விளை நிலங்களின் காவலாக இருக்கும் "கொண்டுவட்டுவான் வீரையடியப்பா சியாறம் "... » Sri Lanka Muslim

விளை நிலங்களின் காவலாக இருக்கும் “கொண்டுவட்டுவான் வீரையடியப்பா சியாறம் “…

IMG_20200604_211050

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஒரு சமூகத்தின் நிரந்தர இருப்பில் அதன் தொல்லியல் அடையாளம் மிக முக்கியமானது, அவற்றைப் பாதுகாப்பதென்பது, சமூக நலன் மட்டுமல்ல எமது வரலாற்றுத் தொடர்ச்சிக்கான ஆதாரமாகவும் அமையும் ,அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின்முஸ்லிம் புராதன இருப்பியல் அடையாளமாக விளங்கும் ஒரு சியாறம் பற்றிய பதிவே இதுவாகும்.

#அறிமுகம்.,

இலங்கை கிழக்கு மாகாணத்தின் ,அம்பாரை மாவட்டத்தில் உள்ள அம்பாரை நகரில் இருந்து பிபிலை நோக்கிச் செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள ஊரே கொண்டவட்டுவான் எனப்படும் பிரதேசமாகும்.இதில் அமைந்துள்ள “இராணுவ முகாம் ” மிகவும் பிரபலமானது, இராணுவ முகாமில் இருந்து பிரிந்து செல்லும் உள்வழிப்பாதையால் 600 ,M பயணிப்பதன் மூலம் குறித்த சியாறத்தையும் , பள்ளிவாசலையும் அடைய முடியும்,

#வீரையடியப்பா_வலியுள்ளாஹ் .

குறித்த இடத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலும், சியாறமும் மிகவும் புராதனமானவை, இங்கு அடங்கப்பட்டுள்ள பெரியார் “வீரையடியப்பா வலியுள்ளாஹ்” என அழைக்கப்பட்டாலும், சாதாரண மக்கள் “கொண்டவட்டுவான் சியாறத்தப்பா ” என அழைக்கின்றனர், இங்குள்ள பள்ளியும் ,சியாறமும் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்றது, ..

#வரலாற்று_அமைவிடம்

புராதன இலங்கையில் கிழக்கு மாகாணத்தை கண்டி இராசதானியுடன் இணைப்பதற்கான 05 பிரதான பாதைகள் காணப்பட்டன, அதில் முக்கியமான பாதையாக இக்கொண்டவட்டுவான் பாதை காணப்பட்டுள்ளது, அத்துடன் முஸ்லிம்கள் தமது மாட்டு வழிப் போக்குவரத்து வியாபாரமான “தவளம” வியாபார முறையை மேற்கொண்ட பாதைக்கான அடையாளத்தின் வழியாகவும் இந்த சியாறமும், பழைய பிபிலை வீதியும் எஞ்சி உள்ளன,,இந்த வழிப்பாதையில் பயணித்த, உள்நாட்டு, வெளிநாட்டு வியாபார பயணிகளுக்கான பல ஒத்முழைப்புக்களை வழங்கி, அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தவராகவும், வீரையடியப்பா,இருந்துள்ளார்,

#முக்கியத்துவம்

குறித்த சியாறமும், அதனை அண்டியுள்ள பாதை, மற்றும் அடையாளங்களும், கிழக்கு முஸ்லிம்களின் புராதன நிரந்தர வாழிடம், இடப்பெயர்வு, ஊவா பிரதேசத்தில் உள்ள, கொட்டப்பாவ, வெல்லஸ்ஸ போன்ற இடங்களில் இருந்து, வந்ததற்கான ஆதார வழித்தடமாக உள்ளது, அதன்படி இப்பிரதேசத்தில் உள்ள “வடிச்சல், கணங்காடு, போன்ற இடங்களில் 20 க்கு மேற்பட்ட முஸ்லிம் குடுபம்பங்கள் நிரந்தரமாக வாழ்ந்து வந்துள்ளனர், அதற்கு இந்த சியாறம் முக்கிய அடிப்படையாக இருந்துள்ளது,

