நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கு தகைமையுள்ளவர்கள் யார் யார்...? » Sri Lanka Muslim

நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கு தகைமையுள்ளவர்கள் யார் யார்…?

IMG_20200331_185143

Contributors
author image

ஊடகப்பிரிவு

நிவாரணங்கள் எவை, மற்றும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு தகைமையுள்ளவர்கள் யார் யார்…?

கோவிட் 19 கொரோனா நோய்க்கிருமி பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்கு உள்ளாகியிருக்கும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மேலும் பல நிதி மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன.

ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்பனவாக 5000 ரூபாய்கள் வழங்குவதன் மூலம் – அவர்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிகளைத் தணிக்க முடியும் என, ‘அத்தியாவசிய சேவைகளை வழமையான ஒழுங்கில் பேணுவதற்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி’க்கு ஆலோசனையை நான் வழங்கியதுடன், அவ்வாறு வழங்க ஏற்பாடுகளைச் செய்யுமாறும் பணிப்புரை வழங்கியுள்ளேன்.

என்னால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிவாரணங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக விளக்கும் அறிவுறுத்தல் சுற்றுநிருபம் ஒன்று எனது செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர அவர்களினால் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அது – அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்கள், மற்றும் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய்க்கிருமியை இலங்கையிலிருந்து ஒழிக்கும் முன்னுரிமை நிகழ்ச்சித் திட்டம் நிறைவுற்றதாக நான் அறிவிக்கும் வரைக்கும் – இந்த நிவாரணங்கள் தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும்.

“கோவிட் 19 கொரோனா நோய்க்கிருமியை இலங்கையிலிருந்து ஒழிப்பதற்கான முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டத்தின் அத்தியாவசிய முதன்மை அம்சமாக இருப்பது – அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கையைத் தொடர்ச்சியாகப் பேணுவதாகும்” என்ற எனது நிலைப்பாட்டையும், எனது செயலாளர் அவர்கள் தனது சுற்றுநிருத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நோய்த்தொற்றுப் பரவலுக்கு மத்தியில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் – நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த மக்கள் பிரிவினரைப் பிரதான கட்டமைப்புக்குள் இணைத்து, அவர்களுக்கான ஆதாரங்களை வழங்குவதே மிக அவசியம் செய்ய வேண்டிய ஒன்றாகும் என ஜனாதிபதி செயலணியினால் இனம் காணப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை நிவாரண விலைக்கு வீடுகளுக்கு வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்துமாறு நான் இட்ட பணிப்புரையையும் கலாநிதி ஜயசுந்தர அவர்கள் தனது சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனது செயலாளர் நேற்று அனுப்பிவைத்த சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிவாரணங்களும் மற்றும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு தகைமையுள்ளவர்களும் கீழ்வருமாறு:

— முதியோருக்கான கொடுப்பனவு பெறும் 416764 பேருக்கும், மற்றும் முதியவர்களாக இனம்காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ள மேலும் 142345 பேருக்கும் ரூபா 5000 கொடுப்பனவு வழங்கப்படும்;

— மாற்றுத் திறனாளிகளுக்கான கொடுப்பனவு பெறும் 84071 பேருக்கும், மற்றும் மாற்றுத் திறனாளிகள் எனஅடையாளம் காணப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ள மேலும் 35229 பேருக்கும் ரூபா 5000 கொடுப்பனவு உரித்தாகும்;

— விவசாயக் காப்புறுதி முறைமையின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள 160675 விவசாயிகளுக்கும் ரூபா 5000 கொடுப்பனவு உரித்தாகும்;

— சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு பெறும் 25320 பேருக்கும், மற்றும் அவ்வாறானவர்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள மேலும் 13850 பேருக்கும் ரூபா 5000 கொடுப்பனவு வழங்கப்படும்;

— கர்ப்பிணி தாய்மார் மற்றும் மந்த போசனையுடைய பிள்ளைகளுக்கான திரிபோஷ மற்றும் வேறு போசனைப் பொருட்கள் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும்;

— சமூர்த்தி கொடுப்பனவு பெறும் 1798655 பேருக்கும், மேலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ள 600339 குடும்பங்களுக்கும் ரூபா 5000 கொடுப்பனவு சமூர்த்தி வங்கிகள் மற்றும் சமூர்த்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்படும்;

— ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் 645179 பேருக்கு ஓய்வூதிய சம்பளம் வழங்கப்படும்;

— 1,500,000 அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படுவதுடன் சம்பளத்திலிருந்து கடன் தொகை மீள அறவிடப்படுவது மீண்டும் அறிவிக்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது;

— முச்சக்கர வண்டிகள், பார ஊர்திகள், பாடசாலை பேரூந்து மற்றும் சிற்றூர்திகள், மற்றும் சுயதொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் உந்துருளிகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் உள்ளிட்ட, சுய தொழில்களில் ஈடுபட்டுள்ள 1,500,000 பேருக்கான வரி கட்டும் தவணைக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது;

— உருவாகியுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகத் தமது பணியாளர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத தனியார் வர்த்தகங்களுக்கும் நிவாரணங்கள் உரித்தாகும்;

— மேற்படி வகைப்படுத்தலுக்கு உட்படாத, ஆனால் இடர் நிலைமைக்கு முகம்கொடுத்துள்ளதாக இனம் காணப்படுபவர்களுக்கும் சமமான நிவாரணங்கள் வழங்கப்படும். அது, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சமூக சேவை அபிவிருத்தி, சமூர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி மற்றும் குடும்ப சுகாதார சேவைகள் அதிகாரிகளினதும் மாவட்ட செயலாளர்களினதும் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும்;

அத்தோடு – மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்குத் தாமே நேரடியாகப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிவுறுத்தல் சுற்று நிருபத்தில் பணிக்கப்பட்டுள்ளது.

இந்த விநியோக நடைமுறையினை – விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில், இடைத்தரகர்கள் இன்றி – சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் விற்பனை வலையமைப்புகளைப் பங்குதாரர்களாக்கி மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று – குறித்த அதிகாரிகள், ஜனாதிபதி பணிக் குழாமின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் செயற்பட வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளார்கள்.

Web Design by The Design Lanka