எயார்பஸ் மோசடி » Sri Lanka Muslim

எயார்பஸ் மோசடி

courts

Contributors
author image

Editorial Team

2013 ஆம் ஆண்டு நாட்டின் தேசிய விமான சேவையான ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு 10 எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

16 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிக நிதியை இலஞ்சமாக வழங்குவதாக வாக்குறுதியளித்து, அதில் 2 மில்லியன் ரூபாவைப் பெற்று, அந்த நிதி பல்வேறு தரப்பினருக்கு மாற்றப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் தற்போது வௌிக்கொணரப்பட்டுள்ளது.

இலஞ்சமாக பாரிய நிதி பரிமாற்றப்படுகின்ற நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 98 மில்லியன் டொலர் நிதியை செலுத்திய பின்னரே, எயார்பஸ் கொடுக்கல் வாங்கலை ஐக்கிய தேசியக் கட்சி இரத்து செய்தது.

இதனால் 14,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பாரிய மோசடி விசாரணை பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பில் கண்டறியப்பட்டது.

10 விமானங்களை கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலுக்காக, 16.84 மில்லியன் அமெரிக்க டொலரை இலஞ்சமாக வழங்குவதாக பிரான்ஸின் எயார் பஸ் நிறுவனம் வாக்குறுதியளித்துள்ளது.

3 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதியாகும்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் அப்போதைய நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவிக்கு சொந்தமான
புரூனே இராச்சியத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட Biz Solution என்ற நிறுவனத்திற்கு இந்த இலஞ்சத்தை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இணக்கம் தெரிவிக்கப்பட்ட நிதியில் 2 மில்லியன் டொலர், அதாவது சுமார் 400 மில்லியன் நிதியை கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் புரூனே நிறுவனக் கணக்கில் எயார்பஸ் நிறுவனம் வைப்பிலிட்டுள்ளது.

நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ், கபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மனைவியின் சிங்கப்பூர் கணக்கில் இருந்து அவுஸ்திரேலியாவிலுள்ள வங்கிக் கணக்கொன்றிற்கு இரண்டு முறை கபில சந்திரசேன நிதியை வைப்பிலிட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆரம்பத்தில் அறிவித்திருந்தது.

நீதிமன்றத்தில் நேற்றைய தினம் மேலும் விடயங்களை சுட்டிக்காட்டிய விசாரணை அதிகாரிகள், பிரியங்கா விஜேநாயக்கவின் சிங்கப்பூரிலுள்ள Biz Solution கணக்கில் இருந்து மேலும் சில தரப்பினருக்கு நிதி பரிமாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் விடயங்களைத் தௌிவுபடுத்தினர்.

அதற்கமை, நாட்டின் பிரபல வர்த்தகரான நிமல் ஹேமசிறி பெரேராவுக்கு சொந்தமான சிங்கப்பூர் Saber Vision நிறுவனத்தின் கணக்கிற்கு, 2014 ஆம் ஆண்டு இரண்டு தடவைகள் 8 இலட்சம் அமெரிக்க டொலர் வீதம் பிரியங்கா விஜேநாயக்கவின் கணக்கில் இருந்து நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது. இது 140 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.

அதே வருடம் Biz Solution கணக்கில் இருந்து 1,60,000 யூரோவை, SL Agro என்ற பேரில் இலங்கையில் முன்னெடுத்துச் செல்லப்படும் நிறுவனமொன்றிற்கு பிரியங்கா விஜேநாயக்க வைப்பிலிட்டுள்ளார். இது 30 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதியாகும்.

இந்த நிதி வைப்பிலிடப்பட்ட SL Agro நிறுவனம் உரிய முகவரியில் இயங்கவில்லை என்பது நேற்றைய தினம் நீதிமன்றத்தில் வௌிக்கொணரப்பட்டது.

சகோதரர்கள் இருவர் இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக செயற்படுகின்றனர். அவர்கள் யார் என்பது நீதிமன்றம் முன்னிலையில் நேற்று வௌிக்கொணரப்பட்டது.

எனினும், அவர்களில் ஒரு சகோதரரிடம் ஏற்கனவே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று குறிப்பிட்டது.

ஏனைய சகோதரர் அழைக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் ஆஜராகவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது.

இதேவேளை, நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தின்போது எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

பிரச்சினைக்கு வித்திட்டுள்ள கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட விதம் மற்றும் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புபட்டவர்கள் குறித்து பல தகவல்கள் இதன்போது வௌிக்கொணரப்பட்டன.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தீர்மானிப்பதற்காக 2013 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி ஶ்ரீ லங்கன் விமான நிறுவனப் பணிப்பாளர் சபை அப்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் கூடியமை இதன்போது தெரியவந்தது.

Nf

Web Design by The Design Lanka