ராஜபக்ஷக்கள் இனவாதத்தினை தூண்டுகின்றனர் » Sri Lanka Muslim

ராஜபக்ஷக்கள் இனவாதத்தினை தூண்டுகின்றனர்

ranil

Contributors
author image

Editorial Team

ஒட்டுமொத்த ராஜபக்ஷக்கள் இனவாதத்தினை தூண்டுகின்றனர். இனவாதத்தை துண்டி நாட்டை பிளவுபடுத்தி வெற்றிபெற முடியும் என்று நினைக்கின்றார்கள். அது வெற்றியளிக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆதரித்து வாழைச்சேனை செம்மண்னோடை பிரதேசத்தில் இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாங்கள் யாரும் பயங்கரவாதத்தினை அனுமதிப்பது கிடையாது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத்திற்கு எதிராக போராட்டம் நடாத்துபவர்கள் இந்தோனேசியா, மலேசியா, அரபி நாட்டு முஸ்லிம்கள். குண்டுத்தாக்குதலை நடாத்தியவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதத்தினை பின்பற்றுபவர்கள். அதன் தலைவர் அல்பக்தாதி முற்றுகையிடப்பட்டு போரில் உயிரிழந்தார். அதனை உலக தலைவர்கள் உறுதி செய்துள்ளார்கள். நானும் அது சம்பந்தமாக கதைத்துள்ளேன்.

சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் ராஜபக்ஷக்கள் இது சம்பந்தமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஏன் அவர்களால் பேச முடியாது என்று கேட்கின்றேன். முஸ்லிம் அமைச்சர்களுக்கு பேசும் இவர்கள் ஏன் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அல்பக்தாதி பற்றி பேச முடியாது. இதற்கு எங்களால் பதில் சொல்ல முடியாது ஹிஸ்புல்லா சொல்லுங்கள் என்று அவரிடம் சொல்வார்கள். அதன் அவர்களுடைய விளையாட்டு.

நாங்கள் அவ்வாறு இல்லை. நாங்கள் பயங்கரவாத்திற்கு எதிரானவர்கள். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டாலும் நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்கள். இவ்வாறான நடவடிக்கைகளுக்கான மக்களை தண்டிப்பது தவறானது.

எங்களுக்கு கொள்கை உள்ளது. இந்த நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும். இம்முறை பெண்கள் தொடர்பில் விசேட திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம். உள்ளூராட்சி மன்றம் போன்று மாகாண சபையிலும் 25 வீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. தேசிய பட்டியலிலும் 25 வீதம் வழங்கப்படும்.

புதிதாக உருவாக்கப்படும் செனட் சபையிலும் 25 வீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். பெண்கள் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டால் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். நாங்கள் அபிவிருத்தியை பாரிய அளவில் மேற்கொண்டுள்ளோம். கிழக்கு மாகாணத்திற்கு பல அபிவிருத்திகளுக்கு நிதி செலவழித்துள்ளோம். இளைஞர்களின் எதிர்காலத்திற்கான மேற்கொண்டுள்ளோம்.

வாழைச்சேனை துறைமுகத்தினை நவீன துறைமுகமாக மாற்றியமைப்போம். இங்கு 750 படகுகள் நிறுத்தக் கூடிய வகையிலும், குளிர்சாத அறைகளுமாக நிர்மானிக்கப்படும். வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்து முழுமையான வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும். ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானம் நவீனமயப்படுத்தப்படும்.

தற்போது மட்டக்களப்பு விமான நிலையம் செயற்பட ஆரம்பித்துள்ளது. பலாலி விமான நிலையம் போன்று. இங்கு சென்னையில் இருந்து மட்டக்களப்பு, மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு விமான சேவை இடம்பெறும். இந்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு பணிப்புரை விடுத்தேன். இந்தியா எயாலன்ஸ் மற்றும் இலங்கை பிக்ஸ் எயாலன்ஸ் நிறுவனத்திற்கும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் புதிய தொழில் பேட்டைகளை உருவாக்க உள்ளோம். இவ்வாறான வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு எதிர்வரும் 16ஆம் திகதி அன்னப் பறவையின் முன்னே புள்ளடியிட்டு சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குங்கள் என்றார்.

முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மின்வலு எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மெளலான, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகல்லாகம, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர் எஸ்.மகாலிங்கம், பிரதேச அபிவிருத்தி குழு இணைத்தலைவர் எம்.புர்கான், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Web Design by The Design Lanka