அடுத்த நாடாளுமன்ற தேர்தலில்... » Sri Lanka Muslim

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில்…

IMG_20191129_220656

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கட்டுரையாளர் – பஷீர் சேகுதாவுத்

2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளித்து தோல்வி கண்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளும் எதிர்வரும் மே 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைத்து தேர்தல் கேட்கும் வாய்ப்பே அதிகமுள்ளது.

சஜித் தாடி வளர்த்தபடி வீட்டுக்குள் முடங்கி கிடப்பதாகவும் தகவல் உள்ளது.ரணில் கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் நிலைத்தால் இவ்விரு கட்சிகளின் கதை கந்தலாகி கிழிந்து தொங்கிவிடும்.இக்கட்சிகளின் தலைவர்கள் ரணிலை ஓரங்கட்ட எடுத்த நடவடிக்கைகளை இலகுவில் மறப்பாரா ரணில்?

இக்கட்சிகள் இரண்டும் இணைந்து கூட்டமைத்து தனியாக தேர்தலில் களமிறங்குவதிலும் ஓர் இக்கட்டு உண்டு.
கூட்டணியின் செயலாளரே அதிகாரமுள்ளவர் என்பதனால் எக்கட்சியின் உறுப்பினர் கூட்டமைப்பின் செயலாளர் என்பதில் உடன்பாட்டை எட்டுவது கடினமாகும்.இவ்வுடன்பாடு எட்டப்பட்டாலும்; இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பினூடாக எந்த மாவட்டத்தில் வேட்பாளர்களாக களமிறங்குவது என்பதில் இழுபறி ஏற்படும் நிலை உள்ளது.ஏனெனில் அவர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ள மாவட்டங்களைத் தேடிப்பிடிப்பது முயற்கொம்பாகும்.

கண்டியில் கிண்டியும் கிடைக்காது. மன்னாரில் முன்னர் போல் இனி வாய்ப்பில்லை. ஜனாதிபதி தேர்தல் முடிவின் பின் உடனடியாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நவம்பர் 26 இல் சஜித் பெற்ற முஸ்லிம் வாக்குகளில் 40% மஹிந்த தரப்புக்கு மாறிவிடும் என்பதனால் மேற்சொன்ன களநிலையை தலைவர்கள் எதிர்கொண்டேயாகவேண்டும்.

அடுத்த நாடாளுமன்றில் இரு தலைவர்களும் உறுப்பினர்களாக இல்லாதிருக்கவும் கூடும்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளில் ஒன்றைத்தானும் இவ்விரு கட்சிகளுக்கும் ஐ.தே.கட்சி வழங்கமாட்டாது. ஏனெனில்; இக்கட்சிகளும் இவற்றின் உறுப்பினர்களும் தேர்தலின் பின்னர் மஹிந்தவின் அரசாங்கத்துடன் இணைந்து விடுவார்கள் என்ற பயம் அக்கட்சிக்கு உண்டு.

தேர்தலில் வெல்வதற்கு ஐ.தே.கட்சியை பாவித்துவிட்டு அரசமைக்கும் தரப்புடன் இணைந்து அமைச்சர்களாவது இவர்களின் கடந்த கால வரலாறு என்பதை பச்சைக் கட்சி அறியாததல்ல.

தலைவர்களையும்,கட்சிகளையும் “அம்போவென” தள்ளிவிட்டு தன்னோடு தனித்தனியாக இணைய வரும் இவ்விரு கட்சிகளிலும் வெல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மஹிந்த இணைத்துக்கொள்வார் என நம்பலாம்.அவருக்கும் நாட்டை ஒற்றுமையாக கொண்டு செல்ல ஒரு வியூகம் தேவையல்லவா? உலகுக்கு காட்ட சுட்டுவிரல்கள் சில வேண்டுமல்லவா?

Web Design by The Design Lanka