ஒப்பந்தக்காரராக அதாவுல்லாஹ் என்கிறார் வேலுகுமார் » Sri Lanka Muslim

ஒப்பந்தக்காரராக அதாவுல்லாஹ் என்கிறார் வேலுகுமார்

IMG_20191126_125856

Contributors
author image

Editorial Team

தமிழ், முஸ்லிம் மக்களை பிரித்தாளும் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் ஒப்பந்தக்காரராகவே  அதாவுல்லாஹ் செயற்பட்டுவருகிறார்.  இதன்ஓர் அங்கமாகவே மலையகத் தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்” என்று, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியாக செயற்படவேண்டிய இந்தகாலகட்டத்தில், அவர்கள் மத்தியில் பிரிவினையை விதைக்கும் வகையிலான அரசியல் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மலையகத் தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள அதாவுல்லாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி வேலுகுமார் எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையில் காடாக காட்சியளித்த பகுதிகளை தமது கடின உழைப்பால் வளம்மிக்க பகுதிகளாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்களே! அதுமட்டுமல்ல இலங்கையின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுத்ததுடன், நாட்டின் முன்னேற்றத்துக்காக பலவழிகளிலும் உழைத்துள்ளனர்.

எனவே, பெருந்தோட்டத்துறையின் காவல்தெய்வங்களாக கருதவேண்டிய எமது மக்களை, மாறுபட்ட கோணத்தில் விமர்சிப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பல ஆண்டுகளாக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக பதவிவகித்த  அதாவுல்லாஹ், மலையக மக்களுக்காக எதனையும் செய்யவில்லை. அவர்களுக்காக அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. இவ்வாறு ஆட்சி அதிகாரம் கைவசம் இருந்தபோது எமது மக்கள் குறித்து எதையும் கதைக்காத – அவர்களின் நலன்கள் பற்றி சிந்திக்காத  அதாவுல்லாஹ் போன்றவர்களுக்கு தற்போது திடீரென சுடலை ஞானம் பிறந்துள்ளதன் பின்னணி என்ன?

தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால் மாத்திரமே இனிவரும் காலப்பகுதியில் உரிமைகளை வெல்லக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அரசியல் இருப்பையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இதனை மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன.

இந்தநிலையில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மோதல்களை உருவாக்கி அவர்களின் பேரம் பேசும் சக்தியை சூனியமாக்குவதற்காக பேரினவாதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களை நிறைவேற்றும் ஒப்பந்தக்காரர்களாக  அதாவுல்லாஹ் போன்ற மூத்த அரசியல்வாதிகள் செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.

அற்பசொற்ப சலுகைகளுக்காக தனது சமூகத்தை காட்டிக்கொடுப்பதுடன், ஏனைய சமூகங்களையும் சீண்ட முற்படுவதானது சாக்கடை அரசியலின் உச்சகட்டமாகும் என்பதை அதாவுல்லாவுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இலங்கையின் அரசியல் கலாசாரம் இன்னும் மாறவில்லை என்பதையே அதாவுல்லாவை மையப்படுத்திய சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. பொதுவெளியில் எவ்வாறு கதைக்க வேண்டும், எவ்வாறு செயற்பட வேண்டும் என தெரியாத அதாவுல்லா போன்றவர்கள், தங்களை தலைவர் என கூறிக்கொள்வது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

அதேவேளை, எந்தசூழ்நிலையிலும் தன்மானத்தையும், தன்சமூகத்தையும் விட்டுக்கொடுக்காத  மனோ கணேசன். பொறுமையாகவும், நிதானத்துடனும் செயற்படக்கூடிய எங்கள் தலைவர், அன்று பொறுமையிழந்து பொங்கியெழுந்ததுகூட சமூகத்துக்காகவே.

விவாதத்தில் பங்கேற்றிருந்த  அதாவுல்லாஹ், சபை நாகரீகம்கூட தெரியாமல் தொடர்ச்சியாக எம்சமூகம் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டதன் விளைவே இது.

அத்துடன், தொடர்ந்தும் தமிழ் மக்களின் காவலனாக செயற்படும் தலைவர் மனோ கணேசனின் துணிச்சல்மிக்க நடவடிக்கைகளை பாராட்டுகின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Web Design by The Design Lanka