ஒத்து ஊதும் அரசியல்வாதிகளும் நம் மத்தியில் இருக்கவே செய்கின்றனர் » Sri Lanka Muslim

ஒத்து ஊதும் அரசியல்வாதிகளும் நம் மத்தியில் இருக்கவே செய்கின்றனர்

haafis naseer1.jpg2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முஸ்லிம் மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் கிடைத்தால் அதனைப் பூதாகரமாக்கி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கைங்கரியங்களை ஆளும் கட்சிகளாக இருந்த இருதரப்பு அரசியல்வாதிகளும் மிக நேர்த்தியாகவே செய்து வருகின்றனர் என கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அவற்றுக்கு ஏற்றாற்போல் ஒத்து ஊதும் அரசியல்வாதிகளும் நம் மத்தியில் இருக்கவே செய்கின்றனர். இத்தகைய எடுப்பார் கைப்புள்ளை அரசியல் கலாசாரம் உடனடியாக மாற்றியமைக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் உள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற அமைப்பாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் முஸ்லிம் சமூகத்தால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஒரு துன்பவியல் நிகழ்வாகும். இதன் பின்னர் இந்த நாட்டிலுள்ள சமூகங்களுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் என்றால் வேண்டத்தகாதவர்கள் என்ற உணர்வின் வெளிப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு பின்புலமாக இருந்தவர்களில் அரசியல்வாதிகளும் அடங்குவர் என்பது நாம் அறிந்தமையே. அண்மைய ஆட்சிமாற்றத்தின் பின்னர் இந்த உணர்வின் வெளிப்பாடு உச்சம் பெற்றது என்பதற்கும் இன்றைய அமைச்சரவையே கட்டியம் கூறிநிற்கின்றது.

தொடர்ந்தும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் செய்ய முனையும் நம்மைகள் குறித்து இப்போது விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவற்றை எதிர்கட்சியை சார்ந்தவர்களும் முன்வைப்பது பெரும் வேடிக்கையாக இருக்கின்றது. மொத்தத்தில் இந்த நாட்டில் முஸ்லிம்களின் இருப்பு என்பது எடுப்பார் கை பிள்ளை என்ற நிலைக்கு இட்டுச்செல்லப்பட்டுவிடும் நிலைமையே காணப்படுகின்றது.

இந்த அரசியல் கலாசாரம் உடன் மாற்றப்பட்டு நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட வழிவகைகள் செய்யப்பட வேண்டும். இத்தகைய நிலை ஏற்படக்கூடிய வகையில் முஸ்லிம் மக்கள் நன்கு சிந்தித்து தமது சக்தியை ஒற்றுமையுடன் கட்டியெழுப்ப முன்வரவேண்டும் எனவும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka