ரணிலின் பாத்திரம் தேவையாகும் - பஷீர் சேகுதாவுத் » Sri Lanka Muslim

ரணிலின் பாத்திரம் தேவையாகும் – பஷீர் சேகுதாவுத்

ranil

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இலங்கை உலகிலிருந்து துருவமயப்படுவதை தவிர்க்க ரணிலின் பாத்திரம் தேவையாகும்
***********************

நாடாளுமன்றம் எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி வரை ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் நாடாளுமன்றில் அக்கிராசன உரை நிகழ்த்துவதற்கு வசதியாக பாரம்பரிய அடிப்படையில் இவ்வொத்தி வைப்புக்கு அரசமைப்பில் வசதி செய்யப்பட்டிருந்தாலும்; ஜனாதிபதிக்கு நாடாளுமன்றில் நெருக்கடி ஏற்படுகிற வேளைகளில் அதனைக் கையாளுவதற்கு வசதியாக இவ்வரசமைப்பு சரத்து உபயோகப்படும் வகையில் ஜே.ஆரினால் வடிவமைக்கப்பட்டது.

பிரேமதாச தனக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டு வரப்படவிருந்த ஒழுக்கவழுப் பிரேரணையை கையாழுவதற்காக அவர் நாடாளுமன்றத்தை ஒரு முறை ஒத்திவைத்திருந்தார்.நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை ஏற்படுத்தப்பட்ட பின்னர் பல தடவைகள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமையை காணமுடிகிறது.

ஜனாதிபதி கோத்தபாயவினால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது, அது மீள ஆரம்பிக்கும் போது அவர் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள தனது கொள்கைத்திட்ட அக்கிராசன உரையை நிகழ்த்துவதற்கானதாக இருக்கிறது.

ஆயினும்; ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான நெருக்கடியை எதிர்நோக்கும் இவ்வேளையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை கையாள்வதற்கான கால அவகாசத்தை அவருக்கு பெற்றுக்கொடுக்கும் உள் நோக்கத்தையும் இவ்வொத்திவைப்பு உள்ளடக்கியுள்ளதா என்று எவரும் சந்தேகிக்க முடியும்.

2)
மஹிந்த ராஜபக்சவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நீண்டகாலமாக ஓர் அரசியல் புரிந்துணர்வு நிலவி வருகிறது. மஹிந்த எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் ரணில் ஆளுங்கட்சி தலைவராக இருந்து கொண்டு மஹிந்த எதிர் நோக்கிய உட்கட்சி பூசல் மற்றும் சேறு பூசல்களில் இருந்து அவரை காப்பதில் உதவி செய்திருக்கிறார்.

இவ்வாறே, ரணில் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் எதிர் நோக்கிய மேற்சொன்ன வகையிலான பிரச்சினைளில் இருந்து விடுபடுவதற்கு மஹிந்த ரணிலுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். ரணில் தற்போது எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக இப்படியொரு உதவிக்கரத்தை இன்று மஹிந்த நீட்டமாட்டார் என்பதற்கில்லை.

ரணில் பிரதமராக பதவி வகித்த கடந்த நான்கரை வருடங்களாக, அவரது கட்சி மற்றும் பங்காளிக் கட்சிகளைச்
சேர்த்த அமைச்சர்கள் செய்த ஊழல்கள்,பெற்றுக்கொண்ட இலஞ்ச இலாவண்யங்கள் பற்றி திணைக்களங்களில் முக்கிய பதவிகள் வகித்த ரணிலின் விசுவாசிகள் அவருக்கு தொடர்ந்தேர்ச்சியாக ஆதாரங்களை வழங்கிவந்தனர்.

இவ்விசுவாசிகள் எழுதிய கடிதங்களளையும், கொடுத்த கோப்புகளையும்; ரணில் மஹிவுக்கு ஒப்படைக்க தயாராக இருப்பதாக அறியமுடிகிறது.

3)
மைத்திரி அரசினால் அன்று புதிதாக உருவாக்கப்பட்ட நிதி ஊழல்கள் மற்றும் மோசடிகளை விசாரிக்கும் எப்.சீ.ஐ.டி பிரிவு கலைக்கப்படாமல் தற்போது பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளமை நிதி மோசடிகளை விசாரிப்பதில் புதிய அரசாங்கம் புதிய அணுகு முறையை அறிமுகப்படுத்தியுள்ளதை தெரிவிக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் பல கோப்புகள் உள்ளமையையும் இவ்விடத்தில் கருத்தில் கொள்ளுதல் முக்கியமாகும். மட்டுமல்ல; அவர் அரசியலில் இருந்து தான் ஓய்வு பெறும் நோக்கமில்லை என்று பகிரங்கமாக அறிவித்திருப்பதும் நோக்கற்பாலது. மத்திய வங்கி கொள்ளையில் ரணிலின் பாத்திரம் இருக்கவில்லை என்பதை மைத்திரி சாட்சி பகரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

