கோட்டாபய அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம் பெறாதது ஏன்? » Sri Lanka Muslim

கோட்டாபய அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம் பெறாதது ஏன்?

IMG_20191127_215116

Contributors
author image

BBC

இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத நிலையில், இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களிலும் முஸ்லிம் ஒருவரேனும் இடம்பெறவில்லை என்பது, முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதிலும், அதில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லை. ஆனால், டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகத் தொண்டமான் என தமிழர் இருவர் – அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக முஸ்லிம்கள் நியமிக்கப்படலாம் எனும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆயினும், இன்று வழங்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர் பதவிகளிலும் முஸ்லிம்களுக்கு இடம் வழங்கப்படவில்லை.

ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கருத்து

காதர் மஸ்தான்

இது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுடன் பிபிசி தமிழ் பேசிய போது; “முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்படவில்லை என்பதை முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் நாடுகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றன” என்று கூறியதோடு, “அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அல்லது இன்று வழங்கப்பட்ட ராஜாங்க அல்லது பிரதியமைச்சர் பதவிகளுக்கேனும் முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்றார் அவர்.

இருந்தபோதும் அனுபவத்தில் மூத்தவர்கள் என்ற அடிப்படையில்தான் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், அதனால், ஆளுந்தரப்பில் முஸ்லிம்கள் இடம்பெறாமல் போயிருக்கக் கூடும் எனவும் காதர் மஸ்தான் பிபிசி தமிழிடம் கூறினார்.

“இதே வேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததால், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சுப் பதவிகளும் தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார். மறுபுறம், நானும் இந்த தடவைதான் நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர் என்பதால், ஆளுந்தரப்பில் என்னை விடவும் பல மூத்தவர்கள் உள்ளனர்”.

“எனவே அனுபவ முதிர்ச்சி என்ற அடிப்படையிலேயே அமைச்சர், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனாலும், முஸ்லிம் ஒருவர் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்படவில்லை என்பதை, முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் நாடுகளும் அவதானித்துக் கொண்டிருக்கின்றன”.

“இதேவேளை ஆட்சியாளர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. ஆயினும் காலப்போக்கில் இந்தக் குறையை ஆட்சியாளர்கள் நிவர்த்தி செய்வார்கள்” எனவும் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தானுக்கு ஆகக்குறைந்தது பிரதியமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்கிற பேச்சுகளும் எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதியமைச்சர் பைசல் காசிம்

ஃபசில் காசிம்

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் முந்தைய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியை வகித்தவருமான பைசல் காசிம் இது குறித்து கருத்து வெளியிடுகையில்;

“அமைச்சர் பதவிகளுக்கு முஸ்லிம் ஒருவரையேனும் இந்த ஆட்சியாளர்கள் நியமிக்காமல் விட்டதன் மூலம், முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்றார்.

“அமைச்சரவையில் தமிழர்கள் இருவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒருவரேனும் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பைஸர் முஸ்தபா ஏற்கனவே அமைச்சராக இருந்தவர். எனவே, அவரை அமைச்சராக இந்த அரசாங்கம் நியமித்திருக்கலாம். ஆனால், இதனையெல்லாம் செய்யாமல் முஸ்லிம்களை இந்த ஆட்சியாளர்கள் பழிவாங்கியுள்ளதாகவே தெரிகிறது”.

“கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் இரண்டு தரப்பாகப் பிரிந்து வேட்பாளர்களுக்கு வாக்களித்திருந்தனர். ஆனால், அந்த இரண்டு தரப்புக்களும் பௌத்த சமயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்குத்தான் வாக்களித்திருந்தனர். சஜித் பிரேமதாஸவுக்கு நாங்கள் ஏன் வாக்களித்தோம் என்பதும், மற்றைய முஸ்லிம் தரப்பு கோட்டாவுக்கு ஏன் வாக்களித்தனர் என்பதும் அவரவரின் விருப்பமாகும். அதற்காக முஸ்லிம் சமூகத்தை ஆட்சியாளர்கள் பழிவாங்கக் கூடாது” என்றார் அவர்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நடந்த சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு கசப்பை ஏற்படுத்திருந்தது. அதனால்தான் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் கோட்டாவுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்”.

“ஆனாலும் முஸ்லிம்களின் மனதில் உள்ள கசப்பை நீக்குவதற்கான சந்தர்ப்பம் இப்போது ராஜபக்ஷக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனை அவர்கள் செய்து, முஸ்லிம்களின் ஆதரவை வென்றெடுக்க வேண்டும். ஆனால், இவ்வாறு முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்காமல் புறக்கணித்தால், அந்த சமூகத்தின் மனதில் ஏற்பட்டுள்ள கசப்பு மேலும் அதிகரிக்கவே செய்யும்” எனவும் பைசல் காசிம் தெரிவித்தார்.

மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளர் ஜவாத்

காதர் ஜவாத்

கிழக்கு மாகாண சபைின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான கே.எம். ஜவாத் உடன் பிபிசி தமிழ் – இது குறித்து பேசிய போது; “இந்த ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்களை அனுசரித்து, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டக் கூடியவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்” என்றார்.

“நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியவர்கள் இனவாதத்தைத்தான் தமது மூலதனமாக்கியிருந்தனர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இனவாதப் பல்லவியைத்தான் ஆட்சியாளர்கள் பாடப் போகிறார்கள். அதற்காகத்தான், தமது அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காமல் புறக்கணித்துள்ளனர்”.

இதன் மூலம், தமது அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று, சிங்களப் பேரினவாதிகளுக்கு காட்டுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், இந்த இனவாதம் அடுத்த தேர்தலில் தோற்கடிக்கப்படும். தமிழர்களும் முஸ்லிம்களும் இன்றி, நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையைக் கூட, இந்த ஆட்சியாளர்களால் பெற முடியாத நிலை ஏற்படும்”.

“மறுபுறமாக, முஸ்லிம்களை இவ்வாறு புறக்கணித்ததன் மூலம், இலங்கையில் சிறுபான்மையினர் சார்ந்த விடயங்களில் நியாயமாக நடந்து கொள்ளக் கூடிய ஆட்சியாளர்கள் இன்னும் வரவில்லை என்பதை, உலக நாடுகளுக்கு, தற்போதைய ஆட்சியாளர்கள் நிரூபித்திருக்கின்றனர்” என்றார்

Web Design by The Design Lanka