கொரோனா வைரஸ் ; அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை » Sri Lanka Muslim

கொரோனா வைரஸ் ; அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை

IMG_20200316_105505

Contributors
author image

Editorial Team

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதைத் தடுத்து மக்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றுமாறு அரசாங்கம் அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பாரதூரமான சுகாதார பிரச்சினையை வெற்றிகொள்வதற்காக உள்ள பிரதானமான வழி வைரஸுக்கு ஆட்படுவதைத் தவிர்ப்பதாகும். அலுவலகங்கள், கடைகள், பஸ் வண்டிகள், ரயில்கள் போன்ற பொது இடங்களில் நடமாடும் போது சமூக இடைவெளியைப் பேண வேண்டும். ஒரு மீற்றர் தூர இடைவெளியை பேணுவது மிகவும் பொருத்தமான முறையாகும். அதேபோன்று வைத்திய நிபுணர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் கடந்த சில நாள்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் நாளை, 23 திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வடமாகாணத்தில் உள்ள 05 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மார்ச் 24 செவ்வாய்க“கஜழமை காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6.00 நீக்கப்பட்டு அன்றைய தினம் பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

நாளை காலை ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் மாவட்டங்களில் உள்ள மக்கள் பெருமளவானோர் அன்றாட தேவைகளைக் கொள்வனவு செய்வதற்காக சந்தைகளுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொருள்களை கொள்வனவு செய்வது அவசியம் என்ற போதும் வைரஸுக்கு ஆட்படுவதைத் தவிர்ப்பதற்காக சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. கடைகளுக்குச் செல்லும் போதும் கடைகளுக்கு உள்ளேயும் நபர்களுக்கிடையில் ஒரு மீற்றர் தூரத்தை பேண வேண்டும். இருமல் அல்லது தும்மலின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு வாயை மூடிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பஸ், ரயில் மற்றும் ஓட்டோக்களில் பயணம் செய்யும் போது குறிப்பிட்ட இடைவெளியைப் பேண வேண்டும். பெற்றோல் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்ய வரும் போதும் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுமாறு நினைவூட்டப்படுகிறது.

பொருள்களைக் கொள்வனவு செய்ய வரும் போது ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் வருகை தருவதன் மூலம் மக்கள் ஒன்று சேர்வதைக் குறைக்க முடியும். அது சமூக இடைவெளியைப் பேண உதவும்.

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் ஏனைய பொருள்கள் போதுமானளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைத் தட்டுப்பாடின்றி நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே தேவையற்ற வகையில் குழப்பமடையத் தேவையில்லை. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் பயன்படுத்த தேவையான பொருள்களை மட்டுமே கொள்வனவு செய்வது சன நெரிசலில் கழிக்கும் காலத்தை குறைக்க உதவும். ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் வீடுகளில் இருந்து வீட்டு வேலைகளில் ஈடுபடுமாறு கொரோனா ஒழிப்பு செயலணி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாடுகள், அரசியல் மற்றும் பொருளாதார முறைமைகள், கலாசாரம் மற்றும் ஏழை, பணக்காரன் என்ற பேதங்களின்றி தேச எல்லைகளை கடந்து பரவிவருகின்றது. தற்போது சுமார் 180 நாடுகள் பல்வேறு அளவுகளில் அதனால் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் முறைமைகளை ஏலவே கண்டறிந்து கடுமையாக பின்பற்றிய நாடுகள் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளன. கொரோனா வைரஸ் முதலில் தொற்றிய சீனா அதற்கு நல்ல உதாரணம். உரிய  நடைமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் வளமான நாடான இத்தாலி அதனைக் கட்டுப்படுத்துவதில் இன்னும் வெற்றியடையவில்லை.

கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்புடன் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் பல்வேறு நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெப்ரவரி 26ஆம் திகதி கொரோனா ஒழிப்பு விசேட செயலணி தாபிக்கப்பட்டது. அத்தகையதொரு செயலணி தாபிக்கப்பட்ட முதலாவது நாடு இலங்கையாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ், செயலணி உறுப்பினர்களுடனும் வைரஸ் ஒழிப்புடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடனும் தினமும் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொண்டுவருகிறார். தற்போது 17 நோய்த்தடுப்புக் காப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அவை தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் அனைவரும் நோய்த்தடுப்புக் காப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

உருவாகியுள்ள பிரச்சினையை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று செயலணியுடன் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். நாட்டில் உருவாகியுள்ள நிலைமை பாரதூரமானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லையென்ற போதிலும் அனைத்து விடயங்களையும் நடைமுறைச் சாத்தியமான முறையில் ஆராய்ந்து பொருளாதார மற்றும் மக்களின்  வாழ்க்கைக்கு பாதிப்பில்லாத வகையிலேயே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அரசியல் நோக்கங்களைக் கொண்டவர்களும் சமூக விரோதிகளும் தற்போதைய சுகாதார பிரச்சினையைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் வதந்திகளின் ஊடாக போலியான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். அவர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Web Design by The Design Lanka