சிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை - Sri Lanka Muslim

சிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை

Contributors
author image

BBC

வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், மூன்று மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானோடு தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரியதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார்.

அந்தப் பிராந்தியத்திற்கு மிக விரைவில் தான் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் பென்ஸ் கூறியுள்ளார்.

வடகிழக்கு சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிரியா ஜனநாயகப் படை என்ற குர்து ஆயுதக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன் துருக்கி தங்கள் எல்லைப்புறத்தில் இருந்து சிரியா மீது தாக்குதல் தொடுத்து வருகிறது.

ஐ.எஸ். படையினரை அழிப்பதற்கு சிரியா ஜனநாயகப் படையின் உதவியைப் பெற்றுவந்த அமெரிக்கா, துருக்கியோடு நேரடி மோதலைத் தவிர்க்கும் வகையில் எல்லைப் பகுதியில் இருந்து பின் வாங்கியது. இதனை முதுகில் குத்தும் செயலாகப் பார்க்கும் சிரியா ஜனநாயகப் படை, துருக்கியை எதிர்கொள்ள சிரியாவின் அரசுப் படைகளோடு சமரசத்தை எட்டியுள்ளது.

இதையடுத்து, நாட்டின் வடகிழக்கு பகுதியில் சிரியா ராணுவம் நுழைந்துள்ளது.

இந்நிலையில்தான் அமெரிக்கா துருக்கி மீதான தடைகளை விதித்துள்ளது.

எல்லைப் பிரதேசத்தில் இருந்து குர்து படைப்பிரிவுகளை விரட்டி, “பாதுகாப்பான மண்டலத்தை” உருவாக்குவதே அரசின் நோக்கம் என்கிறது துருக்கி.

சிரியாவில் 30 கிலோமீட்டர் (20 மைல்கள்) பகுதியில் உருவாக்கப்படும் “பாதுகாப்பான மண்டலத்தில்”, தற்போது தங்களின் எல்லையில் வாழும் 20 லட்சம் சிரியா அகதிகளை மீள குடியமர்த்த துருக்கி விரும்புகிறது.

ஆனால், அவ்வாறு குடியமர்த்தப்பட இருப்போரில் பலரும் குர்துக்கள் அல்ல, இந்த நடவடிக்கை, உள்ளூர் குர்து மக்களின் இன அழிப்புக்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team