உரிமைகளுக்கு மதிப்பளிப்பது முக்கியமானது ! » Sri Lanka Muslim

உரிமைகளுக்கு மதிப்பளிப்பது முக்கியமானது !

flag

Contributors
author image

Editorial Team

(MEELPARVAI EDITORIAL)

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழில் பாடுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்ற பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் அறிவித்தல் பெரும்பான்மைத் தேசியவாதத்தின் வெளிப்பாடாகவே நோக்கப்படுகிறது. தேசிய கீதம் என்பது ஒன்று தான். அதனை இரண்டு மொழிகளில் பாட வேண்டிய அவசியமில்லை. இது சமூகங்களுக்கிடையில் அனாவசிய பிரிவினைகளுக்கு வழிகோலும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

இது பிரிவினையை ஏற்படுத்துமா இல்லையா என்பது ஏற்கனவே முடிவடைந்த விவகாரம். இந்த விவகாரம் நீதி மன்றம் வரை சென்று தீர்ப்பளிக்கப்பட்டு முடிந்த ஒன்று. பிரதம நீதியரசர் பிரியசாத், பிரதி நீதியரசர் கே.ரீ.சித்ரசிரி, முன்னாள் நீதிபதி பிரசன்ன ஜயவர்தன ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழுவினால் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டு இந்த உரிமை 2016 ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்டது.

அரசியலமைப்பின் 18, 19 ஆம் உறுப்புரைகள் சிங்களத்தையும் தமிழையும் அரசகரும மொழிகளாக அங்கீகரித்துள்ளன. எனவே தமிழில் தேசிய கீதம் இசைப்பது யாப்புக்கு முரணானதல்ல என சட்டமா அதிபர் இந்த வழக்கின் போது வாதிட்டிருந்தார்.

இந்த வகையில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு யாப்பு இடமளித்திருக்கிறது. இது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. இனி இவற்றுக்கு மதிப்பளித்துச் செயற்படுவது தான் ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைவருக்கும் நல்லது. இதன் பின்னர் இது இன நல்லிணக்கத்துக்கு உதவுமா, இனங்களைப் பிரிக்குமா என்ற வாதங்களெல்லாம் அவசியமற்றது. இந்தியாவில் ஒரே மொழியில் தானே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது என்ற வாதமும் இலங்கைக்கு அவசியமில்லை. அங்கு முன்னூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பாவனையில் இருக்கின்றன. அதற்கும் மேலாக இந்திய தேசிய கீதம் பெரும்பான்மை ஹிந்தி மொழியிலன்றி சாதுபாஷா எனப்படும் சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பங்காளி மொழியிலேயே பாடப்படுகிறது. முழு இந்திய மக்களும் தமது பெரும்பான்மை மொழியிலல்லாத தேசிய கீதத்தையே இசைக்கின்றனர்.

இந்த வகையில் தேசிய கீதத்தை ஒரே மொழியில் இசைப்பது நாட்டுக்கு நல்லது என்கின்ற பெரும்பான்மைவாதத்தை மாற்றுவழியில் நுழைக்கின்ற வாதங்கள் இனி நமக்கு அவசியமில்லை. இங்கு அவதானிக்கத்தக்க விடயம் என்னவெனில், ஆட்சியாளர்களின் கொள்கைக்கு ஏற்ப அரசியலமைப்பையும் நீதிமன்றத் தீர்ப்பையும் மாற்ற முனைவது தான்.

ஆட்சி மாறும் போது ஆட்சியாளர்களின் மனநிலைக்கேற்ப நாட்டின் கொள்கைகள் மாறக் கூடாது என்பதற்காகவே அரசியலமைப்பு வரையப்படுகிறது. இந்த அரசியலமைப்பையே ஆட்சிக்கு வரும் எவரும் பின்பற்ற வேண்டும். இதற்கு அப்பால் சென்று தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முனைவது ஜனநாயக விரோதச் செயலாகும். இதற்கு இடம் கொடுக்கும் ஆட்சியாளர்கள் ஜனநாயக விரோதிகளாவார்கள்.

இந்தியக் குடியரசு யாப்புக்கு முரணாக இந்திய ஆட்சியாளர்கள் செயற்பட்டதன் விளைவாக இன்று இந்தியாவே கொந்தளிப்பில் இருக்கிறது. அந்த நாட்டுடைய முன்னேற்றம் கூட இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது. இலங்கையிலும் யாப்புக்கு முரணாக ஆட்சியாளர்கள் செயற்பட்ட விதத்தை கடந்த அரசாங்கத்தில் காண முடியுமாக இருந்தது. புதிய ஜனாதிபதி இந்தத் தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டுமேயன்றி அதே தவறு மீண்டும் நடப்பதற்கு களம் அமைக்கக் கூடாது.

Web Design by The Design Lanka