திருமாவளவன், நெடுமாறன் நாமல் ராஜபக்ஷ அறிக்கைக்கு பதில் » Sri Lanka Muslim

திருமாவளவன், நெடுமாறன் நாமல் ராஜபக்ஷ அறிக்கைக்கு பதில்

IMG_20191120_085818

Contributors
author image

BBC

தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு புத்திமதி சொல்வதைவிட எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அமைதியான பாதுகாப்பான மறுவாழ்வை அளிப்பதற்கு ராஜபக்சே குடும்பம் முன்வர வேண்டும்” என நாமல் ராஜபக்ஷேவின் குற்றச்சாட்டிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ செவ்வாய்கிழமை வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில், தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக கூறியிருந்தார்.

தமிழகத்தில் தங்களது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கை தமிழ் மக்கள் மேல் அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலை கண்ணீர் வடிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கையை தான் அவதானித்ததாகவும் அந்த அறிக்கைகளில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர, வேறேதும் கிடையாது எனவும் அவர் கூறியிருந்தார்.

நமல் ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைNAMAL RAJAPAKSHA/FACEBOOK

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனிடம் கேட்டபோது, “ராஜபக்சே குடும்பத்தின் வெற்றிக்கு தமிழ்நாட்டு தலைவர்கள் வாழ்த்துச் சொல்ல வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கிறார்?” எனக் கேள்வியெழுப்பினார்.

“மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை வேடிக்கையாக உள்ளது. ஈவிரக்கமின்றி அப்பாவித் தமிழர்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்த ராஜபக்சே குடும்பத்திலிருந்து தமிழர்கள் மீது கரிசனம் காட்டும் குரல் ஒலிப்பது வெற்றிக்களிப்பின் ஆணவமாகவே வெளிப்படுகிறது. தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதால் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு என்ன ஆதாயம் கிடைத்து விடும்? ராஜபக்ஷ குடும்பத்தின் வெற்றி, தமிழர்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியதால் ஆத்திரமடைந்துள்ள நாமல் ராஜபக்ஷ எங்கள் மீது தனது ஆத்திரத்தைக் கொட்டியிருக்கிறார்” என விளக்கமளித்தார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலத்தில் நாடாளுமன்ற குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ததையும் இந்த விஜயத்தின்போது அந்தக் குழுவினர் வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சிநேகப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் நாமல் கூறியிருந்தார்.

இது குறித்துப் பேசிய திருமாவளவன், “2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற குழுவில் நானும் ஒருவனாக இலங்கைக்கு சென்றிருந்தேன். அப்போது மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிங்கள ஆட்சியாளர்களை நேரில் சந்தித்தோம். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் எங்கள் ஆதங்கத்தையும் கவலையையும் பதிவு செய்தோம். அவை மரபு கருதி நாகரீகமான முறையில் எங்கள் வலிகளைப் பகிர்ந்துகொண்டோம். ” என்றார்.

மேலும், “ராஜபக்சேவைச் சந்தித்தபோது, என்னை விரல் நீட்டி சுட்டிக்காட்டி திருமாவளவன் போன்றவர்கள் எல்டிடிஇ தரப்பு கருத்தை மட்டும் கேட்கிறார்கள். எங்கள் தரப்புக் கருத்தை கேட்டதேயில்லை. எங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துகிறார்கள் என்று பேசினார். விடைபெறும்போது மறுபடியும் என்னைச் சுட்டிக்காட்டி போர் நடக்கும்போது பிரபாகரனோடு இவர் வன்னியில் இருந்திருந்தால் இவரும் மேலுலகம் போயிருப்பார் என்றும் நக்கலடித்தார். அந்த அளவுக்கு என் மீது உள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் அவை நாகரீகம் கருதி அமைதியாக விடைபெற்றோம். ராஜபக்ஷவுடன் நடந்த உரையாடல் இப்படித்தான் இருந்தது. இன்றைக்கு நாமல் ராஜபக்சே சொல்வதைப் போல அது சினேகமாக உரையாடல் அல்ல.” என விளக்கமளித்தார் திருமாவளவன்.

திருமாவளவன்படத்தின் காப்புரிமைFACEBOOK

“இன்றைக்கு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் ராஜபக்ஷ குடும்பம் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு புத்திமதி சொல்வதைவிட எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அமைதியான பாதுகாப்பான மறுவாழ்வை அளிப்பதற்கு முன்வர வேண்டும். அங்கு நிலைகொண்டிருக்கிற ராணுவத்தைத் திரும்பப் பெற்றும் சிங்கள மயமாதலை திரும்பப் பெற்றுக் கொள்வதுடன் சிங்களக் குடியேற்றத்தையும் சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளையும் கைவிடுவதற்கு முன்வரவேண்டும்” என்றும் நாமலின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார் திருமாவளவன்.

நாமல் ராஜபக்ஷவின் அறிக்கை, ‘சாத்தான் வேதம் ஓதுவதைப் போல இருப்பதாக’ தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கூறியிருக்கிறார்.

“அப்பாவிச் சிங்கள மக்களுக்கு இனவெறியை ஊட்டி, அவர்களை இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்டு அரசியல் நடத்துகிற ராஜபக்ஷ கும்பல் எத்தகையது என்பதை உலகம் நன்கு அறிந்திருக்கிறது. மனித உரிமை ஆணையத்தால் போர் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் மகனிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” என பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka