கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிமை நல்லடக்கம் செய்யலாம் ! » Sri Lanka Muslim

கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிமை நல்லடக்கம் செய்யலாம் !

IMG_20200331_140220

Contributors
author image

Editorial Team

WHO மற்றும் இலங்கைச் சட்டத்தில் ஏற்பாடு

( A H M Boomudeen )

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முஸ்லிம் நபர் ஒருவர் மரணிப்பாராயின் − அந்நபரை முஸ்லிம்களின் கலாச்சாரத்துக்கு அமைவாக 10 அடி ஆழமான குழியில் (கபுறு) நல்லடக்கம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) உருவாக்கியுள்ள சட்ட ஏற்பாட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை , இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளின் படியும் (Provisional Clinical Practice Guidelines on
COVID-19 suspected and confirmed patients) கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம் ஒருவரை 6 அடி குழியில் அடக்கம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று மரணித்தவரின் உடல் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது தொடர்பில் பூரணமான விளக்கங்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் பதியப்பட்டுள்ளன.

இவ்வாறான சட்டம் தெளிவாக இயற்றப்பட்டிருந்தும் முஹம்மது ஜமால் என்பவரின் உடல் இஸ்லாமிய முறைப்படி புதைக்கப் படாமல் எரிக்கப்பட்டமையானது அனைவரையும் ஏமாற்றத்திலும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

இத்தருணத்தில் தவறு இழைத்தவர்கள் முஸ்லிம் தரப்பினரா அல்லது அரச அதிகாரிகளா என்பது தொடர்பான விவாதங்கள் சமூக ஊடகம் வாயிலாக மேல் எழுந்த வண்ணம் உள்ளன.

இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடவயம், முஸ்லிம்கள் தவறு செய்திருப்பார்கள் ஆயின் அது தொடர்பில் அரசாங்கம் உரிய பொறுப்பான விடயங்களை சட்ட மீறுகைகளை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது.

முஸ்லிம்களின் சட்ட மீறுகை அல்லாமல் அரசாங்க அதிகாரிகள் அல்லது அரசியல் சாயம், ஜமால் முகமது சடலத்தில் பூசப்பட்டு இருக்குமாயின் அரசாங்கம் தவறினை பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் பெருவாரியான கோரிக்கையாக உள்ளது.

இங்கு தனிப்பட்ட ரீதியாக நான் சுட்டிக்காட்ட விழைவது, அரசினால் வெளியிடப்பட்ட வழிகாட்டியை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட 14 பேர் கொண்ட வைத்திய குழாமில் ஒரு முஸ்லிம் நபர் கூட அரசாங்கத்தினால் நியமிக்கப்படவில்லை ஏன் என்ற கேள்வியை முன்வைக்க வேண்டியுள்ளது.

உண்மையில் அரசாங்கத்தின் நோக்கம் அனைத்து இன, மத, கலாசார, மனிதர்களின் சடங்குகளையும் மனித உணர்வுகளையும் பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதாக இருந்திருந்தால் ஏன் ஒரு முஸ்லிம் வைத்தியரை கூட இக்குழுவில் உள்வாங்க முடியாமல் போய்விட்டது?

இச்சூழ்நிலையில் முஸ்லிம் தரப்பினரின் கருத்துகளை மற்றும் விமர்சனங்களை பலயீனங்களுடனும் வக்கிரத்துடனும் அரசாங்கத்தின் மீது திணிக்க விடுவது சாலப் பொருத்தமான விடயமா என்பது தொடர்பிலும் அலச வேண்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முஸ்லீம் அரசியல் தலைமைகள் மற்றும் சமய தலைவர்கள் உரிய வழிகாட்டுதல்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இக்கொடிய நோய் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் வழிமுறைகளை கண்மூடித்தனமாக விமர்சிப்பது எமது கண்களை நாம் குத்திக் கொள்வதாக அமைந்து விடக்கூடாது.

Web Design by The Design Lanka