நல்லாட்சியில் "நீதி" கிலோ என்ன விலை? » Sri Lanka Muslim

நல்லாட்சியில் “நீதி” கிலோ என்ன விலை?

parliement

Contributors
author image

Ahamed Furhan - Kalmunai

நல்லாட்சியில் “நீதி” கிலோ என்ன விலை என்று கேட்குமளவுக்கு நிலமை மோசமாகிவிட்டது.!

நல்லாட்சியை கொண்டுவருவதில் நூறுவீதம் முன்னின்று உழைத்த முஸ்லிம் சமூகம் தற்சமயம் மூக்குடைந்து நிற்பது வேதனையளிக்கிறது. மேலும் இனவாதத்தின் இருப்பிடமான இந்த நல்லாட்சியில் முஸ்லிம்கள் நீதி வேண்டி இன்னுமின்னும் காத்துக் கொண்டிருப்பது முட்டாள்தனமான காரியமே அன்றி வேறில்லை எனலாம்.

அண்மைக்காலமாக நால்லாட்சியின் ஜனாதிபதியினால் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதானது. வியாபாரம் இல்லாத கடையில் முதலாளி பொருட்களை ” இடத்துக்கு இடம்” மாற்றுவது போலவே விவரிக்க தோன்றுகிறது.

அண்மையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களுக்கு மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து கலாச்சார பிரதியமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சில சர்ச்சைக்குறிய கருத்துக்கள் (குறிப்பாக) இந்து விவகார பிரதி அமைச்சை முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியதால் இந்து சமயத்திற்கே பெரும் இழுக்கு ஏற்பட்டு விட்டது போல் அமைச்சர் மனோ கணேசன் தமிழ் மக்கள் மத்தியில் காட்சிப்படுத்தியது மாத்திரமின்றி இந்து அலுவல்கள் இன்றி காதர் மஸ்தானின் பிரதியமைச்சு வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

(- மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது. இஸ்லாமிய மத விவகாரம், அமைச்சு சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், நான் அதை எதிர்த்து இருப்பேன்.-)

என்று கூறும் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் இந்து, முஸ்லிம், கத்தோலிக்க விவகார அமைச்சராக 1977க்கு பிற்பட்ட காலப்பகுதில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சியில் சிரில் மெத்யூ என்ற கிருஸ்தவர் ஒருவரே அமைச்சராக இருந்திருக்கிறார். இதனால் எந்த பிரச்சினையும் இதுவரையில் இடம்பெற்றதாகவோ யாரும் மதம் மாறிவிட்டதாகவோ நாம் அறியவில்லை என்பதை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே மதவாத அடிப்படையில் கருத்துக் கூறும் நீங்கள் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேச அருகதை அற்றவர் என்பதையும் சேர்த்து ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

“மதம் என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டு கூடாது” என்று கூறும் அமைச்சர் மனோ கணேசன் அவர்களே! அப்படியானால் நீங்கள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் அடிப்படை வாதத்தையும் அரேபிய தோற்றப்பாடையும் கைவிட வேண்டும் என கூறியது எந்த விளையாட்டு என்பதையும் எமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.?

முஸ்லிம்களை கருவேப்பிள்ளையாக பயன்படுத்தி ஆட்சி பீடம் ஏறியதாக கவலைப்படும் கொழுப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் அவர்கள் அவர்களுக்கு இப்போதாவது முஸ்லிம்கள் தொடர்பில் கவலையும், ஞானமும் வந்திருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது, என்றாலும் இந்த ஞானம் வந்த பிற்பாடும் அவர் ஏன் நல்லாட்சிக்குள் புதைந்து கிடக்கிறார் என்பதுதான் எமக்கு புரியவில்லை?!

அண்மையில் இணையதளங்களில் வெளியான எனது கட்டுரைக்கு விளக்கம் தர வெளிக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கோமாவில் இருந்தவனைப்போன்று உலறுகிறாரே தவிர நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இடம்பெறும் இவ்வாறான இனவிரோத செயற்பாடுகளுக்கு தீர்வு எதை பெற்றுத்தந்துள்ளார். என்ற எனது கேள்விக்கு விளக்கம் கூற மறந்துவிட்டார்.
அதற்காக ஞானசார தேரர் கைதாகி விட்டார் என அவசரப்பட்டு நீங்கள் அறிக்கைவிட்டு தப்பிக்க முடியாது.

2016 ஜனவரி 25ம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்றம் ஆறு மாத கடூளிய சிறைத்தண்டனை வழங்கிய விடயமும் ஞானசார தேரர் மட்டக்களப்பிற்குள் பிரவேசிக்க மட்டக்களப்பு சுற்றுலா நீதவானினால் தடையுத்தரவு வழங்கப்பட்ட விடயமும் ஒன்றாகவே எம்மால் அவதானிக்க முடிகின்றது. மட்டுமல்ல கடந்த வருடம் நான்கு தனிக்குழு அமைத்து தேடிய நாடகம் போன்றதொரு காட்சிப்படுத்தலாகவும் இதை எம்மால் நோக்க முடிகின்றது.

இன்னும் ஒருசில நாட்களில் ஞானசார தேரர் இந்த அரசின் ஆசிர்வாதத்துடன் வெளியில் வந்துவிடுவார். எனவே அவசரப்பட்டு விடாதீர்கள்.

மஹிந்த ராஜபக்ஷ அரசை கவித்து நாட்டின் கஜானாவை காலியாக்க வந்த கொள்ளைக்கூட்டத்தின் கூட்டாளிகளாகவே உங்களையும் இந்த அரசாங்கத்தையும் மக்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் இலக்கு இல்லாமல் பயணிப்பதை முஸ்லிம்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். மட்டுமல்ல இவ்வரசாங்கத்தில் “நீதி” கிலோ என்ன விலை என்று கேட்குமளவுக்கு நிலமை மோசமாகிவிட்டது.

எனவே நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால் உடனடியாக அரசை விட்டு வெளியேறி உங்களை நியாயவான்களாக்கிக் கொள்ளுங்கள் அதைவிட்டுவிட்டு மீண்டும் மீண்டும் முஸ்லிம்களின் தலையில் மிளகாய் அரைக்க முற்படாதீர்கள்.

Web Design by The Design Lanka