கொரோனாவை கட்டுப்படுத்த பில்கேட்ஸ் கூறிய முக்கிய ஆலோசனை - Sri Lanka Muslim

கொரோனாவை கட்டுப்படுத்த பில்கேட்ஸ் கூறிய முக்கிய ஆலோசனை

Contributors
author image

Editorial Team

2015ல் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் வைரஸ் தாக்குதல்கள் குறித்து டெட் டாக் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது 4 வருடங்கள் கழித்து அப்படியே நடந்து வருகிறது.

அதாவது, எபோலா வைரசில் இருந்து நாம் தப்பித்துவிட்டோம். ஒருவருக்கு எபோலா வந்தால் அவர் உடனே அறிகுறிகளை வெளிப்படுத்துவார்.

அவரால் எங்கும் செல்ல முடியாது. இதனால் எபோலா பரவும் வேகம் குறைந்தது. இதனால் அந்த வைரஸ் பல நாடுகளில் பரவவில்லை. பல பணக்கார நாடுகள் எபோலாவில் இருந்து தப்பித்தது இப்படித்தான்.

ஆனால் இன்னொருமுறை நாம் இப்படி அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டோம். இன்னொரு முறை வேறு வைரஸ் இப்படி உருவானால், அதில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

பில் கேட்ஸ் சொன்னதுதான் அப்படியே தற்போது எந்த விஷயமும் மாறாமல் உலகம் முழுக்க நடந்து வருகிறது.

தற்போது அதே பில் கேட்ஸ், கொரோனா வைரஸை எதிர்கொள்வது எப்படி என்று கட்டுரை எழுதி உள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த மூன்று முக்கியமான வழிகளை பில்கேட்ஸ் கூறியுள்ளார். பில் கேட்ஸ் தனது கட்டுரையில், கொரோனா வைரஸ் நமது கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது.

முக்கியமாக அமெரிக்காவில் கொரோனா நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவது தெரிந்தும் கூட உலக நாடுகள் அதற்கு தயார் ஆகவில்லை.

அமெரிக்கா கொரோனா குறித்த எச்சரிக்கை எதையும் கண்டுகொள்ளவில்லை. தொடக்கத்திலேயே உலக நாடுகள் கொரோனாவிற்கு எதிராக தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு இருக்க வேண்டும்.

கொரோனா பரவுவதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் .அதற்கு உலகம் முழுக்க கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.

அமெரிக்காவில் மட்டுமில்லை. உலகம் முழுக்க எல்லா நாடுகளும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.

தங்கள் எல்லைகளை எல்லா நாடுகளும் மூட வேண்டும்.மொத்தமாக அனைத்து நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

சின்ன நகரம் விடாமல் அனைத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.இதற்கு காரணம் என்ன என்றும் அவர் விளக்கி உள்ளார்.

உலகம் முழுக்க மொத்தமாக கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும். கடைசி நோயாளி வரை குணப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். உலகில் எங்காவது ஒரு மூலையில் ஒரு நபருக்கு கொரோனா இருந்தாலும் கூட, அது பிறருக்கு பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதனால் கொரோனா மீண்டும் உயிர்பெறும். அதனால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியம்.

முக்கியமாக அமெரிக்காவில் இந்த பிரச்சனை முடிய குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும்.

70 நாட்களுக்கு மேல் கொரோனாவின் நிலை குறித்து அறிய தேவைப்படும். அதற்கு பின்தான் அமெரிக்கா இதில் இருந்து தப்புமா இல்லை இதிலேயே சிக்கிக்கொண்டு இருக்குமா என்று தெரியும்.

இது அமெரிக்காவின் பொருளாதரத்தை மிக மோசமாக பாதிக்க போகிறது. நீண்ட கால பாதிப்புகளை இது ஏற்படுத்தும். அமெரிக்கா இதற்கு தயாராக இருக்க வேண்டும்.

கொரோனா சோதனைகளை துரிதமாக செய்வது இதை தடுக்க இன்னொரு வழியாகும். அறிகுறி உள்ளவர்களை உடனே சோதனை செய்து உடனே முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

அவர்கள் தொடர்பு கொண்ட நபர்கள் எல்லோரையும் உடனுக்குடன் கண்டுபிடிக்க வேண்டும். எல்லோரையும் துரிதமாக தனிமைப்படுத்த வேண்டும். எல்லா நாடுகளும் தினமும் ஒரு நாளுக்கு தலா 50 ஆயிரம் பேரையாவது சோதனை செய்து முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

கடைசியாக இதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும். அவசரமாக மருந்து கண்டுபிடிப்பதை விட, பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பதுதான் முக்கியமானது ஆகும். பக்க விளைவு இல்லாத மருந்துகளை கண்டுபிடிப்பதுதான் இதில் அவசியமானது.

அப்படி மருந்தை கண்டுபிடிக்க 18 மாதங்கள் ஆகும். அதாவது மருந்தை கண்டுபிடித்து, அதை எலிகளிடம் சோதனை செய்து, மனிதர்களிடம் சோதனை செய்து பின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

அப்படியே மருந்துகளை கண்டுபிடித்தாலும் கூட அதை பல மில்லியன் பேருக்கு வேகமாக உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு எல்லாம் 18 மாதம் தேவைப்படும். அப்போதுதான் மிகப்பெரிய அளவில் மக்களை இதில் இருந்து காப்பாற்ற முடியும். கொரோனவை கட்டுப்படுத்த மூன்று பணிகளை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கு பிறப்பித்து மக்களை தனிமைப்படுத்த வேண்டும்.
சோதனைகளை வேகப்படுத்தி, முடிவுகளை அறிவிக்க வேண்டும்.மருந்து கண்டுபிடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team