தனிநபர்கள், 78 அமைப்புகள் உள்பட 301 பரிந்துரை விண்ணப்பங்கள் வந்திருந்தன.

மற்ற துறைகளுக்கான நோபல் பரிசுகளை விட இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவியது.

யார் இந்த அபி அஹ்மத்?

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மிகவும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட நாடாக இருந்து வந்த எத்தியோப்பியாவின் பிரதமராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்ற அபி, அந்நாட்டில் தாராளவாத சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.

ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்களை சிறையில் இருந்து விடுவித்ததுடன், நாடுகடத்தப்பட்ட அதிருப்தியாளர்களை நாடு திரும்புவதற்கு அனுமதி அளித்தார். மிகவும் முக்கியமாக, எத்தியோப்பியாவின் அண்டை நாடான ஏரிட்ரேயாவுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அந்நாட்டுடனான இரண்டு தசாப்த கால மோதலை முடிவுக்கு கொண்டுவந்தார்.

அதே சமயத்தில், இந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இன ரீதியிலான பதற்றம் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளின் காரணமாக சுமார் 2.5 மில்லியன் மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

Web Design by The Design Lanka