அதே போல் இன்றைய கணிப்பீட்டில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 375 ஏக்கர் நெற்காணி, முஸ்லிம்களுக்கு சொந்தமாவதற்கும் இச் சியாறமும், அதனைச் சூழ்ந்திருந்த குடியிருப்புக்களும், மக்கள் நடமாட்டமுமே, காரணமாக அமைந்திருக்கின்றன,

#வரலாற்று_ஆதாரங்கள்

குறித்த சியாறத்தில் உள்ள பெரியார் ,வெளிநாட்டைச் சேர்ந்த அறாபிய, பாரசீகப் பின்னணியைக் கொண்டவராகக் கருதப்பட்டாலும், 1857 ம் ஆண்டு இந்த பிரதேசத்திற்கான கிராம அதிகாரியாக, மீராலெப்பை ஹுஸைன் என்பவர் கடமையாற்றி இருப்பதும், பள்ளிக்கு அருகில் உள்ள மேட்டு நிலம் இன்றும், ” ஊர்ப்பிட்டி ” என இன்றும் அழைக்கப்படுவதும், வயதான பலரின் பிறப்புச் சான்றிதழ்களில் பிறந்த இடம் “கொண்டவட்டுவான்” என குறிப்பிடப்பட்டிருப்பதும், முக்கிய ஆதாரங்கள் என வரலாற்று எழுத்தாளர் றாசிக் அவர்கள் குறிப்பிடுகின்றார்,

#பறிக்கப்பட்ட_ஊர்கள் ..

கொண்டவட்டுவானும், அதில் மக்கள் குடியிருந்த ஊர்ப்பிட்டி, வடிச்சல், கணங்காடு, என்பன புராதன முஸ்லிம் குடியிருப்பாக இருந்திருக்கின்றன, அதற்கான “மைய அமைவிடமாக வீரையடியப்பா சியாறம் ” அமைந்திருக்கின்றது, 1929ம் ஆண்டு, நம்பிக்கையாளர் சபைத் தலைவராக இருந்த செய்லான் மரைக்கார் என்பவரால், சியாறமும், பள்ளியும் நிந்தர கட்டிடத்தை பெற்றன,

அதே போல 1949 ம் ஆண்டைய கல்லோயாத் திட்டத்தினால் ஏற்பட்ட சிங்களக் குடியேற்றம், போன்றவற்றாலும், முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பின்மை காரணமாகவும், மக்கள் படிப்படியாக வெளியேறத் தொடங்கினர், 1953 ம் ஆண்டு முற்றாக வெளியேற்றப்பட்டனர், அதன் பின்னர் யாரும் குடியேற்றப்படவில்லை,

#தொல்லியல்_அடையாளம்.

வாழ்ந்த மக்களும், அவர்களது வாழிடங்களும் இல்லாமலாக்கப்பட்டாலும், முஸ்லிம்களின் நீண்ட வரலாறு என்பனவற்றின் ஒரே அடையாளமாக இன்றும் இருப்பது, குறித்த சியாறமாகும், சிங்கள, மற்றும் ஏனைய இன மக்களும் குறித்த சியாறத்திற்கு மதிப்பளித்ததன் காரணமாக, அவ்விடம் அழிக்கப்படவில்லை, மக்கள் கொண்டுவட்டுவானில் வாழ்ந்தற்கான ஒரே தொல்லியல் சாட்சியாக இன்றும் இருப்பது குறித்த சியாறமே ஆகும்,

அத்துடன் பௌத்த தொல்லியல் அடையாளமான, ” பௌராணிக நடவுன”என்ற தொல்லியல் சிதைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இச் சியாறமும், ஏனைய பிரதேசங்களும் முஸ்லிம்களால் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும்,

#இன_உறவுப்_பாரம்பரியம்

குறித்த சியாறத்தில், வருடத்தில் ஒரு முறை கொடியேற்றப்பட்டு, பைத்துக்கள், மற்றும் மௌலூதுகள் பாடப்பட்டு கந்தூரி அன்னதான. நடைமுறை நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளது, அது சிதைந்து போன சிங்கள – முஸ்லிம் உறவைப் புதுப்பிப்பதற்கான வழியாகவும், குறித்த பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கான உளவியல் பாதுகாப்பாகவும் கருதப்பட்டது, ஆனால் பிற்காலத்தில் இது சமய தீவிரவாதப் போக்குடையோரால் நிறுத்தப்பட்ட மை இன உறவில் ஏற்பட்ட துரதிஸ்டம் எனலாம்,

#சிங்கள_மன்னர்_கால_உறவின் #அடையாளம்.

குறித்த கொண்டுவட்டுவான் சியாறம் அமைந்துள்ள பிரதேசத்தில் 5 அடி உயரமான “விலாசக்கல்,அல்லது எழுத்துக்கள் ” என்ற ஒரு பாளி மொழியிலான சிலாசனம் அனுராதபுர மனனான 5ம் காசியப்பனின் மகனான “4ம் தப்புள” (939-940) மன்னனால் அமைக்கப்பட்டது, இதில் இப்பிரதேசத்துது ஊர்களான, இறக்காமம், வரிப்பத்தான் சேனை, திகாமடுல்ல, போன்ற பிரதேசங்களின், நில விபரம், நீர்ப்பாசனம், போன்றன தொடர்பான விபரங்களஉம், வரிகள், போக்குவரத்து, போன்ற பல அடங்கி உள்ளதாக அறியப்படுகின்றது, குறித்த கல்தொடர்பாக பள்ளிவாசலின் உறுதியில் ஒரு சில விபரங்கள் உள்ள அதே வேளை, அக்கல் அம்பாறைக் கச்சேரியின் வரவேற்பு மண்டபத்தில் நடப்பட்டிருந்தது, கொன்றை அடையாளத்தைக் கொண்ட அக்கல்லினாலேயே இவ்வூர் கொன்றை வெட்டுவான், என்றும் பின்னர் கொண்டவெட்டுவான் என மருவியதாகவும் வரலாற்று ஆர்வலர்கள், நம்புகின்றனர்.

குறித்த விலாசக்கல்லும் அதிலுள்ள , ஏனைய விபரங்களும் ஆய்வாளர்களால் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டியது, இலங்கை முஸ்லிம் இருப்பியல் வரலாற்றில் பல திருப்பு முனைகளைக் கொண்டு வரலாம்.

#இன்றைய_நிலையும், #சம்மாந்துறை_பள்ளி_நிர்வாகத்தின்_கடப்பாடும்

கிழக்கு முஸ்லிம் இருப்பின் முக்கிய தொல்லியல் அடையாளமாக மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம் அறபுத் தொடர்பின் ஆதாரமாகவும் இருக்கும் வீரையடி அப்பா சியாறமும், அதன் வருடாந்த நிகழ்வுகளும் தூர்ந்து செல்லும் நிலையிலேயே இன்று உள்ளது, இது தொடர்பாக, அரசியல் ,மற்றும் சமூகத்தலைவர்களின் பராமரிப்பும், கவனமும் போதாது என்பதே ஆர்வமுள்ளவர்களின் கணிப்பு, சம்மாந்துறைப் பள்ளிவாசல்களின் சம்மேளனம், இது தொடர்பில் அதிக கவனமெடுப்பதும், குறித்த இடத்தை உயிர்ப்பிப்பதும் இலங்கை முஸ்லிம் வரலாற்று இருப்பிற்குச் செய்யும் மிகப் பெரிய உதவியாக அமையும்,

