எதுவும் சொல்லப்படாமலே சி-4 வார்டுக்கு மாற்றப்பட்டார்கள்; அவர்கள் அத்தனை பேரும் முஸ்லிம்கள். » Sri Lanka Muslim

எதுவும் சொல்லப்படாமலே சி-4 வார்டுக்கு மாற்றப்பட்டார்கள்; அவர்கள் அத்தனை பேரும் முஸ்லிம்கள்.

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

K.Asak

“அடக் கொடுமையே” என்று உங்களால் ஆவேசப்படாமல் இருக்க முடியுமா – இந்தச் செய்தியைப் பார்த்த பின்?

குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்ற சநதேகத்துக்கு உரியவர்களுக்காகவும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்காகவும் தனிமைப்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1,200 படுக்கைகள் கொண்ட இந்தச் சிறப்புப் பிரிவில் திடீரென நோயர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் – அவர்களுடைய மத அடிப்படையில்!

சுமார் 150 பேர் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள். அவர்களில் 40 பேர் முஸ்லிம்கள்.

“ஞாயிற்றுக் கிழமை இரவு ஏ-4 வார்டிலிருந்த சிலருடைய பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவர்கள் காரணம் எதுவும் சொல்லப்படாமலே சி-4 வார்டுக்கு மாற்றப்பட்டார்கள். அவர்கள் அத்தனை பேரும் முஸ்லிம்கள். இன்றைக்கு நாங்கள் எங்கள் வார்டு பணியாளர் ஒருவருடன் பேசியபோது அவர், இரண்டு கம்யூனிட்டிக்காரர்களுடைய நலன் கருதித்தான் இப்படிச் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னார்,” என்று தெரிவிக்கிறார் ஒரு நோயர்.

மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் குன்வந்த் ரத்தோட், ”பொதுவாக எல்லா மருத்துவமனைகளிலும் ஆண் வார்டு, பெண் வார்டு என்று பிரிக்கப்பட்டிருக்கும். இங்கே இந்து வார்டு, முஸ்லிம் வார்டு என்றும் பிரிக்கப்ட்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் முடிவு. நீங்கள் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் அவர்களைத்தான் கேட்க வேண்டும்,” என்று செய்தியாளரிடம் கூறியிருக்கிறார்.

மாநில துணை முதலமைச்சரும் சுகாதாரத்துறை அமைச்சருமான நிதின் படேல், ”இது பற்றிய தகவல் எதுவும் எனக்கு வரவில்லை. நான் விசாரிக்கிறேன்,” என்று சொன்னார். மாவட்ட ஆட்சியர் கே.கே.நிராலா, “எனது கவனத்திற்கு இது வரவில்லை. எங்களிடமிருந்து அப்படிப்பட்ட ஆணை எதுவும் போகவில்லை,” என்கிறார்.

[செய்தி: இந்தியன் எக்ஸ்பிரஸ், இன்றைய (ஏப்.15) இணையப் பதிப்பு]

இது தவறான செய்தியாக இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். ஆனால் உண்மைதான் என்றால்? துணை முதலமைச்சரான சுகாதாரத்துறை அமைச்சருக்கும் தெரியாது, மாவ்ட்ட ஆட்சியருக்கும் தெரியாது என்கிறபோது, மாநில அரசாங்கத்திடமிருந்து மருத்துவமனைக்கு இந்த முடிவைச் சொன்னது யார்? அரசாங்கத்திற்குச் சம்பந்தமில்லை என்றால் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் யாராவது கட்டாயப்படுத்தினார்களா? மருத்துவமனை உயரதிகாரிகளே இந்த மதவாதக் கண்ணோட்டம் உள்ளவர்கள்தானா? கிருமிக்கு மத அடையாளம் சூட்டியது போல சிகிச்சைக்கு மத வார்டு ஏற்பாடா? சிகிச்சையாவது ஒரே மாதிரியாகச் செய்யப்படுகிறதா?

நண்பர்களே, இந்தப் பதிவின் முதல் வரிக் கேள்விக்கு இப்போது பதில் சொல்லுங்கள்.

Web Design by The Design Lanka