தமிழர்களுக்கு சம உரிமை » Sri Lanka Muslim

தமிழர்களுக்கு சம உரிமை

IMG_20200210_074009

Contributors
author image

BBC

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை தருவது தொடர்பாக இந்தியா வந்திருக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது வலியுறுத்தினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

இது எந்த அளவுக்கு இலங்கைக்கு அழுத்தத்தை தரும் என்றும், ஏன் இப்போது இந்தியா இந்தக் கோரிக்கையை வலியுறுத்துகிறது என்றும் மூத்த பத்திரிகையாளரும், இலங்கையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவருமான ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் கேட்டது பிபிசி தமிழ்.

தமிழர்களுக்கு சம உரிமை: "ராஜபக்ஷவிடம் மோதியின் வலியுறுத்தல் ஒரு கண்துடைப்பு"

இதில் உண்மையில் பிரதமர் நரேந்திர மோதிக்கு உண்மையான அக்கறை ஏதும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்குமானால், இலங்கைத் தமிழர்களை அவர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இணைத்திருப்பார்.

அதுமட்டுமல்ல, மைத்ரிபால சிரிசேன ஜனாதிபதியாக இருந்த காலம்தான் இந்தியாவுக்கு சாதகமான காலம். அந்த காலத்தில் உண்மையில் இந்தியா அழுத்தம் தந்திருந்தால், தமிழர்களுக்கான உரிமை விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்.

ஆனால், அப்போது எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, ராஜபக்ஷ காலத்தில் இதைப் பேசுவது என்பதை தமிழ் மக்கள் நம்பமாட்டார்கள்.

அப்போது பேசாமல் இருந்ததன் மூலம் 13வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வுக்கான வாய்ப்பை இல்லாமல் செய்தவர் மோதிதான் என்றார் ராதாகிருஷ்ணன்.

மேலும், இப்போது இது குறித்து பேசப்படுவது ஏன் என்று கேட்டபோது, “இந்தியாவுக்கு இலங்கை தரவேண்டிய 120 மில்லியன் டாலர் கடன் முதிர்வு அடைகிறது. அதைத் திருப்பிச் செலுத்துவதற்கு வாய்தா வாங்க விரும்புகிறது இலங்கை. அதை வலியுறுத்துவதே ராஜபக்ஷே வருகையின் நோக்கம். இந்தியாவுடனான கடன் மட்டுமல்ல. ஜப்பானுக்கு இலங்கை தரவேண்டிய 190 மில்லியன் டாலர் கடனும், சீனாவுக்கு இலங்கை தரவேண்டிய 500 மில்லியன் டாலர் கடனும்கூட முதிர்வடைய உள்ளன. அது தவிர, முதிர்வடையும் வங்கிப் பத்திரங்களுக்கு அந்நாடு திருப்பித் தரவேண்டிய தொகை 1.4 பில்லியன் டாலர்களாகும்.

வங்கிப் பத்திரங்களுக்கான முதிர்வுத் தொகையை திருப்பித் தந்துதான் ஆகவேண்டும். ஆனால், இந்தியாவிடம் வலியுறுத்தி கடனை திருப்பிச் செலுத்துவதற்கு வாய்தா வாங்கினால், அதைக் காட்டி ஜப்பானிடமும் வாய்தா வாங்கத் திட்டமிட்டுள்ளது இலங்கை. இருவரும் ஏற்றுக்கொண்டால், அதைக் காட்டி சீனாவிடமும், வாய்தா வாங்குவதற்கு இலங்கை அழுத்தம் கொடுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka