நாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை; » Sri Lanka Muslim

நாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை;

FB_IMG_1591335592457

Contributors
author image

ஊடகப்பிரிவு

நாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை; பின்னர், தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு:

வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி – அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னரேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நான் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

விமான நிலையத்தில் – குடிவரவு நடைமுறைகளுக்கு அவர்கள் உட்பட முன்னர், பரிசோதித்து, பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, தனியான ஒர் இடத்திற்கு அனுப்பி அவர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்துகொடுக்குமாறும் நான் குறிப்பிட்டேன்.

கொவிட் 19 ஒழிப்பு சிறப்பு செயலணி மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த பணிப்புரையை நான் விடுத்தேன்.

வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக மத்திய கிழக்கில் இருந்து, நாட்டுக்குள் வருவோர்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்தும் போதும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் போதும், முகம்கொடுக்கவேண்டியுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான வழிகள் குறித்து நேற்றைய கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது.

PCR முடிவுகளைப் பெற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதற்கு விமான நிலைய வளாகத்திலேயே பரிசோதனைக் கூடம் ஒன்றை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

நோய்த்தொற்று நீண்ட காலம் இருக்க முடியும் என்பதால், தொடர்ந்தும் விமான நிலைய வளாகத்தில் பரிசோதனைக் கூடம் ஒன்று செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நான் சுட்டிக்காட்டினேன்.

வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை – அந்தந்த நாடுகளிலேயே பரிசோதனைக்கு உட்படுத்துதல், அதனை அரசாங்கத்தின் நேரடி தலையீட்டுடன் அல்லது குறித்த நாடுகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை கண்டறியவும் நேற்று தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு முன்கூட்டியே நோய்த்தொற்றுடையவர்களை கண்டறிவதன் மூலம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பும் போதும் தனிமைப்படுத்தலின் போதும் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை குறைக்க முடியும் என்பதனையும் நான் சுட்டிக்காட்டினேன்.

தாய்நாட்டுக்கு வருகைதர எதிர்பார்த்துள்ள அனைவருக்கும் கூடிய விரைவில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் நான் தெரிவித்தேன்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ முனசிங்க ஆகியோரும், முப்படை தளபதிகள், பதில் காவற்துறை மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட செயலணி உறுப்பினர்களும் விசேட வைத்திய நிபுணர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Web Design by The Design Lanka