ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் » Sri Lanka Muslim

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள்

IMG_20200324_091831

Contributors
author image

Editorial Team

கொவிட் –19வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார்.

அனைத்து நிவாரணங்களும் நேற்று (மார்ச் 23) முதல் நடைமுறைக்கு வரும்.

இந்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி ஆளுநர்,அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள்,மாகாண சபை தலைமை செயலாளர்கள் மற்றும் அனைத்து வங்கி,நிதி நிறுவன மற்றும் வரி நிறுவன தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் வருமாறு,

1.      வருமான,வெற் வரி,சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள்,ரூ 15,000க்கு குறைந்த நீர்,மின்சார கட்டணங்கள்,வரிகள்,வங்கி காசோலைகள் செல்லுபடியாகும் காலஎல்லை,ரூ50,000க்கு குறைந்த மாதாந்த கடனட்டை கொடுப்பனவுகள் 2020ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2.      முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் லீசிங் கடன் தவணைக் கட்டணம் அறவிடுவது 06மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

3.      அரசாங்க ஊழியர்களினதும் தனியார் துறை பணிக்குழாம் அல்லாத ஊழியர்களினதும் சம்பளத்தில் கடன் தவணை கட்டணங்கள் அறவிடுவது 2020மே மாதம் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

4.      வங்கி,நிதி நிறுவனங்களினால் ரூ.10லட்சத்திற்கு குறைவான தனிப்பட்ட கடன் அறவிடுவது 03மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

5.      தொழில் வழங்குவதற்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு,மார்ச் மாத பயிற்சிக் கால கொடுப்பனவான ரூ.20,000அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

6.      கொரோனா வைரஸ் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார,பொலிஸ்,சிவில் பாதுகாப்பு உள்ளிட்ட அரசாங்க ஊழியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி நன்மைகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

7.      சுற்றுலா,ஆடை,சிறிய மற்றம் நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக 6மாத கடன் நிவாரண காலத்தை நடைமுறைப்படுத்துதலும் இலங்கை மத்திய வங்கி அந்நிதியை மீள்நிதியாக்கம் செய்தலும்.

8.      இலங்கை வங்கி,மக்கள் வங்கி,தேசிய சேமிப்பு வங்கி,இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்ஊழியர் சேமலாப நிதியம்,ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் இணைந்து திறைசேறி பிணை முறிகளில் நிதி முதலீடு செய்கையில்,அதன் மூலம் நிதிச் சந்தையை 7வீத வட்டி விகிதத்தின் கீழ் நிலைப்படுத்தல்.

9.      மாதாந்த கடன் தொகையை ரூ.50,000வரையான தேசிய கொடுக்கல் வாங்கலுக்காக பயன்படுத்தப்படும் கடனட்டைக்கான கடன் வட்டி வீதத்தை அதிகபட்சம் 15வீதத்தின் கீழ் கொண்டு வருதலும் ஆகக் குறைந்த மாதாந்த அறவீட்டை 50வீதமாக குறைத்தலும்.

10.     ஊரடங்கு சட்டம் இல்லாத சந்தர்ப்பங்களில் அனைத்து வங்கிக் கிளைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சேவைகளை வழங்கும் வகையில் திறந்து வைத்தல்.

11.     இலங்கை துறைமுகம்,சுங்கம் மற்றும் ஏனைய உரிய நிறுவனங்கள் அத்தியாவசிய உணவு,உரம்,மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள்களை தொடர்ச்சியாக உரிய நபர்களுக்கு வழங்க வேண்டும்.

12.     சமூர்த்தி நன்மை பெறுபவர்கள்,சமூர்த்தி அட்டை உரிமையாளர்களுக்கு ரூ.10000வட்டியில்லாத முற்பணத்தை அனைத்து சமூர்த்தி வங்கிச் சங்கங்களின் ஊடாகவும் பெற்றுக்கொடுத்தல்.

13.     சதொச,கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் வெற் வரி மற்றும் ஏனைய பிரதேச வரிகள்,கட்டணங்களில் இருந்து விலக்களித்தல்.

14.     குறைந்த வருமானம் பெறுவோருக்கான போசனை உணவு பொருட்களை வழங்குவதற்காக சமூர்த்தி அதிகார சபை சமூர்த்தி,குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களுக்கான உணவு அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும். அக்குடும்பங்களுக்கு முதியவர்கள்,குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி,பருப்பு,வெங்காயம் ஆகியன உணவு அட்டையின் ஊடாக வாராந்தம் வழங்க வேண்டும்.

15.     கோவிட் – 19வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்குறிய சுகாதார,சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தின் விசேட கணக்கொன்று இலங்கை வங்கியில் திறந்துள்ளது. அதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் 100மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. அனைத்து தேசிய,சர்வதேச நன்கொடையாளர்கள் அதற்கு பங்களிப்புச் செய்வதற்காக வரி,வெளிநாட்டு நாணயக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

16.     சார்க் நாடுகளில் கொரோனா நிதியத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் 5மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

மொஹான் சமரநாயக்க

பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.03.23 

Web Design by The Design Lanka