கோத்தாபயவின் ஆதரவாளர்கள் செய்ய வேண்டியது.. » Sri Lanka Muslim

கோத்தாபயவின் ஆதரவாளர்கள் செய்ய வேண்டியது..

IMG_20191107_203057

Contributors
author image

Fauzer Mahroof

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர், முஸ்லிம்களுக்கிடையில் பிரச்சினைகள், முரண்பாடுகள், மனவருத்தங்கள் உள்ளன.குறிப்பாக கிழக்கில் இந்த சூழல் அதிகரித்து நிற்கிறது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த -கோதபாய தரப்பு முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்களையும், தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களையும் காட்டி, இப்பகுதி மக்களை காக்கும் வல்லமை தம்மிடையே மட்டுமே உண்டு என்கிற வகையில் இதனையே முதன்மைப்படுத்தி பிரச்சாரங்களை, அரசியல் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றன.

இனங்களின் இருப்பின் மேலான அச்சமூட்டும் , முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்தும் பிரச்சார யுக்திகளையே , தமக்கு விசுவாசமான கிழக்கின் தமிழ், முஸ்லிம் தலைமைகளைக் கொண்டு நடாத்தி வருவதைக் காண்கிறோம்.

மகிந்த -கோதபாய தரப்பை கிழக்கில் ஆதரித்து நிற்கும் தமிழ் தரப்பு -முஸ்லிம்களிடமிருந்து கிழக்கு தமிழர்களுக்கான பாதுகாப்பு, உத்தரவாதம் தாம் பதவிக்கு வந்தால் மட்டுமே உண்டு என்கின்றனர்.

இதேபோல் ,மகிந்த -கோதபாய தரப்பை கிழக்கில் ஆதரித்து நிற்கும் முஸ்லிம் தரப்பு , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சஜீத் வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், கிழக்கில் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டுமென்றால் தாம் ஆதரித்து நிற்கும் கோதாவுக்கே வாக்களிக்க வேண்டும் என்கின்றனர். .

இவர்கள் கையாளும் இந்த பிரச்சார யுக்தி, சமகாலத்திலும் நீண்டகால அடிப்படையிலும் கிழக்கில் தமிழர் முஸ்லிம்களுக்கிடையில் ,ஆழமான பிளவையும், முரண்பாடுகளையும்
மேலும் ஆழப்படுத்தி வருகிறது. ஒரு இனத்தின் மேல் இன்னொரு இனத்தினை வெறுப்பேற்றி வெறும் இனவாத நோக்கில் வாக்குச் சேகரிக்கும் இந்த பிரச்சாரம் மட்டுமே இவர்களிடம் இருப்பதைக் காண முடிகிறது.

0000
கிழக்கில் தமிழர் முஸ்லிம்களுக்கிடையில் பிரச்சினைகள், முரண்பாடுகள், மனக்கசப்புகள் உள்ளன.இவற்றினை இரு தரப்பும் பேசித்தான் தீர்க்க வேண்டுமேயொழியே, முரண்பட்டு, மோதி, இரத்தம் சிந்தி தீர்க்க முடியாது. ஒரு இனத்திற்கு எதிராக இன்னொரு இனத்திற்குள் ஆழமான பகையையும் , கசப்பையும் ஊட்டி வளர்ப்பது, கிழக்கு தமிழர், முஸ்லிம்களின் வாழ்வில் சமாதானத்தையும் சக வாழ்வையும் ஒருபோதும் கொண்டு வராது.

மகிந்த- கோதபாயவை ஆதரிக்கும் தமிழ் ,முஸ்லிம் தரப்புக்கு இந்த மக்களின் மீது பரிவும் நேசமும் இருப்பின் இவர்கள் செய்ய வேண்டியது.. அநீதி இழைக்கப்பட்டிருப்பின் நீதியும் தீர்வும் வழங்கப்படும் என்கிற அரசியல் உத்தரவாதமும், இரு தரப்பு மத்தியிலும் நிலவும் பகையினதும் கசப்பினதும் பின்புலத்தில் வாழ்வதில் இருந்து இந்த மக்களை மீட்டெடுப்பதுமேயாகும். இதனைத்தான் இவர்கள் செய்ய வேண்டும். மக்களை உண்மையாக நேசிக்கும் தலைமைகளின் பணி இதுதான் என்பதைதான் இரு இனத்திலுமுள்ள தரப்புகள் கவனத்திற் கொண்டு வலியுறுத்த வேண்டிய நேரமிது.

மாறாக மேலும் மேலும் இனவாதத் தீயையும், முரண்பாடுகளையும் கூர்மைப்படுத்தி, இரு இனங்கள் மத்தியிலும் தீயை மூட்ட , ஏன் இவ்வளவு ஆக்ரோசமாக இவர்கள் புறப்பட்டுள்ளார்கள்?

Web Design by The Design Lanka