#கேர்ணல், #மீராசாஹிபும்,#அமைச்சர்_அன்வர்_இஸ்மாயிலும்

கேர்னல் மீராசாஹிபு அவர்கள் கொண்டுவட்டுவான் இராணுவ முகாமில் பொறுப்பாக இருந்த காலப்பகுதியில், சியாறத்தையும், பள்ளியையும் பல வழிகளி்ல் இராணுவம், மற்றும் பொது மக்களின் உதவியுடன் மறு சீரமைத்ததாக இப்பிரதேச விவசாயிகள் குறிப்பிடுகின்றனர், அதேபோல் மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் அவர்கள் பொதுமக்களுக்கான தங்குமிடத்தை அங்கு அமைத்ததாகவும், இந்த தொல்லியல் ஆதார பூர்வமான இடத்தின் பெறுமானத்தை அவர் உணர்ந்து செயற்பட்டதாகவும், அதன்பின்னர் வந்த தலைவர்கள், மற்றும், அரசியல்வாதிகள் அதில் பாராமுகமாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

#எதிர்கால_ஆபத்து..

குறித்த சியாறமும், அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களை முஸ்லிம்கள் சமயக்கண்ணால் மட்டும் பார்த்து கை விட்டதும், அவ்விடத்தை விவசாயிகளுக்கான ஆறுதல் பெறும் இடமாக மட்டும் நினைப்பதும், இன்று பல பிரச்சினைகளைக் கொண்டுவந்துள்ளது, தொல்லியல் திணைக்களம், வன விலங்குத் திணைக்களம் என்பன பல காரணங்களினால், குறித்த பிரதேசத்தில் உள்ள ஒரு சில ஏக்கர் காணிகளைச் சுவி கரித்துள்ளன, அதன் அளவு இன்னும் அதிகரிக்கலாம், அவ்வாறு அதிகரிக்குமாயின், குறித்த இடத்தில் உள்ள நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளை இழக்கும் ஆபத்து வரலாம், எனவே குறித்த தொல்லியல் அடையாளமான சியாறத்தின் பராமரிப்பில் இன்னும் அதுக கவனம் கொள்ள வேண்டி உள்ளது,

எவர் எவ்வாறு நோக்கினாலும்,ஒரு சமய அடையாளமாகவும், புராதன அடையாளமாகவும் இருந்து குறித்த சியாறமும், அதில் அடங்கி உள்ள வீரையடியப்பாவுமே குறித்த விளை நிலங்களில் காவல் அடையாளமாக இன்றும் உள்ளனர்என்பதே சாதாரண விவசாயிகள் நம்பும் உளவியல் உண்மை

#நாம்_செய்ய_வேண்டியது_என்ன??

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள தொல்லியல் போர் நிச்சயமாக முஸ்லிம்களின் விளை நிலங்களையும், புராதன வாழிடங்களையும் பறிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு, அந்த நிலையில் இவ்வாறான புராதன சியாறங்களையும், அதனோடிணைந்த நிகழ்வுகளையும் தொடர்ச்சியாக பராமரிக்கவும், பாதுகாக்கவும் வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது, இனியாவது, சமய ,இயக்கவாத ,அரசியல் வட்டங்களைத் தகர்த்து முஸ்லிம்களின் பூர்வீக இடங்களான சியாறங்களையும், பள்ளிவாசல்களையும், நிகழ்வுகளையும் பாதுகாத்து எமது பூர்வீகத்தை நிரூபிப்பதுடன், எமது எதிர்கால சந்த்திக்கான வாழ்விடங்களைப் பாதுகாக்க முன்வருவது அனைவரது கடமை மட்டுமல்ல மிகவும் அவசரமானதும், அவசியமானதுமாகும்.

முபிஸால் அபூபக்கர்
முதுநிலை விரிவுரையாளர்
மெய்யியல் துறை
பேராதனை பல்கலைக்கழகம்
04:06:2020

(மேலதிக தகவல்கள்,மற்றும்,ஆக்கபூர்வமான கருதுக்கள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றன)

FB_IMG_1591285266124

Web Design by The Design Lanka