கலாநிதிப் பட்டம் பெற்ற டாக்டர் சுக்ரி இலங்கைக்கு வந்து என்ன செய்தார்? » Sri Lanka Muslim

கலாநிதிப் பட்டம் பெற்ற டாக்டர் சுக்ரி இலங்கைக்கு வந்து என்ன செய்தார்?

FB_IMG_1589894300883

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதுசம், பன்னூலாசிரியர், கலாநிதி சுக்ரி தனது 80வது வயதில் இன்று மறைந்தார்!
000

இனிய நண்பர் கலாநிதி சுக்கிரி மறைந்தார்
—————————————
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1961 தொடக்கம் 1965 வரை என் ஒரு சாலைமாணாக்கராகவும் நெருக்கமான நண்பராகவும் இருந்த கெழுதகை நண்பர் கலாநிதி சுக்ரி காலமான செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன்

சுக்ரி அன்று தமிழிலே ஒரு மிகசிறந்த பேச்சாளன்

அவரது தமிழ் எழுத்துகள் அனைவரையும் ஆகர்சித்தன

தமிழ் மாணவர் மத்தியில் பிரசித்தமானவர்

முதலாம் வருடம் முடிந்ததும் விசேட கற்கை நெறியாக எதனத் தெரிவு செய்வது என்பது முதலாம் வருட மாணாக்கருக்கு ஒரு பெரிய பிரச்சனை

நான் தமிழை சிறப்பு பாடமாக எடுத்தேன்

சுக்ரியையும் வாருங்கள் தமிழ் பயில்வோம் என இழுத்தேன்

பேராசிரியர் வித்தியானந்தன் சுக்ரியின் திறமைகளால் ஈர்க்கப்பட்டவர்

பேராசிரியர் உவைஸுக்குப் பின்னர் இன்னொருவரை உருவாக்க அவர் எண்ணியிருந்திருக்கக்கூடும்

அவர் சுக்க்ரியை தமிழ் சிறப்பு பாடம் பயில வா என இழுத்தார்

மறுபுறம் கலாநிதி இமாம் அரபுமொழி பயில வா என இழுத்தார்

தமிழ் மொழியா அரபு மொழியா

பேராசிரியர் இமாம் வென்றுவிட்டார்

சுக்ரி விரும்பியிருந்தால் பல்கலைக்ழக விரிவுரையாளராகி
சுலபமாக பேராசிரியரும் ஆகி இருக்கலாம்

கலாநிதி இமாம் அவரை வென்றது போல நளீம் ஹாஜியாரும் அவரை வென்று விட்டார்

பேருவளை நளீமியாவின் பணிப்பாளரானார் சுக்ரி

சுக்க்ரியை காணும் போதெல்லாம் நீங்கள் தமிழ் சிறப்பு செய்ய வந்திருந்தால் இருவரும் இன்னும் மூன்று வருடங்கள் அருகருகே இருந்திருப்போம் என நான் கூறுவேன்

அவர் பலத்து சிரிப்பார்

மத பேதம்
இனபேதம்
மொழி பேதம்
பிரதேசபேதம்
கடந்து மனிதனாக வாழ்ந்த அந்த நண்பனின் மறைவு மனதை வருத்துகிறது

அவரோடு பல்கலைக்கழக கன்ரீனில்
பிளேன் ரீ குடித்துக் குடித்துகொண்டே
மணிக்கணக்காக தர்க்கித்த
அந்த இனிய நாட்கள்
மனதில் நிழலாடுகின்றன

சென்று வா என் இனிய நண்பனே
– குறிப்பு- போராசிரியர் மெளனகுரு

0000

கலாநிதி சுக்ரியின் அறிவுப் பங்களிப்பு பற்றி சாதாரண ஒரு Obituary யில் எளிமையாக கூறிட முடியாது. சுக்ரி கொழும்பு ஸாஹிராவில் பாடசாலை கல்வியை பெற்றவர். பல்கலைக்கழக கல்வி அவருக்கு பெராதெனிய பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து எடின்பரோவில் வாய்த்தது. அவருக்கு கிடைத்த மூன்று ஆசிரியர்கள் அவருடைய கல்வி வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள். அறிஞர் ஏ. எம். ஏ அஸீஸ், பேராசிரியர் எஸ். ஏ இமாம் மற்றும் மொன்டொகொமரி வாட்..!

