சீனாவில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு » Sri Lanka Muslim

சீனாவில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு

IMG_20200213_085420

Contributors
author image

BBC

கோவிட்-19′ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதன்கிழமையன்று 242 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை நடந்த மரணங்களில் புதன்கிழமைதான் மிக அதிகம்.

இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட நபர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது.

மேலும் 14,840 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சீராக இருந்துவந்த நிலையில், புதன்கிழமையன்று இந்த எண்ணிக்கையில் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த செய்தியை வெளியிட்டது. அதில் செவ்வாயன்று கடந்த இரண்டு வாரங்களில் மிகவும் குறைவாக 2015 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹூபே மாகாணத்தில் புதன்கிழமை பதிவான மரணங்களால் சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1350-ஐ கடந்தது. மேலும் வைரஸ் தாக்குதலால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் சீனாவில் ஏறக்குறைய 60,000 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இது குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், தற்போதைய நிலையில் இந்த வைரஸ் தொற்று எப்போது கட்டுப்படுத்தப்படும் என்று கணிப்பது இயலாது என்று கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், ”தற்போதைய நிலையில் இந்த தொற்று பரவல் எந்த திசையிலும் செல்லலாம்” என்று எச்சரித்துள்ளார்.

சிங்கப்பூர் வங்கி ஊழியருக்கு கொரோனா – வீட்டுக்கு அனுப்பப்பட்ட 300 ஊழியர்கள்

இதனிடையே ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதால் குறிப்பிட்ட வங்கிக் கிளையில் வேலை செய்யும் 300 பேரையும் உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவைத்தது சிங்கப்பூரில் உள்ள டி.பி.எஸ். என்னும் ஒரு மிகப்பெரிய வங்கி.

Image captionசிங்கப்பூர் வணிக மாவட்டத்தில் கட்டடப் பராமரிப்பு ஊழியர்கள் மக்களின் உடல் வெப்ப நிலையைப் பரிசோதிக்கின்றனர்.

இந்த வங்கிக் கிளை அமைந்திருக்கும் கட்டடத்தின் 43வது மாடியில் வேலை செய்யும் 300 ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிடும்படி புதன்கிழமை கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

சிங்கப்பூரில் ஏற்கெனவே 47 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனா தவிர்த்து, அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

Web Design by The Design Lanka