மைத்திரி அமைத்த ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் முடிவுகள் தற்போது புதிய ஜனாதிபதியின் நிர்வாகத்துக்கு கிடைத்திருக்கும். மைத்திரியும் மஹிந்தவும் முரண்பட்டிருந்த காலத்திலும்; மைத்திரியும் கோட்டாவும் புரிந்துணர்வுடன் கூடிய நண்பர்களாகவே இருந்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மேலும் ஏப்பிரல் 21 தற்கொலைத் தாக்குதல் பற்றிய நாடாளுமன்ற தெரிவிக்குழு அறிக்கையும், இது தொடர்பாக புதிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட இருக்கிற ஆணைக்குழுவின் எதிர்கால அறிக்கையும் பல முன்நாள் அமைச்சர்களின் அரசியல் திருகுதாளங்களையும் புத்தி பேதலிப்புகளையும் வெளிக்கொணர்ந்து அவர்களை பூச்சியமாக்கிவிடும். சிலவேளை அவர்களை சிறைச் சுவர் பூச்சிகளாக ஆக்கவும் கூடும்.

4)
ரணில் ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஆழுமையாகும். இவர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, சட்டவல்லுனரும், சிறந்த இராஜதந்திரியும், பொருளாதார நிபுணருமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக நூற்றாண்டுகால மேற்குலக நாகரீக மாற்றங்களை உள்வாங்கி செயல்படும் அறிஞர் என்பதை எமது தலைவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இதற்கான அறிவை எமது தலைவர்கள் கொண்டிருக்கவுமில்லை.

மத, இன புறக்கணிப்புவாதத்தையும், கொள்கைப் பிடிவாதத்தையும் தளர்த்தாமல் இலங்கையை காப்பாற்ற முடியாது என்பதை நம்பிய மேன்மகன் ரணில் என்பதை உலகம் நம்பிய அளவு இலங்கையர் நம்பவில்லை.இதனால்தான் மக்கள் தொடர்பில் பலவீனமானவர் என்ற கருத்து தத்துவார்த்தரான ரணிலின் மேல் பூசப்பட்டது.

மேற்குலக மயத்தையும்,நவீனமயமாக்கலையும் ஐயந்திரிபுற விளங்கிக்கொண்ட ரணில் மேற்கு மயமாக்கலை தவிர்த்து நவீனமயமாதலை மட்டும் உள்வாங்கி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்று நம்பினார்.

இந்நம்பிக்கையை அறிஞர்கள் கமாலிசம் என்பர். துருக்கிய அரசியல் மடைமாற்றத்தின் ஞானியான முஸ்தபா கமால் அத்தாதுர்க் அவர்கள் உஸ்மானிய பேரரசின் சிதைவுகளில் இருந்து ஒரு புதிய துருக்கியை உருவாக்கியவராகும்.ரணிலுக்கு கமாலிலின் பாத்திரத்தை வகிக்கும் வாய்ப்பு கிட்டாமை துரதிஷ்டமாகும்.

இலங்கைத் தமிழர்,இலங்கை முஸ்லிம்கள், மலையகத் தமிழர் ஆகிய மூன்று சிறுபான்மையினரின் அரசியல் அபிலாசைகளின் மீது ரணில் அக்கறை கொண்டு அரசியல் செய்தமைக்கு அவர் நம்பிய கோட்பாடுகள் காரணமாயமைந்தன.

5)
ரணில், இலங்கை அரசியலில் இருந்து விலகினால் சிறுபான்மையினர் அடைய இருக்கும் நட்டத்தை இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு முஸ்லிம் மற்றும் மலையக சுய இலாப அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளாதமையால்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் உள் விவகாரங்களில் தலையீடு செய்கிறார்கள்.ரணிலை கட்சியின் தலைமையில் இருந்தும், எதிர்க்கட்சி தலைமையில் இருந்தும் தூக்கி வீச முனையும் ஐ.தே.கட்சி தரப்புடன் இணைந்து இவர்கள் செயல்படுகிறார்கள் .

சிறுபான்மைத் தலைவர்கள் செய்த, செய்கின்ற அரசியல் அறிவீன செயற்பாடுகளினால் தமிழ் பேசும் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக தலைவர்களை பலிகொடுக்கும் படலத்தை எதிர்பார்த்து எதிர்காலம் காத்திருக்கிறது.

6)
ரணில் விக்கிரமசிங்க இலங்கை அரசியலில் இருந்து அவரது மரணம் வரை விலகமாட்டார். அவர் சர்வதேச நிறுவனமொன்றின் பிராந்திய தலைவராகவோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனம் ஒன்றின் தலைவராகவோதான் தனது இறுதிக் காலத்தை உபயோகமாக கழிப்பார்.இக்காலத்துள் இவரது ஆதிக்கம் இலங்கையில் இருந்தேயாகும்.

இதற்காக, புதிய அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத ஆசீர்வாதம் இலங்கையின் சர்வதேச நிலைப்பாட்டில் உள்ளடங்கியுள்ளது.

Web Design by The Design Lanka