இம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்! » Sri Lanka Muslim

இம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்!

votes

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Purujoththman thangamayl

“…நாட்டில் யுத்தம் நீடித்த காலத்திலும், அதன் பின்னரான ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்திலும் ஜனநாயக ஆட்சிமுறையின் கூறுகளை வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தென் இலங்கை மக்களும் உணர்ந்திருக்கவில்லை. அடக்குமுறையை ஆட்சிமுறையின் ஒரு அங்கமாகவே மக்கள் கருதினார்கள். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் ஜனநாயக ஆட்சிமுறையின் சில உண்மையான தன்மைகளை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனை இழப்பதற்கு யாரும் விரும்பவில்லை…” என்று குருநாகலைச் சேர்ந்த பட்டப்படிப்பு மாணவன் ஒருவன் தன்னிடம் கூறியதாக, ஜனாதிபதித் தேர்தல் குறித்த உரையாடலொன்றின் போது, வெளிநாட்டு வாழ் இலங்கைப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.

இருக்கின்ற ஜனநாயக வெளியைக் குறைத்துக் கொள்வதற்கோ, அரசியல் வெளியை இருட்டாக்கிக் கொள்வதற்கோ எந்தவொரு சாமானிய மனிதனும் விரும்பமாட்டான். அதிகாரத்தை அடைவதற்காக குறுக்கு வழிகளை நாடும் கயவர்களுக்கும், அவர்களின் ஒத்தோடிகளுக்கும் வேண்டுமானால், ஜனநாயக வெளியை மட்டுப்படுத்துவதற்கான தேவை இருக்கலாம். அப்படிப்பட்ட கயவர்களையும், ஒத்தோடிகளையும் அடையாளம் கண்டுகொள்வதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தை இந்த ஜனாதிபதித் தேர்தலும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இப்படித்தான், இந்தப் பத்தியை ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.

தேர்தல்களில் பங்கெடுப்பதும், பகிஷ்கரிப்பதும் ஜனநாயகத்தில் அடிப்படை உரிமையே. அதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. ஆனால், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில், எப்படியாவது அதனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்றே மக்கள் துடிப்பார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில், தேர்தல் பகிஷ்கரிப்புக் கோசத்தோடு அலைபவர்கள் ஜனநாயக வெளியை காணாமலாக்கப் புறப்பட்ட பேய்களாகவே தோன்றுவார்கள். சில காலமாக ஜனநாயக வெளியை அழிக்கும் பேய்களாக தெரிந்தவர்கள், திடீரென்று இன்னொரு நாளிலோ, இன்னொரு தேர்தலிலோ ஜனநாயகத்தின் காவலர்களாக, அரசியல் தலைமைகளாக தெரிவதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு.

இந்த ஜனாதிபதித் தேர்தல் ‘சஜித் எதிர் கோட்டா (ராஜபக்ஷக்கள்)’ என்கிற இருமுனைப் போட்டியே. மூன்றாவது வேட்பாளர் என்கிற விடயம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மேலெழவில்லை. அடுத்த பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தேசிய மக்கள் சக்தியாக குதித்தது. ஆனால், தேர்தல் களம், இருமுனைப் போட்டியாக மாறியதுடன், வாக்குகளைப் பிரிக்கும் அச்சுறுத்தலையே அநுர குமார திசாநாயக்க மேற்கொண்டிருக்கிறார் என்கிற விமர்சனத்தையும் எழ வைத்தது. இதனால், ஜனநாயக வெளியை அச்சுறுத்தலான பக்கத்தில் தள்ளுவதற்கான ஏற்பாடுகளை ஜனநாயக கோசம் போடும் ஜே.வி.பியும் செய்துவிட்டது. அது, அவர்களை அரங்கிலிருந்து அகற்றிவிடும் அளவுக்கான பின்னடைவை ஏற்படுத்தக்கூடியது.

அநுர பெறப்போகும் வாக்குகள் ராஜபக்ஷக்களுக்கு எதிரானவை என்கிற கருதல் தென் இலங்கையில் உண்டு. அது, வெற்றி வேட்பாளர் ஒருவருக்கான வாய்ப்புக்களை குறைக்கும் வேலையைச் செய்வதாகும். அதனால், சஜித்தின் வெற்றிவாய்ப்பை அநுர திட்டமிட்டுத் தடுத்துவிட்டதான கோபம் தென் இலங்கையில் பிரதிபலிக்குமாக இருந்தால், அவர்களின் பொதுத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புக்களையும் கலைத்துவிடும்.

