வெட்டுப்புள்ளி அதிகரிப்பு முஸ்லிம்களுக்கு எந்த வகையில் பாதிப்பு? » Sri Lanka Muslim

வெட்டுப்புள்ளி அதிகரிப்பு முஸ்லிம்களுக்கு எந்த வகையில் பாதிப்பு?

parliement

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வை எல் எஸ் ஹமீட்

முஸ்லிம் கட்சிகள் வட கிழக்கிற்கு வெளியே பெரும்பாலும் தேசியக்கட்சிகளுடன் இணைந்துதான் போட்டியிடுகின்றன. எனவே வெட்டுப்புள்ளி அதிகரிப்பினால் முஸ்லிம் கட்சிகளுக்குப் பாதிப்பில்லை. வட கிழக்கில் எந்தவகையில் போட்டியிட்டாலும் பாதிப்பில்லை; என்ற ஒரு கருத்து இன்று சிலரால் முன்வைக்கப்படுகின்றது.

இந்த பாராளுமன்றில் இந்த வெட்டுப்புள்ளி சட்டமூலம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. பொதுத்தேர்தலுக்குப்பின் 70-30 தேர்தல் முறையை அறிமுகப்படுத்த அரசு எதிர்பார்க்கிறது.

அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்றால் தேர்தலின்பின் 2/3 ஐப் பெற்றுக்கொள்வார்கள். அப்பொழுது அதைச் சாத்தியப்படுத்தலாம். சிலவேளை ஆளும் கட்சியில் இருக்கின்ற நம்மவர்களே கண்ணை மூடிக்கொண்டு கையுயர்த்தலாம். வெட்டுப்புள்ளிவீத அதிகரிப்பை நியாயப்படுத்தும் நம்மவர்கள் அதனையும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதற்கில்லை.

தேர்தல்முறை அவ்வாறு மாற்றப்பட்டால் அதன்பின் கிழக்கில் அம்பாறையில் 3 ஆசனம், திருகோணமலையில் 1 ஆசனம். மட்டக்களப்பில் சிலவேளை 1 ஆசனம். எப்போதும் கிடைக்கும்; என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எனவே மொத்தம் 4 அல்லது 5.

வடக்கில் ஒன்றுமில்லை.

தெற்கில் கொழும்பில் 2. (கொழும்பு மத்திய தொகுதி) கண்டியில் 1- ஹரிஸ்பத்துவ. பெரும்பாலும் புத்தளத்தில் 1. ( அதுவும் எல்லை நிர்ணயத்தைப் பொறுத்தது). பேருவளை பெரும்பாலும் நிச்சயமில்லை. எனவே, அதிகூடிய ஆசனம் -4

மொத்தம் 8 அல்லது 9. அதிகூடியதாக 10 இருக்கலாம்.

பேரம்பேசும் சக்தி பூச்சியம். காரணம் இத்தேர்தல் திருத்தத்தின் அடிப்படையே 50% இற்கு குறைவான வாக்குகளைப்பெற்று 50% மேல் ஆசனங்களைப் பெறுவதாகும். எனவே, சிறுபான்மைக் கட்சிகள் ஆட்சியமைக்க தேவையேயில்லை. இவ்வாறு புதிய ஒரு தேர்தல்முறை கொண்டுவருவது சாத்தியமில்லாமல் போனால் இந்த வெட்டுப்புள்ளி அதிகரிப்பையாவது கொண்டுவந்து நிறைவேற்ற முனைவார்கள்.

எனவே, சிறுபான்மைகள் அரசியல் பலமற்ற, அரசியலில் அர்த்தமற்ற சமூகங்களாக மாற்றப்படப்போகின்றார்கள்.

மறுபுறம், முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க தனிநபர் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. அது இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படுமா? என்பது தெரியவில்லை. ஆனால் தேர்தலுக்குமுன் தற்போதைய பிரதம மந்திரி உட்பட மொட்டு அணியின் பலர் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்கள்.

எனவே, குறித்த மசோதா அரசின் நிலைப்பாட்டை அடியொற்றியது. இப்பாராளுமன்றில் நிறைவேற்றத் தவறினால் அடுத்த பாராளுமன்றில் அரசே சிலவேளை நேரடியாக அதனைக் கொண்டுவரலாம். எதிர்காலம் சிறுபான்மையைப் பொறுத்தவரை பொதுவாகவும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை குறிப்பாகவும் மிகவும் இக்கட்டானதாக இருக்கப்போகின்றது.

