விசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி - Sri Lanka Muslim

விசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி

Contributors
author image

BBC

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவால் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த ரசாயன வாயுவை சுவாசித்த ஒரு சிறுமி உள்பட 13 பேர் பலியாகியுள்ளது இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மூவரின் உடல்கள் ரசாயன ஆலைக்கு அருகிலுள்ள பகுதியிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் 10 பேர் மருத்துவமனையில் இறந்துள்ளதாகவும் பிபிசி தெலுங்கு சேவை தெரிவிக்கிறது.

இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ரசாயன வாயுவை சுவாசித்த மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் அந்த ஆலை இன்று திறக்கப்பட்டது. காலை 3.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காததே விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது. வேறு ஒரு ரசாயனத்தை பயன்படுத்தி இதன் பாதிப்பை குறைக்க முயன்ற வருகிறோம். இதுவரை 90-95% கசிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது,” என்று இன்று காலை 10 மணியளவில் ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி தெரிவித்துள்ளார் என்று பிபிசி செய்தியாளர் தீப்தி பத்தினி தெரிவிக்கிறார்.

“1 – 1.5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிக பாதிப்பு நிகழ்ந்துள்ளது. ஆனாலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாயுவின் துர்நாற்றம் வீசியுள்ளது. எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையர் ஆர்.கே. மீனா பிபிசி தெலுங்கு சேவையிடம் தெரிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி இன்று விசாகபட்டினம் பயணம்

இந்த வாயுக் கசிவால் சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வினய் சந்த் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினம் ஆலையில் ரசாயன வாயு கசிவு; சிறுமி உள்பட மூவர் பலி
Image captionஎல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் தெர்மாகோல் உற்பத்தி ஆலையில் இந்த ரசாயன வாயு கசிவு நிகழ்ந்துள்ளது.

மீட்புப் பணிகளைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று விசாகபட்டினம் செல்கிறார்.

ரசாயன வாயுவை சுவாசித்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரசாயன வாயு கசிவு உண்டான எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான, தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எல்.ஜி கெமிக்கல்ஸ் நிறுவனம், குடியிருப்புவாசிகள் மற்றும் தங்கள் ஆலை ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்புடைய அமைப்புகளுடன் சேர்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.

ரசாயன வாயுக் கசிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்ட 15 முதியவர்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் சுமார் ஐம்பது அவசர ஊர்திகள் ஈடுபட்டுள்ளன. பலரும் மயக்க நிலையில் உள்ளனர்.

ஸ்டைரீன் எனும் ரசாயன வாயு

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஸ்டைரீன் (styrene) எனும் ரசாயன வாயு வெளியேறியதாக, விசாகப்பட்டினத்தில் பணியாற்றும் ஆந்திரப் பிரதேச மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ராஜேந்திர ரெட்டி என்பவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

Andhra Pradesh: Chemical gases leakage in Visakhapatnam, people run out of homes

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, வருவாய்த் துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

ஆர்.ஆர் வெங்கடபுரம் எனும் பகுதியில் அமைந்துள்ள எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் தெர்மாகோல் உற்பத்தி ஆலையில் இந்த ரசாயன வாயுக் கசிவு நிகழ்ந்துள்ளது.

அதை சுற்றியுள்ள நாயுடு கார்டன், பத்மநாபபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துகொண்டு வாகனங்களில் வெளியேறி வருகின்றனர்.

தென்கொரிய நிறுவனம்

1961ம் ஆண்டு ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் எனும் பெயரில் இந்த ஆலை நிறுவப்பட்டது. 1978இல் யூபி தொழில் குழுமத்தால் இந்த நிறுவனம் வாங்கப்பட்டது.

Andhra Pradesh: Chemical gases leakage in Visakhapatnam, people run out of homesபடத்தின் காப்புரிமைBBC SPORT

அந்த தொழில் குழுமத்திடமிருந்து 1997இல் தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி நிறுவனம் ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் ஆலையை வாங்கி அதற்கு எல்.ஜி பாலிமர்ஸ் என்று பெயரை மாற்றியது.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்ததால் இந்த நிறுவனம் மீண்டும் இயங்கத் தொடங்கியது.

அதிகாலை 3 மணிக்கு இந்த வாயு கசிவு நடந்தது என்பதால் உறக்கத்திலிருந்த பல மக்களுக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே உடனடியாக தெரியாமல் போனது.

வாயுவை நிறுத்துவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Web Design by Srilanka Muslims Web Team