ராஜபக்ஷக்களை 2005ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தில் ஏற்றியதில், தமிழ் மக்களின் தேர்தல் பகிஷ்கரிப்பும், ஜே.வி.பியின் இனவாத கோசமும் பிரதான பங்கை ஆற்றின. ஆனால், அதற்குப் பின்னரான பத்து ஆண்டுகளில் அதிகமாக பழிவாங்கப்பட்டது, தமிழ் மக்களும், ஜே.வி.பி.யும் தான். தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் கோரங்கள் முதல், கடத்தல்கள், படுகொலைகள் என்கிற பெரும் அச்சுறுத்தலை தொடர்ச்சியாக எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஜே.வி.பியைப் பொறுத்தளவில் அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு கட்சியை சிறுசிறு துண்டுகளாக ராஜபக்ஷக்கள் உடைத்து எறிந்தார்கள். அப்படியான கட்டத்தில், ராஜபக்ஷக்களின் மீள் எழுகை என்பது, ஜே.வி.பி.யை இன்னும் இன்னும் சிதறடிக்கவே செய்யும். அதனை, ஜனாதிபதித் தேர்தலில் இறுதி நாட்களில் உணர்ந்துகொண்டுதான், அநுரவும், அவரது தோழர்களும் ராஜபக்ஷக்களுக்கு எதிரான பிரச்சாரங்களை முதன்மைப்படுத்தியிருக்கிறார்கள். அத்தோடு, இரண்டாவது விருப்பு வாக்கை ராஜபக்ஷக்களுக்கு எதிராக பிரயோகிக்குமாறும் மறைமுகமாக கூறுகிறார்கள்.

வடக்கு- கிழக்கைப் பொறுத்தளவில், தேர்தல் பகிஷ்கரிப்புக் கோஷ்டிகளும், சுயேட்சை வேட்பாளர்களான சிவாஜிலிங்கம் மற்றும் ஹிஸ்புல்லா அணியினரும் ராஜபக்ஷக்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக மேலெழுந்திருக்கின்றர்கள். தமிழ், முஸ்லிம் மக்களைப் பொறுத்தளவில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான அலை என்பது இன்று நேற்று உருவான ஒன்றல்ல. அது, தசாப்த காலம் தாண்டி வீசிக்கொண்டிருப்பது. அத்தோடு, அந்த அலை ஒரே நாளில் எழுந்த ஒன்றல்ல, பெரும் அடக்குமுறைகளையும், அச்சுறுத்தலையும் எதிர்கொண்டதால் எழுந்தது. அதனை, அடக்குவது என்பது இலகுவானதல்ல.

எப்போதுமே, ராஜபக்ஷக்களுக்கு நேரடியாக ஆதரவளிப்பவர்களைவிட, மறைமுக ஆதரவளிப்பவர்களையே மக்கள் அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள். அதனை, பொதுத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் மக்கள் பிரதிபலிக்கவும் செய்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் ராஜபக்ஷக்களை நேரடியாக ஆதரிக்கும் டக்ளஸ் தேவானந்தாவால் பொதுத் தேர்தலில் பெற்றிபெற முடிகின்றது. அங்கஜன் இராமநாதன் முதல் தடவையிலேயே 12,000 வாக்குகளைத் தாண்டிப் பெற முடிகின்றது. ஆனால், ராஜபக்ஷக்களின் மறைமுக ஆதரவாளர்களை மக்கள் இனங்கண்டு தோற்கடிக்கிறார்கள்.

இந்தத் தேர்தலிலும் ராஜபக்ஷ அணியில் டக்ளஸ், வரதராஜப்பெருமாள், ஹசன் அலி, பஷீர், அதாவுல்லா உள்ளிட்ட தரப்பினர் இருக்கிறார்கள். இதில், டக்ளஸ் தவிர்ந்த அனைவரையும் மக்கள் கடந்த தேர்தல்களில் நிராகரித்திருக்கிறார்கள். அவர்களும் வேறு போக்கிடமின்றியே ராஜபக்ஷக்களிடம் சரணடைந்திருக்கிறார்கள். அதனை, மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால், அவர்களால் பெரும் அச்சுறுத்தல் இல்லை. ஆனால், ஜனநாயக வெளிக்கு அச்சுறுத்தலான தரப்புக்களின் எழுச்சிக்கு, மறைமுகமாக உதவும் தேர்தல் பகிஷ்கரிப்புக் கோஷ்டிகளும், தமிழ்- முஸ்லிம் வாக்குகளை மறைமுகமாக பிரிக்கக் கிளம்பியிருக்கும் கோமாளி வேடத்தில் இருக்கும் வில்லன்களையும் காணும் போதுதான் பெரும்பயம் ஏற்படுகின்றது.