இந்நிலையில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற சிறியதொரு சந்தர்ப்பம் பொதுத்தேர்தலில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வது. ஆனாலும் முஸ்லிம்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார்கள்? என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

மலையில் சிலை வைத்ததை பிழை கண்டவர்களால் பள்ளி எல்லைக்குள் சிலை வைத்ததை பிழைகாண முடியவில்லை. அரசின் பக்கம் இருக்கும் உறுப்பினர்கள் கொண்டுவந்த அரசின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கின்ற மேற்குறிப்பிட்ட மசோதாக்கள் பிழையாகத் தெரியவில்லை.

முஸ்லிம் பெண்கள் ஒரு குழந்தை பெற்றவுடன் கருத்தடை செய்யவேண்டுமென்ற விமல் போன்றவர்களின் இனவாதக்கருத்துக்கள் பிழையாகத் தெரிவதில்லை. சரத்பொன்சேகா பேசிய கருத்துமட்டும் இனவாதமாகத் தெரிகிறது.

சரத்பொன்சாகே பேசியது இனவாதக்கருத்தே. அதனை எதிர்க்கட்சியிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகளே கண்டித்திருக்கிறார்கள். ஆனால் மேற்படி இனவாதச் செயல்கள், இனவாதக்கருத்துக்கள் இனவாதமாக தெரியாதவர்களுக்கு சரத்பொன்சேகாவின் கருத்துக்கள் மட்டும் இனவாதமாகத் தெரிவது எவ்வாறு? என்பது புரியவில்லை. இருபக்க கறுப்புப் புள்ளிகளில் ஒரு பக்கப்புள்ளி கறுப்பாகவும் அடுத்தபக்க கறுப்பு புள்ளிகள் வெள்ளையாகவும் தெரிவதெவ்வாறு?

இவர்கள் அரசியல் கருத்துக்களை சமூகத்திற்காக இதயசுத்தியுடன் தெரிவிக்கின்றார்களா? அல்லது தான் சார்ந்த தரப்பை எந்தவகையிலும் நியாயப்படுத்தவேண்டும்; எதிரணியின் கருத்துக்களில் பிழை கண்டு அரசியல் செய்யவேண்டும்; என்பது இவர்களது நிலைப்பாடானால் அது மாமூல் அரசியலாக இருக்கலாம். அது எவ்வாறு சமூகத்திற்கான கருத்தாக இருக்கமுடியும்?

இவ்வாறான சூழ்நிலையில் சமூகம் எதிர்கொள்ளப்போகும் சவால்களை எவ்வாறு கையாளப்போகின்றோம். அரசியலில் பல அணிகளாக நிற்பது இயல்பானதாக இருக்கலாம். அதற்காக நமது கருத்துக்கள் மனச்சாட்சிக்கு அப்பால் இருக்கலாமா? சமூகத்திற்கு பாதகமான விடயங்கள் தாம் சார்ந்த அணி செய்யும்போது அதனை சரிகாண்பதும் எதிரணி செய்யும்போது பிழைகாண்பதும் நியாயமா?

எந்தளவு என்றால் மேற்படி தனிநபர் பிரேரணை கொண்டுவந்த உறுப்பினர்கள் கடந்த தேர்தலிலும் தற்போதும் ஆளுந்தரப்பில் இருந்தும் அவர்கள் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டது/ நியமிக்கப்பட்டது ( ஹெல உருமய சார்பில்) ஐ தே கட்சியில் என்பதால் அவர்கள் ஐ தே கட்சிக்காரர்கள் என்று தட்டை மாற்றி தான் சார்ந்த அணிக்கு வக்காலத்து வாங்கும் நிலைக்கு நம்மவர்கள் செல்கின்றார்கள்; என்றால் இந்த சமூகத்திற்கு எப்போது விடிவு கிடைக்கப்போகின்றது? உண்மையில் கவலையாக இருக்கின்றது.

இந்நிலையில்தான் இந்த வெட்டிப்புள்ளி அதிகரிப்பை இவர்கள் ஆதரிப்பதையும் பார்க்கவேண்டி இருக்கிறது.