இவர்கள் மூவரும் தத்தம் துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள், முக்கியமானவர்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள்.அறிஞர் அஸீஸ், இலங்கையின் முஸ்லிம் நவீனத்துவத்தின் முன்னோடி ; சமூக எழுச்சிப் போராளி ; பெருங் கல்வியாளர்.. அஸீஸ் தான் அல்லாமா இக்பாலை அறிந்து கொள்ள டாக்டர் சுக்ரிக்கு Gateway ஆக இருந்தவர். கொழும்பு ஸாஹிராவின் பிரின்சிபளாக இருந்தவர்.

கலாநிதி எஸ். ஏ இமாம் பெராதெனிய கெம்பஸில் அரபு மொழி விரிவுரையாளராக கடமை புரிந்தவர் ; பன்மொழி வித்தகர் ; இஸ்லாமிய பனுவல்களில் ஆழ்ந்து போனவர். பாகிஸ்தானியரான பேராசிரியர் இமாமிடம் இருந்து தான் மகா கவி இக்பால் குறித்து மேலதிகமான புரிதல்களையும், மேற்கு பல்கலைக்கழகம் ஒன்றிற்கு சென்று கற்க வேண்டும் என்கிற உந்துதலையும் சுக்ரி பெறுகிறார்.

பேராசிரியர் மொன்டொகொமரி வாட், Western Academia வில் இஸ்லாமிய துறையில் Authority ஆனவர் மொன்டொகொமரி வாட். இஸ்லாமிய வரலாறு குறித்தும், அறிவு மரபு குறித்தும் எண்ணற்ற ஆக்கங்களை எழுதிக் குவித்தவர், வாட்.

இந்த மூவருக்கும் கலாநிதி சுக்ரியின் சிந்தனையை வடிவமைத்ததில் சம அளவு பங்கிருக்கிறது.

ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், டாக்டர் சுக்ரியின் அறிவு மற்றும் சமூக ரீதியான பங்களிப்பு என்பது சம்பிரதாய ரீதியானதும் அல்ல, லேசுப்பட்டதும் அல்ல.. அவர் முக்கியமான சில கோணங்களில் ஏனைய தமிழ் நிலைப்பட்ட இஸ்லாமிய சிந்தனைப் புலத்தின் அறிஞர்களிடத்தில் இருந்து வித்தியாசப்பட்டவர்.

எடின்பரோவில் இமாம் அபூதாலிப் மக்கியின் கூத்துல் குலூப் நூலை உலகப் புகழ் பெற்ற பேராசிரியர் மொன்டொகொமரி வாட்டின் கீழ் ஆய்வு செய்து சூஃபித்துத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர், சுக்ரி. மேற்கு பல்கலைக்கழகம் ஒன்றில் இஸ்லாமிய துறையில் உச்சம் தொடுவது அரிதான ஒரு நிகழ்வு.

கலாநிதிப் பட்டம் பெற்ற டாக்டர் சுக்ரி இலங்கைக்கு வந்து என்ன செய்தார்?

அப்போதைய நிலையில் ஒரு சாதாரண மத்ரஸாவான ஜாமீஆ நளீமிய்யாவின் பணிப்பாளராக பதவி ஏற்றுக் கொள்கிறார். கற்பனை செய்து பாருங்கள், ஒரு மத்ரஸாவின் பொறுப்பாளராக ஒரு மேற்கத்திய பல்கலைக்கழக பட்டதாரி..! இன்று நினைத்தாலும் ஆச்சரியம் பொங்கும் நிகழ்விது.. டாக்டர் சுக்ரி நினைத்து இருந்தால் இலகுவாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வேலை ஒன்றில் சேர்ந்து தற்போதைய நிலையை விட வசதி வாய்ப்புகளில் சிறந்த நிலையில் இருந்து இருக்கலாம் (இலங்கையில் உள்ள ஏனைய முஸ்லிம் ஷரீஆ துறை கலாநிதிகள் பலரின் நிலையை யோசியுங்கள். கிட்டத்தட்ட அனைவருமே வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில்). ஆனால் சமூகத்திற்காக இந்த தியாகத்தை செய்ய டாக்டர் சுக்ரி முன் வந்தார். மகத்தான தியாகம், பொன்னெழுத்துக்களால் பொறிக்கபட்ட வேண்டிய அரிதான தியாகம்.

