உயர்நீதிமன்றில் சுமந்திரனின் எடுத்துரைப்பு » Sri Lanka Muslim

உயர்நீதிமன்றில் சுமந்திரனின் எடுத்துரைப்பு

Court

Contributors
author image

Editorial Team

அரசமைப்பின் 70(5)ஆவது சரத்தின் பிரகாரம், நாடாளுமன்றத் தேர்தலை முன்னரே நடத்த வேண்டுமானால், நாடாளுமன்றக் கலைப்பு, தேர்தல் நடைபெறும் திகதி, புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி ஆகிய மூன்றும் ஒருமித்து அறிவிக்க வேண்டுமெனவும், தற்போதைய சூழ்நிலையில் மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றைக் கூட்டுவது சாத்தியமில்லை என்பதால், ஜனாதிபதியின் நாடாளுமன்ற அறிவித்தல் செல்லுபடியாகாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தன்தரப்பு வாதத்தை நேற்று (18) ஆரம்பித்து வைத்தார்.
பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மற்றும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகிய இரண்டையும் வலுவிழக்கச் செய்யுமாறு வலியுறுத்தித் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள், நேற்று (18), பிரதம நீதியரசர் தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் குழுவினால், உயர் நீதிமன்றத்தில் ஆராயப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதற்காக, நேற்றைய உயர்நீதிமன்ற அமர்வு, வழமையாக நடைபெறும் மண்டபத்தில் நடைபெறாமல், நீதிமன்ற சம்பிரதாய நிகழ்வுகள் நடைபெறும் 5ஆவது மாடியின் 501ஆவது பொது மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனெக்க அளுவிஹார, சிசிர டீ அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய, நீதியரசர் குழாம் முன்னிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி, தன்தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
சரித்த குணரத்ன மற்றும் விக்டர் ஐவன் உட்பட ஏழு பேரால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், தொடர்ந்து தன்னிலை விளக்கம் தருகையில், நாடாளுமன்றம் ஒருபோதும் இல்லாமற்போகாது, அதனை ஒருபோதும் இல்லாமற்செய்ய முடியாது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அது உறங்குநிலையில் செல்லும் என்றும் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்துக்காக மட்டுமே நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது எனவும் சுமந்திரன் தன் வாதத்தை முன்வைத்தார்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் அவசியமானவை. நாடாளுமன்றம் இல்லை என்றால், அந்த நாடு ஒரு ஜனநாயக நாடாகாது என்பதை வலியுறுத்திய சுமந்திரன், 2018ஆம் ஆண்டில் நாடாளுமன்றக் கலைப்பு வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதியிடம் முழுமையான அதிகாரம் இல்லை என்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அரசமைப்புக்கு உட்பட்டதோடு, அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன என்று, 7 நீதியரசர்களைக் கொண்ட தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டினார்.
அரசமைப்பின் 70 (5)ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முன்கூட்டியே தேர்தலுக்காக நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் கட்டுப்பாடுகளுடன் வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற பிரகடனம், தேர்தல் நடைபெற வேண்டிய திகதி மற்றும் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டும் திகதி ஆகியவற்றைக் குறிப்பிடவில்லை என்றால், நாடாளுமன்றக் கலைப்பு குறித்து வெளியான வர்த்தமானி, சட்ட வலிதற்றதாகும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஏப்ரல் 25ஆம் திகதியும் வந்து போய்விட்டது, மே 14ஆம் திகதியும் வந்து போய்விட்டது. ஆனால், புதிய நாடாளுமன்றம் இன்னும் இல்லை என்பதால், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான பிரகடனம் இப்போது செல்லுபடியற்றதாகியுள்ளது என, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது வாதத்தைத் தொடர்ந்தார்.
நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தாமல் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது எனவும் மக்களின் நம்பிக்கைக்குரிய அரசமைப்பின் 70ஆவது சரத்தில், ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் சுமந்திரன் வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணைக்குழு, ஒரு பொது விடுமுறையில் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளாது.  மூன்று பொது விடுமுறை நாள்களில் வேட்புமனுக்களை அவர்கள் ஏற்றுக்கொள்வது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைப் பாதிக்கும் ஒரு சீரற்ற செயல் என்பதையும் சுமந்திரன் சுட்டிக்காட்டியதோடு, விண்ணப்பங்கள் ஏற்றுக்கொண்டமையை இச்செயல் கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் அவர் மேலும் கேள்விக்குட்படுத்தினார்.
அரசமைப்பின் மீது கவனம் செலுத்தாமல், கண்மூடித்தனமான ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்திருக்கிறதெனவும் இறையாண்மையுள்ள மக்களின் மீது ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் நகைச்சுவையாக நடந்துகொள்கிறதா என்ற கேள்வியையும் சுமந்திரன் எழுப்பினார்.
அந்த வாதத்தோடு, மதிய போசனத்துக்காக நீதிமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. சாப்பாட்டின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட அமர்வில், தற்போதைய தொற்றுச் சூழ்நிலையில் தேர்தல்களை நடத்துவதில் உள்ள சவால்களை சுமந்திரன் பட்டியலிட்டார்.
தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போதைய தொற்று நிலைமைகளின் கீழ் தேர்தல்களை நடத்தப் போதுமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, சட்டத்தை இயற்றுவது நாடாளுமன்றத்தின் அதிகாரம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சுட்டமன்றத்தால் செய்யப்பட வேண்டியதை சட்டமன்றத்தால் செய்ய வேண்டும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக்குறிப்பால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு போன்ற நிர்வாகச் சீர்கேட்டைச் செய்ய முடியாது என்பதையும் சுமந்திரன் வலியுறுத்தினார்.
இப்படித் தொடர்ந்த மிக நீண்ட தர்க்கம், நேற்று நிறைவடைந்த நிலையில், இன்றைய தினமும் ஏனையவர்களின் சமர்ப்பிப்புகள் இடம்பெறவுள்ளன. நேற்று, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் சமர்ப்பிப்பு மாத்திரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka