கொன்சவேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது » Sri Lanka Muslim

கொன்சவேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது

IMG_20191205_090308

Contributors
author image

Editorial Team

இலங்கையில் இரண்டு இராஜியங்களை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய இராஜியத்தின் கொன்சவேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மணிசா குணசேகர தெரிவித்துள்ளார்.

கொன்சவேடிவ் கட்சிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தீர்மானம் இலங்கையின் நல்லிணக்கத்திற்கு பெரும் குந்தகத்தை ஏற்படுத்தும் என அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பிரித்தானிய பொதுத் தேர்தலுக்காக ஆளும் கன்சவேட்டிவ் கட்சி கடந்த 25 ஆம் திகதி 64 பக்கங்களை கொண்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்தது.

´´உலகம் முழுவதும் நல்லிணக்கம், நிலையான தன்மை மற்றும் நியாயத்தை நிலைநாட்ட தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் அதேவேளை சைப்பிரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் நிலவிய தற்போதைய அல்லது முன்னர் இருந்த முரண்பாடான நிலைமையை தீர்க்க இரண்டு இராஜியங்களை அமைக்க எமது ஒத்துழைப்பு பெறப்பட்டது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இங்கிலாந்துக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கொன்சவேடிவ் கட்சியின் இணைத் தலைவர் ஜேம்ஸ் கிளெவர்லியிடம் கடந்த 27 ஆம் திகதி வினவியதாக தெரிவித்தார்.

அதற்கமைய இலங்கைக்கு இரு இராஜியங்கள் அனாவசியனமானது எனவும் ஆகவே முன்வைக்கப்பட்டுள்ள கொள்கை பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இங்கிலாந்துக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மனிசா குணசேகர கொன்சர்வேடிவ் கட்சிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான ஒரு தீர்வை இதற்கு முன்னர் ஐக்கிய இராஜியத்தின் எந்தவொரு கட்சியும் தமது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டதில்லை எனவும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே இலங்கைக்கு எதிரான கொன்சர்வேடிவ் கட்சியின் நிலைப்பாடு இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டை தொடர்ந்தும் குறைத்து மதிப்பிடுவதாக அமைந்துள்ளதாகவும் அதனை பயன்படுத்தி எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கு சார்பானவர்கள் நன்மையடைய கூடும் எனவும் அவர் தனது கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கொன்சர்வேடிவ் கட்சி வெளியிட்ட குறித்த விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இலங்கையை தொடர்பான அத்தியாய திருத்தத்தை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த கடிதத்திற்கு மின்னஞ்சல் ஊடாக பதில் வழங்கியுள்ள கொன்சவேடிவ் கட்சியின் பதில் தலைவர் போல் ஸ்கல்லி, இலங்கை குறித்த தனது கட்சியின் நிலைப்பாட்டில் எந்தமாற்றமும் ஏற்படவில்லை தெரிவித்துள்ளார்.

இது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இரண்டு இராஜியங்களை அமைப்பது தொடர்பானது எனவும் ஆனால் இலங்கை மற்றும் சைபிரசிஸ் ஆகிய நாடுகள் தொடர்பான பிளவுபட்ட சமூகங்களில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தனது மின்னஞ்சலில் கூறியுள்ளார்.

இதேவேளை கொன்சவேடிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடபட்டுள்ள விடயங்களை கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவும் நேற்று (04) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

Web Design by The Design Lanka