அரசியல் தலைமைத்துவம் என்பது, மக்களை அச்சுறுத்தல்களுக்குள் தள்ளாமல் நேர்வழிப்படுத்துவது. எதிர்காலங்கள் குறித்த நம்பிக்கைகளை விதைக்க வேண்டியது. ஆனால், மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, நாங்கள் செல்லும் பாதைதான் சரியானது என்கிற வீம்பும், அதற்கான செயற்பாடும், அரசியல் தலைமைத்துவத்தின் தன்மைகள் அல்ல. அத்தோடு, மக்களின் மனங்களையும், எதிர்பார்ப்புக்களையும் புறந்தள்ளிக்கொண்டு செய்யப்படும் அரசியலால் யாருக்கும் நன்மை ஏற்படப்போவதில்லை. அது, பெரும் தீமைகளையே கொண்டுவந்து சேர்க்கும். அப்படியான கட்டமொன்றிலேயே, இன்றைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், அதன் ஆதரவுத் தரப்பினரும் நிற்கின்றார்கள். இவ்வாறான நிலைப்பாட்டில் அவர்கள் நிற்பது, புதிதில்லைத்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் மக்கள் பாடம் புகட்டினாலும், அதனைப் படிக்காது, குறுகிய சிந்தனையோடு வீம்பு பிடிக்கும் போது, அதனை தட்டிக்கேட்க வேண்டி ஏற்படுகின்றது.

தென் இலங்கையின் அரசியல் சக்திகள், ஆட்சியாளர்கள் எந்தவொரு தருணத்திலும் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை தங்கத்தட்டில் வைத்துத் தந்துவிடப் போவதில்லை. போராடித்தான் அதனை மெல்ல மெல்லப் பெற வேண்டும். அதனைப் பெறுவதற்கான வழிகளின் ஒரு கட்டமாகவே, ஜனநாயக வெளியைத் தக்க வைக்கும் நகர்வுகளையும் காண வேண்டும். ஏனெனில், அடக்குமுறையின் நீட்சி, முள்ளிவாய்க்கால் என்கிற பெரும் தோல்வியைக் கண்டிருக்கின்ற தமிழ் மக்களின் மனோதிடத்தை இன்னும் இன்னும் குலைத்துவிடும். அதனால், மனோதிடத்தை தக்க வைப்பதற்கான ஏற்பாடுகளின் போக்கில், ஜனநாயக வெளி காக்கப்பட வேண்டும். அதனை உணர்ந்து அதன்வழி மக்கள் பயணிக்கும் போது, அதற்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளினால் மக்கள் எரிச்சலடைவார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றிபெற்றதும், அரசியல் தீர்வோ, அதிகாரங்களோ உடனடியாகக் கிடைத்துவிடப்போவதில்லை. ஆனால், ராஜபக்ஷக்கள் கடந்த காலத்தில் எமக்கு வழங்கிய கொடும் நினைவுகளை, மீள நிகழாமல் தடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால்தான், ராஜபக்ஷக்களைவிட சஜித் என்கிற குறைந்த தீமையை தமிழ், முஸ்லிம் மக்கள் தெரிவாகக் கொள்கிறார்கள். இந்தத் தேர்தல் வாக்களிப்பிலும் அதுவே பிரதிபலிக்கப் போகின்றது. தென் இலங்கையின் தேவைகளும், வடக்கு- கிழக்கின் தேவைகளும் பல தருணங்களிலும் முரண்பட்டுக்கொள்வதுண்டு. அதுதான், அரசியல் பிரச்சினைகளின் அடிப்படையாகவும் இருக்கின்றது. ஆனால், ஜனநாயக வெளி என்பது இரண்டு தரப்பினதும் ஒற்றைத் தேவை. அதனைத் தவிர்த்துவிட்டு, நீதியான ஆட்சியைக் கோர முடியாது.

-தமிழ்மிரர் பத்திரிகையில் இன்று வெளியான எனது பத்தி.

Web Design by The Design Lanka