வெட்டுப்புள்ளி
——————
இந்த வெட்டுப்புள்ளிக் குறைப்புக்கு காரணமாயிருந்தது மறைந்த தலைவர் என்பது நமக்குத் தெரியும். தனக்கெதிராக ரணில் தலைமையிலான ஐ தே க நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அவமானப்படுத்திய சூழ்நிலையில் மனம்புண்பட்டவராக உணர்ச்சிவசப்பட்ட ஒரு சூழ்நிலையில் மறைந்த தலைவர் ‘ ரணில் சாரதியாக இருக்கும்வரை ஐ தே க என்ற வாகனத்தில் ஏறமாட்டேன்’ என்று கூறியவார்த்தைகளை வேதவாக்காக கொள்பவர்கள் ( எல்லோரும் தலைவரின் மறைவிற்குப்பின் ஒரு கட்டத்தில் அந்த வாகனத்தில் பயணித்தவர்கள்தான்) மறைந்த தலைவர் குறைப்பதற்கு காரணமாயிருந்த வெட்டுப்புள்ளி அதிகரிப்பை இன்று ஆதரிப்பது அல்லது அவ்வதிகரிப்பால் பாதிப்பில்லை; என்பது ஆச்சரியமானது.

தமக்கு வசதியான இடத்தில் தலைவரின் வார்த்தைகள் வேதவாக்கு; ஏனைய இடங்களில் அது அர்த்தமற்றது; என்பது இவர்களின் நிலைப்பாடு.

மறைந்த தலைவர் ( மு கா )வட கிழக்கிற்கு வெளியே தனித்தும் போட்டியிட்டிருக்கிறார்; இணைந்தும் போட்டியிட்டிருக்கிறார். கண்டியில் போட்டியிட்டு 5.29% வாக்குகளைப்பெற்று ஆசனமும் பெற்றோம். 12.5% ஆக அதிகரித்தால் சாத்தியமா?

2012 இன் குடிசன மதிப்பீட்டின் படி கொழும்பில் முஸ்லிம்கள் 10.5%, களுத்துறை 9.2%
கண்டி 14%, மாத்தளை 9.1%, குருநாகல 7.1%, புத்தளம் 19.3%, அநுராதபுர 8.2%, பொலன்னறுவை 7.2%, கேகாலை 6.9%

ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒன்றுபட்டு வாக்களித்தாலும் வட கிழக்கிற்கு வெளியே கண்டி, புத்தளம் தவிர்த்து வேறு எங்கும் ஒரு ஆசனமும் பெறமுடியாது வெட்டுப்புள்ளி அதிகரித்தால்.

மாறாக, வெட்டுப்புள்ளி 5% ஆக இருக்கும்போது ஒன்றுபட்டு வாக்குகளித்தால் ஒரு முஸ்லிம்கட்சிமூலம் மேற்குறிப்பிட்ட அனைத்து மாகாணங்களிலும் பெரும்பாலும் ஆகக்குறைந்தது ஒரு ஆசனமும் சில இடங்களிலும் இரண்டு அல்லது சிலவேளை மூன்றும் பெறாலாம்.

முஸ்லிம்கள் இதுவரை அவ்வாறு ஒற்றுமைப்படவில்லை; என்பது வேறுவிடயம். ஒற்றுமைப்பட்டால் அவ்வாறு ஆசனம் பெறக்கூடிய ஒரு பலத்தை உடைக்கமுற்படுவது சரியா?

சரி அவர்கள் இதுவரை ஒற்றுமைப்படவில்லை. அதனால் முஸ்லிம்கட்சிகளும் தேசியக்கட்சிகளிலேயே போட்டியிடுகின்றன. எனவே, வெட்டுப்புள்ளி அதிகரிப்பதால் என்ன பாதிப்பு என்கிறார்கள்.

இதன்மூலம் முஸ்லிம்கள் ஒருபோதும் ஒற்றுமைப்படவே மாட்டார்கள்; என்ற முடிவுக்கு வருகிறார்கள். சமூகத்தின்மீது அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு.

சரி, ஒற்றுமைப்படவே மாட்டார்கள்; என வைத்துக்கொள்வோம். முஸ்லிம்கள் தேசியக்கட்சிகளில் போட்டியிடும் நிலையில் வெட்டுப்புள்ளி பாதிப்பா? ஆம் பாதிப்புத்தான். எவ்வாறு?

