தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகிறது; வெளிநாட்டலுவல்கள் அமைச்சு » Sri Lanka Muslim

தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகிறது; வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

IMG_20191202_090913

Contributors
author image

Editorial Team

இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தூதரகத்தினால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

ஊடக அறிக்கை

சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பானதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்கள்

2019 நவம்பர் 25 திங்கட்கிழமை இடம்பெற்ற கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தி, இந்த விடயம் குறித்த முழுமையான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட்டது.

இன்று மாலை (2019 டிசம்பர் 01) பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதுவர் ஹேன்ஸ்பீட்டர் மொக் மற்றும் தூதரகத்தின் பிரதித் தலைவர் ஆகியோரை சந்தித்து, பொலிஸ் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) விசாரணையின் முடிவுகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்தனர்.

2019 நவம்பர் 29 வெள்ளிக்கிழமை சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளின் கோரிக்கையின் பேரிலன்றி, குறித்த பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபருடன் நேர்காணலில் ஈடுபடுவதற்கு தூதரகம் அவரை முற்படுத்தவில்லை என்றாலும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் சார்பாக சுவிஸ் தூதரகத்தினால் சி.ஐ.டி. க்கு முறையாக முன்வைக்கப்பட்ட சம்பவங்களின் வரிசை மற்றும் குறித்த சம்பவத்தின் காலவரிசை ஆகியன சாட்சியுடனான நேர்காணல்கள் மற்றும் உபெர் பதிவுகள், சி.சி.டி.வி. காட்சிகள், தொலைபேசிப் பதிவுகள் மற்றும் ஜி.பி.எஸ். தரவுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப சான்றுகளின் அடிப்படையில், குறித்த தினத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் உண்மையான நகர்வுகளுடன் எந்த வகையிலும் ஒத்துப்போகவில்லை என்பது தொடர்பான தெளிவான சான்றுகள் தூதுவருக்கு வழங்கப்பட்டன.

சுவிஸ் தூதரகத்துக்கு சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகள் முன்வைத்த உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், இந்தக் குற்றச்சாட்டைச் சூழவுள்ள உண்மைகளை கண்டறிந்து கொள்வதற்காக மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதுடன், இதற்காக குறித்த பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளால் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டல் வேண்டும் என அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

குறித்த கடத்தல் சம்பவத்தின் போது தனக்கு காயம் ஏற்பட்டதாக அந்த பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் தெரிவித்துள்ளதால், அவர் இலங்கையில் உள்ள ஒரு சட்ட மருத்துவ அதிகாரியால் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பான உரிமைக்கோரல்களின் உண்மைத்தன்மையை நிறுவ இலங்கை அரசாங்கத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறு தூதரகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
2019 டிசம்பர் 01

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka