கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம் » Sri Lanka Muslim

கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

exam

Contributors
author image

Editorial Team

2019 ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

நாடு முழுவதிலும் நாலாயிரத்து 987 மத்திய நிலையங்களில் நடைபெறும்; இந்தப் பரீட்சையில் ஏழு ,இலட்சத்து 17 ஆயிரத்து எட்டுப் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

வரலாற்றிலேயே கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இம்முறையே ஆகக் கூடுதலான பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.

பரீட்சைக்காக இம்முறை எட்டு விசேட மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மெகசீன் சிறைச்சாலை, மஹரகம அபெக்சா வைத்தியசாலை, ஹோமகம வட்டரெக்க நன்நடத்தை கைதிகளுக்காக சுனித்தா வித்தியாலயத்திலும் பரீட்சை நடைபெறவுள்ளது.

விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்காக இரத்தமலானை ஊனமுற்றோருக்கான வித்தியாலயத்திலும், தங்காலை, சிலாபம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களிலும் விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை ஆரம்பமாகும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் 7 மாணவர்களுக்காக காத்மண்டு நகரில் விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சை அனுமதி அட்டையுடன் ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கு மேலதிகமாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் புகைப்படத்தை உறுதி செய்து தனிப்பட்ட தரவுகளை உள்ளடக்கிய கடிதமும் ஏற்றுக் கொள்ளப்படும்

Web Design by The Design Lanka