இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு அதிகம் செலவு செய்தவர் » Sri Lanka Muslim

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு அதிகம் செலவு செய்தவர்

IMG_20191108_102401

Contributors
author image

Editorial Team

எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் செலவீனங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டது.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு நிலையமான தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் கொழும்பில் நவம்பர் 5 அன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த விடயத்தை வரலாற்றில் முதல் தடவையாக வெளியிட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளினால் கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையான செலவீனங்களை அந்த நிலையம் வெளியிட்டது.

குறித்த காலப் பகுதியில் மாத்திரம் மூன்று பிரதான கட்சிகளும் சுமார் 962 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 574 மில்லியன் ரூபாய் இந்த காலப் பகுதிக்குள் மாத்திரம் செலவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோன்று சஜித் பிரேமதாஸ போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 372 மில்லியன் ரூபாய் குறித்த காலப் பகுதியில் மாத்திரம் செலவிட்டுள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுர குமார திஸாநாயக்கபடத்தின் காப்புரிமைJVP
Image captionஅநுர குமார திஸாநாயக்க

அதேபோன்று அநுர குமார திஸாநாயக்க போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி இந்த காலப் பகுதியில் 16 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

அச்சு ஊடகம், ஒளிபரப்பு ஊடகம், சமூக ஊடகம் மற்றும் ஏனைய செலவுகள் (கூட்டங்கள், ஊர்வலங்கள், காட்சிப் பொருட்கள், அரச சொத்துகளின் துஷ்பிரயோகச் செலவுகள்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் இந்த செலவீன அறிக்கையை தயாரித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) ஆகியன ஒளிபரப்பு ஊடகத்திற்காகவே அதிகளவிலான செலவீனங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒளிபரப்பு ஊடகத்திற்காக 456 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 219 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளது.

அதேபோன்று தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) ஒளிபரப்பு ஊடகத்திற்காக 4 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கள ரீதியான பிரசாரத்திற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 76 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ள அதேவேளை, புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) கள ரீதியான பிரசாரத்திற்கு 85 மில்லியன் ரூபாவை செலவீனம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி கள ரீதியான பிரசாரத்திற்காக 11 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளது.

அத்துடன், அச்சு ஊடக பிரசாரத்திற்காக புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 68 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அச்சு ஊடகத்திற்காக 42 மில்லியன் ரூபாயை செலவீனம் செய்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) அச்சு ஊடகத்திற்காக ஒரு மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் குறிப்பிடுகின்றது.

Web Design by The Design Lanka