சீரற்ற கால நிலை - 2 உயிரிழப்பு, - மீட்பு பணியில் கடற்படையினர் » Sri Lanka Muslim

சீரற்ற கால நிலை – 2 உயிரிழப்பு, – மீட்பு பணியில் கடற்படையினர்

Contributors
author image

Editorial Team

சீரற்ற கால நிலை – 2 உயிரிழப்பு, – மீட்பு பணியில் கடற்படையினர் Featured

 மே 16, 2020

  • facebook sharing button
    twitter sharing button
    pinterest sharing button
    email sharing button
    sharethis sharing button
சீரற்ற கால நிலை - 2 உயிரிழப்பு, - மீட்பு பணியில் கடற்படையினர்

நாட்டின் சில இடங்களில் பெய்த கடும் மழையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தத்தால் இருவர் உயிரிழந்துள்ளனர். 1805 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மா – ஓயாவின் நீர்மட்டம் கிரியுல்ல பகுதியில் உயர்வடைந்துள்ளது. ; கிரியுல்ல – மரதகொல்ல பகுதியில் சிறிதளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்பிரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும் பணியில் கடற்படையின் பல பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.1589647127 weather L

மழை தொடருமாயின் கிரியுல்ல – குருணாகல் வீதியின் கிரியுல்ல பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

களனி கங்கையின் ஹொலொம்புவ பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குகுலே கங்கை மற்றும் தெதுறு ஓயா நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கேகாலை மாவட்டமே மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கேகாலை – இம்புல்கஸ்தெனிய பகுதியில் வெள்ளத்தினால் 48 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இதே பகுதியில் வல்தெனிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 65 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை மாவட்டத்தில் இதுவரை 530 குடும்பங்களை சேர்ந்த 1830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மழையுடனான வானிலையை அடுத்து மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளை தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவான இடங்களை முதல் கட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மழை தொடருமாயின் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டத்திற்குள் அவதானத்துடன் செயற்பட வேண்டிய பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவான இடங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் தொடர்பில் அபாயம் நிலவுமாயின் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் மூன்றாம் கட்டப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற வேண்டியது கட்டாயமானதாகும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவான பகுதிக்கு உட்பட்ட மக்கயேள இவ்வாறு அறிவுறுத்தப்பட்டள்ளனர்.

மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு மக்கள் பாதுகாக்கான இடங்களை நாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதனால் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிற்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நேற்று (15) காலை 8.30 மணியில் இருந்து இன்று அதிகாலை 3 மணி வரையான காலப்பகுதியில் கேகாலை கலிகமுவ பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அங்கு 212 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

காலி – சிறிகந்துர பகுதியில் 20 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், காலி – ஹேகொடவில் 191 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
காலி நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் 163.3 மில்லிமீட்டரும், இரத்தினபுரி – கிரிஎல்லவில் 147.4 மில்லிமீட்டரும், இரத்தினபுரி – பரகடுவ பகுதியில் 141.5 மில்லிமீட்டரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

களுத்துறை – மதுராவல பகுதியில் 133.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கொழும்பு – மட்டக்குளி பகுதியில் 112 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் களுத்துறை – மத்துகம பகுதியில் 105 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. மழையை அடுத்து களு, களனி மற்றும் கிங் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka