சாய்ந்தமருதில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய மஹிந்த ராஜபக்ஷ! » Sri Lanka Muslim

சாய்ந்தமருதில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய மஹிந்த ராஜபக்ஷ!

IMG_20191026_090922

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

நாம் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருது பிரதேச சபை மலரும் என உறுதிபட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் நேற்று (25) இடம்பெற்றது .

முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

கல்முனை மாநகரம் அதிநவீன நகரமாக மாற்றப்படும். தற்போது கடலில் காணப்படுகின்ற படகுகள் இங்கு இருக்க வேண்டியவை அல்ல. இவைகள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட வேண்டியவை. அதற்கு நிச்சயமாக துறைமுகத்தை அமைத்து தருவேன். மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். சாய்ந்தமருது மக்கள் விரும்பும் பிரதேச சபையை அமைத்து தருவேன். ஆனால் நாங்கள் ஆட்சியமைத்தால் நகர சபையாகவும் மாற்றி தருவேன். பயங்கரவாத பிடியில் இருந்து உங்களை பாதுகாத்து பள்ளிவாசல் வீடுகளில் முடங்கி இருந்தவர்களை வெளியில் கொண்டு வந்தவர்கள் நாங்கள்.

ஆனால் இந்த ஆட்சியில் தான் முஸ்லீம்களுக்கான தொழுகையை கூட முடக்கியது இந்த ஆட்சியில் தான் .ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஒரு தேவாலயத்தில் குண்டுவெடிக்க போகின்றது என்று தெரிந்தும் கூட ஒரு அமைச்சர் தன் மகனை தேவாலயத்திற்கு செல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார். தானும் செல்லவில்லை. ஆனால் தாக்குதலில் அப்பாவி 400 மக்கள் உயிரிழந்தார்கள். அந்த அமைச்சரும் குடும்பமும் பாதுகாக்கப்பட்டது. அந்த அமைச்சர் வேற யாரும் அல்ல. இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவின் வலது கை ஊடக பேச்சாளர் ஆவார் மேலும் குண்டு வெடிக்கும் என்று தெரிந்தும் நித்திரை செய்த இந்த அரசாங்கம் தான் இத்தாக்குதலுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

தொடர்ந்தும் எங்கள் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பேருவளை தாக்குதலின் போது ஜனாதிபதியான நானும் பாதுகாப்பு செயலாளரும் அன்றைய தினம் நாட்டில் இல்லாமல் இருந்தோம். இருந்த போதிலும் சம்பவம் அறிந்து உடனே நாடு திரும்பி இரவோடு இரவாக உணவு உண்ணாமல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். ஆனால் இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் நித்திரை கொள்ளாமல் நாட்டை பாதுகாப்பேன் என்று சொல்கின்றார். இவர் நித்திரை செய்கின்றாரா இல்லையா என்று நாங்கள் பார்க்கவா முடியும். ஆகவே தான் எங்களுக்கு எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் உங்களுடைய பரிபூரண ஆதரவை தாருங்கள் என்றார்.

இதில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் சிரியாணி விஜயவிக்ரம மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே. எம் .முஸம்மில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(அம்பாறை நிருபர் ஷிஹான்)

Web Design by The Design Lanka