அடுத்த முக்கியமான அம்சம், இலங்கையில் நவீன இஸ்லாமிய சிந்தனையின் வரலாறு இஸ்லாமிய இயக்கங்களின் சிந்தனை சட்டகத்தினுள் மட்டுமே இயங்கி இமாம் ஹஸன் அல் பன்னா, ஸெய்யித் குத்ப், மெளலானா அபுல் அஃலா மெளதூதி, முஹ‌ம்ம‌த் அல் கஸ்ஸாலி, ஷெய்க் யூசுஃப் அல் கர்ளாவி, அபுல் ஹஸன் அலி நத்வி போன்றவர்கள் மட்டுமே மைய நீரோட்ட உரையாடலில் கவனத்தில் கொள்ளப்பட்டுக் கொண்டு இருந்த வேளைகளில் டாக்டர் சுக்ரி சளைக்காமல் ஜமாலுத்தீன் ஆஃப்கானி, அல்லாமா இக்பால், மாலிக் பின் நபி போன்றவர்களை குறித்து எழுதிக் கொண்டு இருந்தார். காரணம் என்ன?

டாக்டர் சுக்ரி கல்வி கற்றது மேற்குலகில்.. மேற்குலக அறிவுப் புல உரையாடல்களில் ஹஸன் அல் பன்னா, யூசுஃப் அல் கர்ளாவியை விடவு‌ம் அல்லாமா இக்பாலும், மாலிக் பின் நபியும் தான் அதிகமும் கவனத்தில் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் இஸ்லாம் தற்போது எதிர் கொள்ளும் முதன்மையான சவால் நவீனத்துவம் தான் அல்லது நவீனத்துவத்தை எப்படி எதிர் கொள்வது என்பது தான் முஸ்லிம் சமூகத்தின் முதன்மையான சவால் என்பதை உணர்ந்து செயல்பட்டவர்கள் இவர்கள் தாம். அதனால்தான் வேறெந்த இஸ்லாமிய அறிஞர் மரபையும் விட இவர்களை மேற்குலக கல்விப் புலங்கள் அதிகம் கவனத்தில் கொண்டன.

டாக்டர் சுக்ரி மேற்குலக அறிவு மரபின் உற்பத்தி எனும் வகையில் அவரும் மேற்போந்த சிந்தனையாளர்களையே அதிகம் கவனத்தில் கொண்டார். ஆஃப்கானி, இக்பால், மாலிக் பின் நபி, அலி இஸ்ஸத் பெகோவிச் குறித்தும் மற்றும் இமாம் கஸ்ஸாலி, இப்னு ருஷ்த் போன்றவர்கள் குறித்தும் டாக்டர் சுக்ரி எழுதிய விடயங்களின் ஒரு துகளை கூட ஏனைய இஸ்லாமிய அறிஞர்களுக்கு தொடக் கூட முடியவில்லை. காரணம், இவர்களுக்கு அதில் பரிச்சயம் இல்லை.ஆனால் Revivalism இன் பிடிக்குள் ஆழ்ந்திருந்த தமிழ் நிலைப்பட்ட இஸ்லாமிய சிந்தனைப் புலத்திற்கு டாக்டர் சுக்ரியின் முக்கியத்துவம் புரியவில்லை. அவருடைய Theoretical Framework உம் புரியவில்லை. இதனால் அவருடைய ஆக்கங்கள் மைய உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
0000
குறிப்பு-Lafees Shaheed

Web Design by The Design Lanka