அப்பாவி மக்களின் பக்கமே இருந்து செயற்பட்டேன் » Sri Lanka Muslim

அப்பாவி மக்களின் பக்கமே இருந்து செயற்பட்டேன்

ranjan

Contributors
author image

Editorial Team

குரல் பதிவுகள் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென்று பிரதமர் தெரிவித்துள்ளதை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலைகள் பஸ்ஸில் நேற்று (21) பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அவர் பாராளுமன்றத்தில் விசேட உரையை ஆற்றுவதற்கு முயற்சித்தார். அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சின் ஒழுங்குவிதிகள் முன்மொழிகள் மீதான விவாதத்தில் உரையாற்றினார்.

குரல் பதிவுகள் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென பிரதமர் கூறுகின்றார். இதனை வரவேற்கின்றேன். அந்த ஆணைக்குழுவுக்கு தேவையான கோப்புகளை வழங்குவேன். இது தொடர்பாக ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோருகிறேன் என்றும் அவர் குறிப்பிடார்.

குரல் பதிவுகள் வெளியிட்டு எவரது குடும்ப வாழ்க்கையை அல்லது எவரது அமைதியை சீர்குழைப்பதற்கு நான் இதனை செய்யவில்லை என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தனது பாதுகாப்பு கருதியே தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ததாக கூறினார்.

குரல் பதிவுகள் வெளியானது தொடர்பாக தன்னுடன் தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மிக முக்கியமான குரல் பதிவுகள் பல தன்னிடம் இருப்பதாகவும் அவற்றை ஹாட் டிஸ்களில் இட்டு நாட்டுக்கு வெளியே பாதுகாப்பு பெட்டகங்களில் மறைத்து வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நான் நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்துவதற்கு பல விடயங்கள் உள்ளன. என்னுடன் கதைத்தவர்கள் என கூறப்படும் உளவாளிகள், தகவல்களை வழங்குபவர்கள், அரசியல்வாதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், மதத் தலைவர்கள், நீதிபதிகள், நீதிமன்றதுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பாக மக்கள் கேட்டிருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

எனது தொலைபேசி, மடிக்கணனி மற்றும் தரவு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமைகளை மீறி கடந்த 4 ஆம் திகதி பொலிஸார் எனது வீட்டுக்கு வந்து எடுத்துச் சென்றுள்ளனர். ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வருவதற்கான போராட்டம் தொடர்பான இந்த குரல் பதிவுகள் வெளியாகியுள்ள அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். நான் வேண்டுமென்றே இதனை செய்யவில்லை.

அத்துடன் என்னிடமிருக்கும் நாட்டுக்கு வெளிவராத , மறைக்கப்படும் உரையாடல் பதிவுகளையும் நான் சபையில் சமர்பிக்கின்றேன். என்னுடன் கதைத்த நீதிபதிகள், பிரதம நீதியரசர்கள், அரச தலைவர்கள் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதனை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன் அரசியல்வாதிகள், அவர்களின் மனைவிகள், பிள்ளைகளும் அதற்குள் அடங்குவர். இவர்களின் குரல் பதிவுகளையும் சபையில் சமர்பிக்கின்றேன். சொன்னதை இல்லையென்று கூறிபவர்கள் இருப்பதால் நான் அதற்கான ஆதரங்களை வைத்திருந்தேன். எனது கருத்துக்களுக்கு சாட்சி கேட்பதால் தேவையான சாட்சிகளை வைத்திருந்தேன். எனக்கு யாரிடமிருந்தும் நற்சான்று தேவையில்லை.

சில நீதிபதிகளுக்கு வழக்கு தீர்ப்புகளை வழங்குவதில் அச்சம் இருந்தது. சரத் அம்பேபிட்டியவுக்கு நடந்ததை போன்று தமக்கும் நடந்துவிடுமோ என அஞ்சினர். இதனால் இந்த விடயங்கள் தொடர்பாகவே கதைத்தோம்.

வேறு எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை. நான் எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்திலேயே இருந்து செயற்படுகின்றேன். செல்வந்தர்களின் பக்கம் இன்றி அப்பாவி மக்களின் பக்கமே இருந்து செயற்பட்டேன்.

நான் சுயாதீனமாக போட்டியிடுவேன். என்னை வீட்டுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை. சிறையில் இருந்தாலும் பரவாயில்லை. நீதியின் பக்கத்தில் உண்மையாக இருந்தவன் என்ற திருப்தியுடன் இருப்பேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Web Design by The Design Lanka