புத்திஜீவீகளின் கூப்பாடு.... » Sri Lanka Muslim

புத்திஜீவீகளின் கூப்பாடு….

IMG_20191120_202613

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஒவ்வொரு சமூகத்திலும் புத்திஜீவிகள் அல்லது துறைசார் அமைப்புகள் உள்ளன. அவர்களது தொழில்சார் வாழ்வில் பிஸியாகவே செயற்படுவர்.

பஸ்ஸில் பயணிக்கும் போது அவசரத்துக்கு பஸ்ஸை நிறுத்தி இயற்கைத் தேவையை நிறைவேற்றுவது போன்று சமூகம் சார்பில் சிலர் அவ்வப்போது கருத்துக்களையும் சிறுசிறு கலந்துரையாடல்களையும் செய்வர். அது தினசரிப் பத்திரிகைகளின் ஒரு ஓரத்தில் புகைப்படத்துடனான செய்தியாகவும் முகநூலில் தெளிவான புகைப்படத்துடணும் வெளியிடப்படும்.

இங்கு பிரச்சினை அதுவல்ல. அவர்களுக்கும் ஜனநாயக உரிமையுண்டு. அதனை கேள்விக்குட்படுத்த முடியாது.

பிரச்சினை யாதெனில், ஒரு சமூகம்/ மக்கள் எடுத்த நிலைப்பாட்டை குறிப்பாக அரசியல் ரீதியான தீர்மானங்களை புத்திஜீவீகள் போன்ற இவர்கள் விமர்சிப்பதையும் தாண்டி, அச்சமூகத்தை சாபமிடுவது மட்டுமல்லாது நிலைப்பாடு என்பதற்கு பிழையான வியாக்கியானத்தையும் வழங்கிவருவது.

புத்திஜீவிகள் பலரது அரசியல் நிலைப்பாட்டின் வரைவிலக்கணம் #அண்டிப்பிழைத்தல் என்பதாகிவிட்டது. இது அவர்களுக்கு தன் சமூகத்தின் மீதிருந்த அளவு கடந்த அன்பினால் வந்திருந்தாலும் பிழைதான்.

52.5% மக்கள் ஆதரித்த வேட்பாளரை 47.5% மக்கள் ஏன் ஆதரிக்கவிலையென்று கேள்வியெழுப்புவது ஜனநாயக மீறல்.

இங்கு புத்திஜீவிகள் ஆராய வேண்டியது 52.5% மக்கள் ஏன் அவரை ஆதரித்தனர். 47.5% மக்கள் ஏன் ஆதரிக்கவில்லை. அதேபோன்று தோல்வியுற்ற வேட்பாளரையும் ஆராயவேண்டும். அதைவிடுத்து கட்சியொன்றின் அடிமட்ட ஆதரவாளன் போல் புத்திஜீவிகள் என்போர் செயற்படுவது/கருத்து வெளியிடுவது ஆரோக்கியமற்றது.

அரசியல் ரீதியான நிலைப்பாடுகள் மனசாட்சியோடு எடுக்கப்பட வேண்டும். அது பன்றிச் சின்னத்திற்கு வாக்களிப்பதாயினும் கூட. இருவேறு சின்னங்களுக்கு இருவர் வாக்களித்திருப்பர். நிலைப்பாட்டு ரீதியில் அவர்களைப் பொறுத்தவரை அவர்களது தீர்மானம் சரியாகவே இருக்கலாம். அவர்களது ஜனநாயக உரிமையை கேள்விக்குட்படுத்த யாருக்கும் உரிமையில்லை.

புத்திஜீவீகளின் கடமைப்பாடு ஒவ்வொரு நிலைமைகளிலும் மக்களுக்கு வழிகாட்டுவது. ஒரு நிலையில் (Stage) தாம் எதிர்பார்த்த விளைவு கிடைக்கவில்லையென்பதற்காக அதனையே மீண்டும் மீண்டும் சொல்லிக் காட்டி “நாம் சொன்னோம் கேட்டீங்களா” என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது சிறுபிள்ளைத்தனமானது.

சமூக வாழ்க்கையில் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இப்போதைய இலங்கை சூழலில் புத்திஜீவிகளின் பங்களிப்பு அத்தியவசிய தேவையாகவுமுள்ளது. இனங்களுக்கிடையில் தப்பபிப்பிராயங்களை களைந்து, உறவுகளை கட்டியெழுப்பும் பாலம் புத்திஜீவிகள்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

எம். ஐ.ஸாஹிர்
20.11.2019

Web Design by The Design Lanka