சுட்டவனே பதில் சொல் » Sri Lanka Muslim

சுட்டவனே பதில் சொல்

LTTE

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


ஏழு வயதுச் சிறுவர்களை
எதற்காகக் கொன்றாய்
ஈழத்துக்கெதிராக
என்ன தவறு செய்தார்கள்?

இறைவனைத் தொழுவோரை
இரத்த வெறியில் சுட்டதேன்?
பேயாட்டம் ஆடினால்
போராட்டம் வெல்லும் என்றா?

முதுகுக்குப் பின்னால்
மூர்க்கத்தனாய் சுட்டதேன்?
இது வீரமா?
இல்லை கோரமா?

வேட்டு வைத்து
வேட்டை ஆடி
வீட்டிலிருந்த பெண்களை
விதவையாக்கியதால்
நாட்டைப் பிடித்தாயா
நாடியது பெற்றாயா?

கரண்டைக் கால் நனைய
கட்டிலடங்கா குருதியுள் நின்று
இரண்டு கையேந்தி
இறைவா இந்தப் புலிகளை
நாசமாக்கிப் போடென்று
நாங்கள் அழுதோமே!
நந்திக் களப்பில்
நசுக்கப் படும் நேரத்தில்
நொந்த மக்கள் கண்ணீரின்
நோவு புரிந்ததா?

பள்ளியிலே சுட்ட போது
பதறியதும் கதறியதும்
முள்ளி வாய்க்காலில்
முள்ளாகக் குத்தியதா
உள்ளத்தின் உள்ளே?

கெட்ட கூட்டம் செய்த
கேவலமான செயல் பற்றி
கேட்ட கேள்விக்கு
கிடைக்காது பதில் எதுவும்

ஆகஸ்ட் மூன்று
ஆக்கிய வடுக்கள்
ஆறாக் காயங்கள்
ஆருக்கும் மறக்காது

Web Design by The Design Lanka