இந்தியாவில் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு » Sri Lanka Muslim

இந்தியாவில் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு

modi

Contributors
author image

Editorial Team

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் நாடு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. அந்த உரையில்,

“அடுத்த 21 நாட்கள் நமக்கு மிகவும் முக்கியமானது. கரோனா வைரஸ் நம்மைத் தாக்காது என யாரும் நினைக்கக் கூடாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இன்றிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்குக்கு ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர்கள் தவிர யாருக்கும் ஊரடங்கின்போது அனுமதியில்லை.

பிரதமர் முதல் சாதாரண குடிமகன் வரை அனைவரும் ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும். வல்லரசு நாடுகளாலேயே கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தந்து நாட்டு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. வீட்டைவிட்டு வெளியே வந்தால் வீட்டிற்கு கொரோனா வரும். இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கப்பூர்வமானதாகப் பயன்படுத்த வேண்டும்.

24 மணி நேரமும் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோரின் சிரமங்களை உணர வேண்டும். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு இந்தியரும் முக்கியம் என்பதாலேய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சுகாதாரமாக இருப்பதன் மூலமாகவே இந்த வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்.

அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடை இருக்காது. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்திட வேண்டும்.

கொரோனா சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களுக்காக ரூ. 15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது.

மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடித்தால் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த கடினமான சூழலில் அரசு அறிவுரைகளை ஏற்று அனைத்து நாட்டு மக்களும் தங்களைத்தாங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றினால்தான் நாடு கடினமான சூழலில் இருந்து மீள முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka