ஊவா மாகாண வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக வள நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார் » Sri Lanka Muslim

ஊவா மாகாண வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக வள நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

maith

Contributors
author image

Presidential Media Division

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கும் மனக்குறைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்புவாய்ந்த சகல நிறுவனங்களும் தமது கடமைகளை புரிந்துணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் நிறைவேற்றவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பணியாளர்கள் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதுடன் அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளும் திட்டங்களும் முறையாக அமுல்படுத்தப்படுவதற்கு அந்நிறுவனங்களில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் இன்றியமையாதவையாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஊவா மாகாண வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக வள நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (08) பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்து மாடிகளை உடைய சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக வள நிலையத்திற்கான செலவு ரூபா 540 மில்லியன்களாகும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியாளர்களைப் பயிற்றுவித்தல், நலன்புரி சேவைகளைப் பெற்றுக்கொடுத்தல், வெளிநாட்டுப் பணியாளர்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளை இங்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், நாட்டிற்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு நலன்புரி சேவைகளை வழங்குவதும் சிறந்த மனநிலையுடன் அவர்கள் பணிபுரிவதற்கு தேவையான சூழலை உருவாக்கிக் கொடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று தெரிவித்தார்.

இதன்பொருட்டு தற்போதைய அரசாங்கத்தினாலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன்புரி தேவைகளை நிறைவேற்றும் சகல நிறுவனங்களும் தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றும் அதேவேளை மனிதாபிமானத்தை மதித்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ, இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் செனெவிரத்ன, பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஊவா மாகாண ஆளுநர் ஆரிய பீ. ரெக்கவ, முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொதுமுகாமையாளர் கே.ஓ.டீ.டீ. பெர்னாண்டோ உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

Web Design by The Design Lanka