அரசை சார்ந்துதான் செயல்பட வேண்டியிருக்கிறது: பபாசி தலைவர் பேட்டி » Sri Lanka Muslim

அரசை சார்ந்துதான் செயல்பட வேண்டியிருக்கிறது: பபாசி தலைவர் பேட்டி

IMG_20200114_085229

Contributors
author image

BBC

தற்போது நடந்துவரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழக அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாகக் கூறி, பத்திரிகையாளர் அன்பழகன் என்பவரை வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட தகராறை அடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்சையாக உருவெடுத்தது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, தென்னிந்திய புத்தக பதிப்பாளர் – விற்பனையாளர் சங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் குறித்து, செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் அதன் தலைவர் ஆர்.எஸ். சண்முகம். அவரது பேட்டியிலிருந்து:

கே. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

ப. எங்கள் சங்கம் 400 உறுப்பினர்களைக் கொண்ட சங்கம். அவர்களுக்காகவே நாங்கள் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்திவருகிறோம். அதை ஒட்டி எங்கள் சங்கத்தில் உறுப்பினரல்லாத, புத்தகங்களை வெளியிடுகிற பதிப்பாளர்கள் சிலரும் இங்கே அரங்கு வேண்டுமென கேட்பது வழக்கம். அதன்படி பலருக்கு அரங்குகளை ஒதுக்குவது வழக்கம். 1976ல் 27 பேரோடு இந்த புத்தகத் திருவிழா துவங்கப்பட்டது. இன்று 43 ஆண்டுகளுக்குப் பிறகு, விஸ்வரூபம் அடைந்திருக்கிறது.

இந்த புத்தகக் கண்காட்சி நடைபெறும் 10-13 நாட்களில் மொத்தமாக 10 -15 லட்சம் வாசகர்கள் வருகிறார்கள். இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம், பதிப்பாளர்களிடம் மட்டுமல்ல, எல்லாத் தரப்பிடமுமே இருக்கிறது. உறுப்பினர் அல்லாதவர்களுக்கு, ஒரு கட்டணம் விதித்து கடைகளை ஒதுக்குகிறோம்.

பபாசிபடத்தின் காப்புரிமைBAPASI

உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் அல்லாதவர்களும் பல விதிமுறைகளை விதித்துத்தான் கடைகளை ஒதுக்கீடு செய்கிறோம். எங்களுடைய இந்த செயல்பாட்டுக்கு யாரும் விரோதமாக இருக்கக்கூடாது என்பதுதான் அடிப்படை. எங்கள் செயல்பாட்டுக்கு இடைஞ்சலாக, பொதுமக்களுக்கு இடையூறாக யாராவது செயல்பட்டால், அவர்களை வெளியேற்றுவது எங்கள் உரிமை என விண்ணப்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறோம்.

இந்தக் குறிப்பிட்ட நபர், தன் அரங்கில் அரசை விமர்சிக்கும் நூலை மட்டுமே வைத்திருந்தார். மேலும் ஒவ்வொரு நாளும் இதுபோல நூலை வெளியிட முயற்சித்தபோது, நாங்கள் அதை வேண்டாம் எனக் கூறினோம். முதலில் அவரும் அதை ஒப்புக்கொண்டார். ஆனால், தொடர்ந்து அதே செயலில் ஈடுபட்டார். இதைப் பற்றி எங்கள் செயலாளர் அவரிடம் கேட்டபோது, அநாகரீகமாக நடந்துகொண்டு தேவையில்லாத வார்த்தைகளைப் பேசியதன் விளைவாக, நீங்கள் இந்த இடத்தைக் காலி செய்து கொள்ளுங்கள்; உங்கள் பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறோம் எனக் கூறினோம்.

அவரிடம், அரசுக்கு எதிரான ஊழலைப் பற்றிய புத்தகம் மட்டுமே இருந்தன. பத்தோடு பதினொன்றாக இருந்தால் யாரும் கேட்கப் போவதில்லை. அவரது ஏற்பாட்டில் இதைச் செய்தால் பரவாயில்லை. ஆனால், எங்கள் ஏற்பாட்டில் நடக்கும் நிகழ்வில் செய்தார். இந்த புத்தகக் கண்காட்சி இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறதென்றால், அவ்வப்போது தமிழக அரசு அளிக்கும் ஆதரவில்தான் வளர்ந்திருக்கிறது.

