காஷ்மீர் பத்திரிகையாளர்கள் மூவருக்கு புலிட்சர் விருது அறிவிப்பு » Sri Lanka Muslim

காஷ்மீர் பத்திரிகையாளர்கள் மூவருக்கு புலிட்சர் விருது அறிவிப்பு

FB_IMG_1588771023955

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Deepa

புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தமுறை best featured photography பிரிவில் மூன்று இந்திய புகைப்பட பத்திரிகையாளர்களுக்கு விருது அறிவிக்கபட்டிருக்கிறது. டர் யாசின், முக்தார் கான், சன்னி ஆனந்த் இந்த மூவரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். அசோசியேட் பிரஸ்சுக்காக (AP) பணி செய்பவர்கள்.

கடந்த வருடம் ஒரு நாளிரவில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து காஷ்மீர் திறந்த வெளி சிறைக்கூடமாக மாற்றப்பட்டது. இணையதளம், தொலைபேசி சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஸ்ரீநகரில் வசிக்கிற மக்கள் கூட அறியாமல் இருந்தனர்.

வெளியுலகத்துக்கு காஷ்மீரை மறைத்த நாட்களில் அங்கு என்ன நடந்தது என்பதை அங்கிருக்கும் செய்தியாளர்கள் அனுபவித்தாலும் கூட அந்தத் தகவல் வெளியில் வராது என்கிற நிலை தான். இதில் இந்த மூன்று புகைப்பட பத்திரிகையாளர்களும் ஒவ்வொரு நாளும் எடுத்த புகைப்படங்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்!! அதனாலேயே இந்த முறை சர்வதேச உயரிய விருதான புலிட்சர் இந்த மூவருக்கும் கிடைத்திருக்கிறது.

ஒரு நாடோடி போலவும், தலைமறைவு குற்றவாளிகளைப் போலவும் இராணுவம், காவல்துறை, போராட்டக்காரர்கள் கண்களுக்கு மறைந்து இவர்கள் எடுத்த புகைப்படங்கள் இவை. ஏனெனில் யாருக்கும் யார் மீதும் நம்பிக்கை இல்லாத தருணங்கள். அதனால் காஷ்மீர் பொது மக்களிடமிருந்தும் கூட தங்களை இவர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இவர்களின் குடும்பங்களுக்கு இவர்கள் என்ன ஆனார்கள் என்கிற தகவல் தெரிய வாய்ப்பிருந்திருக்கவில்லை.

இந்தப் புகைப்படங்களை அவர்கள் ஒவ்வொரு யுத்தியைப் பயன்படுத்தி எடுத்திருக்கிறார்கள். முற்றலும் அறிமுகம் அல்லாதவர்களின் வீடுகளில் பொய்க் காரணங்கள் சொல்லி உள்நுழைந்து அங்கிருந்து எடுத்தவை, காய்கறி பைக்குள் மறைத்து எடுத்தவை, உடைகளுக்குள் ஒளித்து வைத்து எடுத்தவை என புகைப்படங்கள் ஒவ்வொன்றுமே சவால் மிக்கவை.

புகைப்படங்கள் எடுத்ததை விட முக்கியம் அதை வெளியுலகத்துக்கு தெரியப்படுத்துவது. இணையதளமும், தபால்துறையும் முடங்கிய இடத்தில் எப்படி படங்களை வெளிப்பார்வைக்கு கொண்டு செல்வது? அதனால் ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு செல்பவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று எப்போதும் தேடிக்கொண்டே இருந்து, நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பவர்கள் மூலமாக ‘சிப்’பினை டில்லி பத்திரிகை தலைமையகத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இவர்கள் எடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் கிடைக்கின்றன.

இந்த கொரோனா காலத்திலும் நேரம் ஒதுக்கி விளையாட்டு வீரர்களிடமும், நடிகர்களிடமும் பேசி உற்சாகமூட்டிய பிரதமர் அவர்களும், இந்தியாவின் உயர்ந்த தேச அபிமானியான உள்துறை அமைச்சரான அமித் ஷாவும் இந்த உயரிய விருது பெற்ற புகைப்பட நிபுணர்களை என்ன சொல்லி வாழ்த்த இருக்கிறார்கள் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

Web Design by The Design Lanka