வட கிழக்கிற்கு வெளியே இன்னும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தேசியக்கட்சிகளையே, குறிப்பாக ஐ தே க யே ஆதரிக்கிறார்கள். ஒரு 25% அல்லது 30% முஸ்லிம்கட்சிகளை ஆதரிக்கலாம். அந்த வாக்குகளைக்கொண்டு தனித்துப்போட்டியிடும்போது பெரும்பாலும் ஆசனம் பெறுவது சிரமமானது. ஒரு சில சமயங்களில் விதிவிலக்கிருக்கலாம். எனவே, தேசியக்கட்சிகளுடன் போட்டியிடுகிறார்கள்.

தேசியக்கட்சிகளுக்கு இவர்கள் ஏன் தேவை?

அதுதான் விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் போனஸ் முறையுமாகும். இந்தமுறையின்கீழ் சிலநேரம் ஒரு வாக்கு மேலதிகமாக ஒரு ஆசனத்தையோ சிலவேளை இரு ஆசனங்களையோ தீர்மானிக்கலாம்; என்பது நமக்குத் தெரியும். இவர்கள் தனித்துப்போட்டியிட்டால் இவர்களது சிறிய வாக்கு பிரிவதாதல் தேசியக்கட்சி சில மாவட்டங்களில் ஒன்றோ அல்லது இரண்டோ ஆசனங்கள் விகிதம் இழக்கலாம்.

இங்கு சிறுபான்மைக்கட்சியொன்று தனித்துப்போட்டியிடும்போது விதிவிலக்காக கண்டியில் 2000மாம் ஆண்டு பெற்றதுபோல் ஒரு ஆசனம் பெறலாம்; பெறாமலும்போகலாம். பெறாவிட்டால் சிறுபான்மைக்கட்சிக்கும் நட்டம்; தேசியக்கட்சிக்கும் நட்டம்.

அதனால்தான் அவ்வாறு கூட்டிணைகிறார்கள். அந்தவாக்குகளுக்காகத்தான் அவர்களுக்கு தேசியப்பட்டியல்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களின் கணிசமான ஆசனங்கள் தேசியப்பட்டியலாக அமைகின்றன.
இது இரு தரப்பிற்கும் இலாபமாகும்.

வெட்டிப்புள்ளி உயர்த்தப்படுவது இதனை எவ்வாறு பாதிக்கிறது?

வெட்டுப்புள்ளி உயர்த்தப்படும்போது (கண்டி?), புத்தளம் கணிசமாக ஒற்றுமைப்பட்டு விதிவிலக்காக ஆசனம் பெற்றாலேயொழிய வடகிழக்குக்கு வெளியே தனிக்கட்சி ஆசனம்பெறமுடியாது? எனவே, முஸ்லிம்கள் தற்போது அளிக்கின்ற சிறிய வீதமான வாக்குகளைக்கூட அளித்து வீணாக்க மாட்டார்கள்.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தேசியக்கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும். ஆனாலும் பெரும்பாலும் கொழும்பு, கண்டி தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஆசனம் பெறுவது கடினம். காரணம், மற்ற சமூகத்தவரின் விருப்பு வாக்குகளை இவர்கள் தாண்டமுடியாது.

அதேநேரம் இவர்கள் அளிக்கும் வாக்குகளுக்கு கைமாறாக தேசியப்பட்டியலும் பெரும்பாலும் கிடைக்கப்போவதில்லை. கிடைத்தாலும் சிறிய கட்சிகள் பேரம்பேசி பெறுவதுபோல் பெருமளவு கிடைக்காது.

சுருங்கக்கூறின் வெட்டுப்புள்ளி அதிகரிக்கப்பட்டால் வடகிழக்குக்கு வெளியே பெரும்பாலான மாவட்டங்களில் முஸ்லிம்களின் வாக்குகள் பெறுமதியற்றதாக மாறப்போகின்றன.

இது எங்களுக்கு பாதிப்பில்லையா? தேசியக்கட்சியில் போட்டியிட்டாலும் பாதிப்புத்தான்.

இதையும் நியாயப்படுத்துகிறார்களே!

சிந்தியுங்கள்.

Web Design by The Design Lanka