அதற்கு ஊறு விளைவிக்கும் வகையில், எங்களுடைய 45 ஆண்டு கால வளர்ச்சியை நாசம் செய்யும் வகையில், யாராவது இதுபோன்ற காரியங்களை செய்தால், அவர்களை வெளியேற்றுவதைத் தவிர, வேறு வழியில்லை. அந்த அடிப்படையிலேயே அவரை வெளியேற்றினோம். ஆனால், அவர் எங்கள் செயலாளரை அநாகரீகமாகப் பேசி, தாக்க முற்பட்டதாலேயே தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக காவல்துறையை நாடி அங்கே புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.

அன்பழகன்படத்தின் காப்புரிமைFACEBOOK
Image captionஅன்பழகன்

கே. அரசுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான புத்தகங்களை நீங்கள் விற்பது விதிமீறல் என உங்கள் கடிதத்தில் கூறியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அப்படிச் சொன்னது ஏன்?

ப. விற்கக்கூடாது என நாங்கள் சொல்லவில்லை. மத்திய அரசுக்கோ, மற்றவர்களுக்கோ எதிரான புத்தகங்கள் இங்கே இருக்கின்றன. ஆனால், இது ஒன்றை மட்டுமே செய்து, அரசுக்கு எதிரான புத்தகங்களை மட்டுமே வைத்திருந்தார். அவர் அவ்வாறு முதலில் கூறியிருந்தால், நாங்கள் அரங்கே வழங்கியிருக்க மாட்டோம். காரணம், எங்களுடைய எல்லா காரியங்களுக்கும் இங்குள்ள அரசைச் சார்ந்துதான் செயல்பட வேண்டியிருக்கிறது. அவர்களை எதிர்த்துக் கொண்டு வேலை செய்து, அவர்களிடம் உதவி கேட்பது சாத்தியமில்லை. இது எல்லாம் அவர்களாகவே புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் உறுப்பினர்கள் இதுபோல நடந்துகொள்வதில்லை. இவ்வளவு வாசகர்கள் வருகிறார்கள்; அவர்களிடம் இதைப் பரப்ப வேண்டும் என்ற திட்டத்துடன் அரங்கு எடுத்திருப்பது எங்களுக்குத் தெரியவில்லை. அதில் ஏமாந்துவிட்டோம். அதில் வந்த கோபத்தில்தான் அவ்வாறு கடிதம் கொடுக்கப்பட்டது. எங்கள் நோக்கம், அவர் அரசுக்கு எதிராக புத்தகம் போடக்கூடாது என்பதோ, விற்கக்கூடாது என்பதோ அல்ல. நாங்கள், எங்கள் புத்தகங்களை எப்படி விற்பது என்ற கவலையில் இருக்கும்போது, அதை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டதுதான் எங்கள் நடவடிக்கைக்கு காரணம்.

கே. புத்தக வாசிப்பு என்பது ஒரு அறிவு சார்ந்த, கலாசார செயல்பாடு. அதில் இம்மாதிரி கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

புத்தக வாசிப்பு

ப. நல்ல விஷயம் எவ்வளவோ இருக்கிறது, அதைச் சொல்ல வேண்டியதுதானே. அவர் இதைச் செய்ய விரும்பினால், இதற்காகவே தனியாக மேடை அமைத்து, அங்கே சொல்ல வேண்டியதுதானே. இங்கே அரசை மட்டுமல்ல, இந்த சமூகத்தை விமர்சித்தே நிறைய நூல்கள் இருக்கின்றன. அதையெல்லாம் அவர்கள் ஏன் விற்பனை செய்கிறீர்கள் என நாங்கள் கேட்பதில்லை. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தன்னுடைய கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. அதேபோல, என்னுடைய இடத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பது என்னுடைய உரிமை அல்லவா? எங்கள் சங்கத்தை பொது நோக்கத்திற்காக வைத்திருக்கும்போது, அதை சீர்குலைக்கும் வகையில் செய்யும்போதுதான் கோபம் வருகிறது. வாசிப்பை ஒரு இயக்கமாக கொண்டு செல்ல வேண்டுமென நினைக்கிறோம். அதற்கு இடையூறு வருவதை நாங்கள் விரும்பவில்லை.

கே. பபாசியின் துணைத் தலைவரே இந்தக் கடிதத்தை எதிர்க்கிறார்..

ப. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து. எங்கள் சங்கத்தில் உள்ள 21 உறுப்பினர்களுக்கும் 21 அரசியல் பார்வை இருக்கும். நோக்கம் இருக்கும். அதன் வெளிப்பாடாக, அவர் சார்ந்த அரசியல் கட்சியின் நிர்பந்தத்தின் காரணமாக, அவர் எதிர்ப்பது போல பாவலா செய்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.

Web Design by The Design Lanka