மனதை வருத்தும் மாளிகாவத்தை! » Sri Lanka Muslim

மனதை வருத்தும் மாளிகாவத்தை!

IMG_20200522_130444

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ashrof sihabdeen

எனது சிறு பராயத்தில் எங்கள் ஊரில் சில செல்வந்தர்கள் றமளான் 27ல் ஸக்காத் – ஸதகா கொடுப்பார்கள். அவர்களது வளாகத்துக்குள் நபர்களை அடைத்து வரிசையில் வரவிட்டு பெரியவர்களுக்கு ஒரு ரூபாய், நடுத்தரம் 50 சதம் – சின்னப் பயல்களுக்கு 25 சதம். அப்போதைய நிலையில் அது பரவாயில்லை என்ற ரகத் தொகை.

மானிடர் வாழ்வில் மாற்றங்கள் நிகழ்ந்து புதிய சிந்தளைகள் கிளர்ந்து ஸகாத் கொடுப்பதற்கான வேறு வழிமுறைகள் ஆங்காங்கே கையாளப்பட்டு வந்த போதும் எனது சிறு பராயத்தில் பார்த்த அதே செயன்முறையும் இன்னும் அமுலில் இருப்பதைத்தான் இன்று மாளிகாவத்தையில் நம்மால் காண முடிந்துள்ளது.

இம்முறை எங்களது ஊரில் கொரோனா – ரமளான் இரண்டையும் சேர்த்து ஒரு புதிய அணி களமிறங்கி பெருந்தொகை சேர்த்துப் பகிர்ந்தளித்தது. கொடுப்பதில் தனி வழிப் பெருமை பாராட்டதவர்கள் நிறையப் பேர் பங்களிப்புச் செய்திருந்தனர்.

மஹல்லாவில் வாழுவோர் குறித்த கணக்கெடுப்பின் மூலம் வறியோர், தேவையுடையோர் கண்டறியப்பட்டுப் பட்டியலிடப்பட்டு ஒரேயிடத்தில் ஸகாத் – ஸதகாவைச் சேர்ந்து வழங்கி வர வேண்டும் என்று ஏற்கெனவே நான் பலமுறை எழுதியிருக்கிறேன். இந்தப் பட்டியல் வேறு தேவைகளுக்கும் கூடப் பயன்படும். அப்படி நிகழ்ந்திருந்தால் இன்று மாளிகாவத்தையில் இப்படியொரு துயரத்தை நாம் எதிர்கொண்டிருக்க மாட்டோம்.

இங்குள்ள பிரச்சனை “எனது பணம், நான் விரும்பியவாறுதான் கொடுப்பேன்“ என்கிற பெருமைத் தனத்தைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும். கொடுத்தல் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் காலங்காலமாக ஆலிம்கள் சொல்லித்தான் வருகிறார்கள். கொடுக்கும் போது பெறுபவரைக் காட்டாமல், அப்படியே காட்டவேண்டி வந்தாலும் அவர்களது அடையாளத்தை மறைத்துக் கொடுக்க வேண்டும் என்ற மனிதப் பண்புடன் இன்றைய இளைஞர்கள் ஈடுபட்டு வந்துள்ளதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

என்னதான் இருந்தாலும் இப்படியா நடந்து கொள்வது என்ற வாதங்களைச் சிலர் முன் வைக்கிறார்கள். அரசாங்கம் வழங்குவது போல பட்டியலிட்டு வழங்கப்படுவது அல்ல இது. அதனால் வறுமையில் உள்ளவர்கள், அன்றாடங் காய்ச்சிகள் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் தமது உச்ச பலத்தையும் முயற்சியையும் கைக்கொள்ளவே முனைவார்கள்.

இன்னொரு முறை இவ்வாறான துயரங்கள் ஏற்படாதிருக்கப் பிரார்த்திப்பதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

Web Design by The Design Lanka