சிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி » Sri Lanka Muslim

சிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி

Contributors
author image

BBC

குர்து ஆயுதப்படை பின்வாங்குவதற்கு உதவும் வகையில், சிரியாவின் வடக்கு பகுதியில் போர்நிறுத்தம் மேற்கெள்ள துருக்கி ஒப்புக்கொண்டுள்ளது.

அங்காராவில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸூம், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானும் நடத்திய சந்திப்புக்கு பின்னர் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் சண்டை நிறுத்தப்படும். இந்நேரத்தில் துருக்கி எல்லையில் அமைப்பதாக கூறும் “பாதுகாப்பு மண்டலம்” என்கிற பகுதியில் இருந்து குர்துக்கள் தலைமையிலான துருப்புகளை பின்வாங்குவதற்கு அமெரிக்கா உதவும்.

இந்த ஒப்பந்தத்திற்கு குர்து ஒய்பிஜி கட்டுப்பட்டு நடக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.

சண்டை மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் எல்லை நகரங்களான ராஸ் அல்-அயின் மற்றும் டால் அப்யாட்டுக்கு இடையிலான பகுதியில் குர்துக்களின் தலைமையிலான துருப்புகள் இந்த ஒப்பந்தத்தை கடைபிடிக்கும் என்று தளபதி மஷ்லௌம் கோபானி கூறியுள்ளார்.

“பிற இடங்களின் நிலைமைகள் பற்றி நாங்கள் கலந்துரையாடவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும் ராஸ் அல்-அயினில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிரியா மணித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது.

கடந்த எட்டு நாட்களில், சிரியாவில் மட்டும் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்று லட்சத்திற்கு மேலானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இது கூறியுள்ளது.

இப்போது ஏற்பட்டுள்ள போர்நிறுத்தத்தால் மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டர் பதில் தெரிவித்திருக்கிறார்,

Web Design by The Design Lanka